::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

சென்னையில் மர்ம ஆசாமி ஓட்டிய ரயில் -சரக்கு ரயில் மோதல்: 7 பேர் பலி

29-train.jpgசென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை ஒரு மர்ம நபர் இயக்கினார். அந்த ரயில் வியாசர்பாடி அருகே நின்று கொண்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் ரயில் மீது மோதியதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் 7 பேர் பயணிகள் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பயணிகள் ரயிலை இயக்கிய நபரும் பலியானார்.

சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. ஆனால், 4.50 மணியளவி்ல் ரயிலின் டிரைவர் அதில் ஏறும் முன்பே திடீரென அந்த ரயில் கிளம்பியது. அப்போது அந்த ரயிலில் 20 பயணிகளே இருந்தனர். இதைக் கண்ட பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் டிரைவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வேகமாகச் சென்ற அந்த ரயில் சென்ட்ரலை அடுத்த பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.

இதையடுத்து அந்த ரயில் படுவேகத்தில் 5.00 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது தண்டையார்பேட்டையில் பெட்ரோலியம் நிரப்புவதற்காக டேங்கர் சரக்கு ரயில் ஒன்று லூப்லைனில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

எதிர் திசையில் பயங்கர வேகத்தில் ரயில் வருவதை பார்த்த சரக்கு ரயிலின் டிரைவர் ஆறுமுகம், உதவி டிரைவர் பிரதாப், கார்டு கில்பர்ட் ஆகியோர் ரயிலிலிருந்து குதித்து ஓடினர். அவர் ஓடிக் கொண்டிருந்தபோதே டேங்கர் ரயில் மீது பயங்கர வேகத்தில் பயணிகள் ரயில் மோதியது. இதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டதோடு தடம் புரண்டன. மோதிய வேகத்தில் மின்சார ஒயர்கள் அறுந்து அந்தப் பகுதியில் மின்சாரமும் தடைபட்டது.

பயணிகள் ரயிலை இயக்கியது ரயில்வே என்ஜின் டிரைவரோ, ரயில்வே மெக்கனிகல் ஷெட் ஊழியரோ இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த ரயிலை இயக்கிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் தீவிரவாதியா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது

ராமதாஸ், வைகோவுக்கு ஈழத்தமிழர்கள் முக்கியமல்ல:திருமாவளவன்

thirmavala.jpgஈழத் தமிழர்கள் மீதான அக்கறையைவிட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் மற்றும் வைகோவுக்கு முக்கியம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி டாக்டர் ராமதாஸ் என்னை அதிமுக அணிக்கு அழைத்தபோது, ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்தான் ஜெயலலிதா.

எனவே ஒருபோதும் அதிமுக அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி அந்த அணிக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் நலனில் உள்ள அக்கறையைவிட இந்தத் தேர்தலில் திமுகவை தோல்வியடைய செய்வதுதான் முக்கியமாக உள்ளது என்றார்.

ஈழத்தமிழர்களுக்காக கோவை இளைஞர்கள் 2009 கி.மீ. சைக்கிள் பயணம்

கோவை மாவட்டம், காரமடை, மருதூரை சேர்ந்த அமர்நாத் செல்வம், பரமானந்தம் ஆகிய இருவரும் இலங்கை தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைத்தனர். தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து, இதை நிறைவேற்ற முடிவு செய்தனர். இருவருக்கும் தேவையான உதவிகளை செய்ய, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன் வந்தது. கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை உறுப்பினர்கள் இவர்களது பயணத்தை செஞ்சிலுவை சங்கம் முன் துவக்கி வைத்தனர்.

மணிக்கு 20 கி.மீ., வேகத்தில், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பயணம் செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். இதன்படி, கோவையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். மதுரையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்கின்றனர். ஏப்., 30ல், கன்னியாகுமரியிலிருந்து, திருச்செந்தூர் வழியாக, தூத்துக்குடி செல்கின்றனர்.

மே 1ல், தூத்துக்குடி, மதுரை வழியாக, திருச்சி செல்கின்றனர். அடுத்த நாள், திருச்சியிலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். மே 3ல், நாகையிலிருந்து புதுச்சேரிக்கும், மே 4ல், அங்கிருந்து சென்னைக்கும் செல்கின்றனர்.

மே 5ல், சென்னையிலிருந்து வேலூர் சென்று, அடுத்த நாள், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக, சேலம் செல்கின்றனர். மே7ல், சேலத்திலிருந்து ஈரோடு, திருப்பூர், அவினாசி, மேட்டுப்பாளையம், காரமடை வழியாக, கோவை செஞ்சிலுவை சங்கம் வரை வந்து 2009 கி.மீ., பயணத்தை முடிக்கின்றனர்.

தன்னையும், தமிழக மக்களையும் ஏமாற்றுகிறார் கருணாநிதி:நெடுமாறன்

nedumaran1.jpgஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தன்னையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி வருகின்றார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.   இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது தனது உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாநிலை இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதனையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் சரண் அடைய வேண்டும்: ப.சிதம்பரம்

chidambaram1.jpg
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சரண் அடைய வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனி, இலங்கை ராணுவத்தினர், பாதிக்கப்பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் பணியிலும், அவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசு கூறி இருக்கிறது. இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் இருப்பவர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைய வேண்டும். நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

பிரபாகரன் பிடிபட்டால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. முதலில் அவர் சரண் அடைய முன்வரட்டும். நான் எதையும் ஊகித்து கொண்டு கூற முடியாது. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற தகவலை சிலர் பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இந்தியா அவ்வாறு நடக்க வில்லை என்றார்.

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை – 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டி

advani.jpgஇந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதுடன் 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலின்; 3ம் கட்டத்துக்கான பிரசார நடவடிக்கைகள்  நேற்று மாலையுடன் முடிவடைந்தன. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. இந்திய பொதுத் தேர்தல் 5 கட்டமாக் நடக்கிறது. கடந்த 16ந் தேதி முதல்கட்ட தேர்தல் 124 தொகுதிகளிலும் 23ந் தேதி 2ம் கட்ட தேர்தல் 141 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. 3ம் கட்டமாக 107 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. 3ம் கட்ட தேர்தல் நடைபெறும் 107 தொகுதிகளில் மொத்தம் 1567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இவர்களில் 101 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

107 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 14 கோடியே 40 லட்சத்து 2 ஆயிரத்து 265 பேர் ஆவர். 

லண்டன் தாக்குதல் சந்தேக நபர்கள் 3 பேர் விடுதலை

julyassist_met_comp.jpgலண்டன் நகரின் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை, நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை அக் குற்றச்சாட்டில் இருந்து பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று விடுவித்துவிட்டது. லண்டன் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இளவயது பிரிட்டிஷ் முஸ்லீம்களுக்காக லண்டன் நகரில் உளவு பார்த்ததாக வாஹீத் அலி, சாதீர் சலீம் மற்றும் முகமது ஷகீல் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால் தாங்கள் லண்டனில் உள்ள சுற்றுலா இடங்களைப் பார்க்கவே வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறினர்.

வெடி குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்துள்ள ஜூரிகள், வாகீத் அலி மற்றும் முகமது ஷகீல் ஆகிய இருவர் மீதும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாமுக்கு செல்லத் திட்டமிட்டது தொடர்பாக குற்றம் கண்டுள்ளனர்.

பிரச்சாரம் ஓய்ந்தது

advani.jpgமக்களவை தேர்தலில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 107 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. 

ஈழம் தமிழர்களின் அன்னை பூமி – அங்கு தனி ஈழத்தை அமைத்தே தீருவேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமானதல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதே தேச விரோதமாகிவிடுமா என்று காங்கிரஸ் கட்சியைக் கேட்கிறார் அதிமுக தலைவர் ஜெயலலிதா.

 “வாழ வழியின்றித் தவிக்கும் தமிழர்கள் இலங்கையிலேயே கெüரவமாக வாழ, வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதுதான் இனி ஒரே வழி” என்று ஜெயலலிதா பேசியிருந்தார். அது சட்ட விரோதம் என்று மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தில்லியில் கண்டித்திருக்கிறார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

 “இந்தியாவிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி நாடு தாருங்கள் என்று நான் கேட்கவில்லை; இந்த நாட்டின் மீது அளவில்லாத பற்றும் பாசமும் உள்ளவள் நான். இலங்கையில் சம உரிமைகள் மறுக்கப்பட்ட, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் தமிழ் மக்கள் வாழ தனி ஈழம் வேண்டும் என்று கோருகிறேன். இலங்கையிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எப்படி தேச விரோதச் செயலாகிவிடும்?

 விடுதலைப் போருக்கான போராட்டம் என்று கூறி பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும் அதைக் கண்டித்து வருகிறேன்; தீவிரவாதத்தை நான் எப்போதுமே ஆதரித்ததில்லை. அதே சமயம், அரசின் அடக்குமுறையால் மக்களில் கணிசமானவர்கள் பாதிக்கப்படுவதையும் என்னால் கண்டிக்காமல் இருக்க முடியாது.

 இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்கள் கட்டுக்காவல் மிகுந்த சிறைச்சாலைகளைவிட மோசமான நிலையில் இருக்கின்றன. அங்குள்ளவர்கள் வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதபடி கண்காணிப்பு நிலவுகிறது. குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து அவர்களைத் தொடர்பு கொள்ளவும் வழி இல்லாமல், அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லாத நிலையில் தமிழர்கள் விலங்குகளைப்போல நடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்ட முகாம்களுக்குப் போக வேண்டாம் என்ற உறுதியோடு வெட்ட வெளியில் தங்குகிறவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

 இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும், தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகள் தனியே பிரித்து அடையாளம் காணப்பட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களைப் போலவே அனைத்து உரிமைகளும் சமமாக வழங்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதை ஏற்க முடியாது என்கிறது இலங்கை அரசு. அப்படிப்பட்ட நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி ஈழம் கேட்பது தவறா?

 தமிழர்கள் மட்டும் அல்ல, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற மேலை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் போரை நிறுத்திவிட்டு அரசியல் தீர்வுகாண பேச்சு நடத்துங்கள் என்று விடுத்த வேண்டுகோளையும் மதிக்க முடியாது என்று மறுக்கிறது இலங்கை அரசு. இந்த நிலையில் தமிழர்கள் மானத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ ஒரே வழி தமிழ் ஈழம்தான்.

 லட்சக்கணக்கான தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் தரும் ஒரு கோரிக்கை எப்படி இந்திய சட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும்? இதை எப்படி சட்ட விரோதமான பேச்சு என்று காங்கிரஸ்காரர்கள் கண்டிக்கிறார்கள்?’ என்று வினவுகிறார் ஜெயலலிதா.

திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரமாண்டமாக திரண்டிருந்த கூட்டங்களில் அவர் பேசினார். திருப்பூரில் அவர் பேசியதாவது..

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய ராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார். என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.எல்லாவற்றையும் செய்தது இந்தியாதான்…

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இந்திய ராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய ராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்தது.

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை ராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை ராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை ராணுவம் இந்திய ராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய ராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.

பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் ராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் ராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?. இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே! எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது கோத்தபாய கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

ஈழம் தமிழர்களின் உரிமை பூமி – அன்னை பூமி…

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான கபில் சிபல், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார். நான் சொன்னது எப்படி தேச விரோத கருத்து..

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது.

கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்து விட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் ஜெயலலிதா

பர்மா மீதான ஐரோப்பிய தண்டனைத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

ஆங்சான் சூச்சிக்கு ஆதரவாக பர்மியர்களும் சர்வதேச சமூகத்தினரும் குரல்கொடுத்துவருகின்றனர் பர்மாவுக்கு எதிரான தண்டனைத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஒரு ஆண்டு நீடித்திருக்கிறது.

பர்மாவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவி ஆங்க் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

2006ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த தடைகளை, ஜனநாயகம் தொடர்பில் பர்மாவின் ராணுவ அரசாங்கம் முன்னேற்றத்தை காட்டினால், இந்த தடைகள் தொடர்பில் தாங்கள் மீள்பரிசீலனை செய்யத்தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள தடைகளின்படி, பர்மாவின் மூத்த அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும், பர்மாவுக்கு ஆயுதங்கள் அளிப்பதற்கும், பர்மாவின் தேக்கு, கனிமப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரண கற்கள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.