ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஈ.பி.டி.பி. முடிவு செய்துள்ளது. இதனை விளக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.
மக்கள் நலன் சார்ந்த 10 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், அவைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினார். அதேநேரம் 10 அம்சங்களையும் நிறைவேற்றுவதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளாரெனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் தேவானந்தா, வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அரசியல் தீர்வும் வெளிப்படும் எனக் கூறினார்.
13 வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜனாதிபதியில் நம்பிக்கை வைத்துச் செயற்படுகிறோம். அரசியல் தீர்வு வெளிப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்ற தேர்தல் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அதன் பின்னர்தான் வடக்கில் அரசியல் தலைமைத்துவம் இல்லையென்ற குறை போக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஓர் அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்திருப்பதால் அதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நடைமுறை சாத்தியமான வழிமுறை யிலான பத்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தியிருப்பதானது எமது மக்களின் அரசியல் இலக்கை எட்டுவதற்கான சூழலை நிச்சயம் உருவாக்கியே தீரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அந்த பத்து அம்ச கோரிக்கைகளுள் பிரதானமானவை வருமாறு:
1. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக 13 வது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக கூடுதல் அதிகாரங்களைப் பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுதல்.
2. தமிழர்கள் இலங்கையர்களாகவும் அதேவேளையில் தமிழர்களாகவும் இருப்பதற்கான அவர்களது விருப்பங்களை உறுதிப்படுத்துதல்.
3. இலங்கையர் என்ற நிலையான சமத்துவ உணர்வையும் இனக்குழுமம் என்ற அடிப்படையான பண்பாட்டையும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்தையும் பேணுதல்.
4. வன்னிப்பகுதியில் இருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளுக்கான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தல்.
5. கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன்முறைகள் அற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல்.
6. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போல் ஏ-9 பாதை உட்பட ஏனைய போக்குவரத்திலும் தடைகளற்ற பயணத்தை உறுதிப்படுத்துதல்.