செய்திகள்

செய்திகள்

செய்திகள்

குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை – மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மார்க்

சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றவர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் கிராமத்திலுள்ள ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மார்க்; இக்கிராமத்தின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டப்பட்டு காணாமற்போயுள்ளது.

இதையடுத்து இக்கிராமத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பொறுமை கார்த்தது போன்று பொதுமக்கள் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்றார்.

இதேவேளை, ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேர்திவத்த தெரிவித்தார்.

கடந்த 10.02.2010 புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது விடயத்தில் இன்னும் சில சந்தேகநபர்களை கைது செய்யவேண்டியுள்ளதாகவும் அச்சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள அரச வங்கி ஆவணங்களை இழந்தோருக்கு நிவாரணம் – மத்திய வங்கி ஆளுநர் நடவடிக்கை.

ajith-sri_lanka.jpgவன்னி யிலுள்ள அரச வங்கிகளில் பணமாகவும் நகையாகவும் சொத்துக்களை வைப்புச் செய்து அதுதொடர்பான ஆவணங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இயங்கிய இலங்கை வங்கி மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் கிளைகளில் வன்னிமக்கள் தமது பணத்தினை வைப்புச் செய்திருந்ததுடன் தமது நகைகளை அடைவுவைத்து கடனும் பெற்றிருந்தனர்.

ஆயினும் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக வங்கிகள் சேதமடைந்ததுடன் பெருமளவு ஆவணங்களும் அழிவடைந்துள்ளன. தமது வைப்பு தொடர்பான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாகவே அவர்களது வைப்புக்களை அல்லது அதன் பெறுமதியை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் தமது ஆவணங்களை தொலைத்தவர்கள் தொடர்பாக மத்திய வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் விரைவில் ஓர் சாதகமான அறிவிப்பினை விடுக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார

அத். பொருட்களின் விலைக் கட்டுப்பாடு; தேவைகள்;

மாவட்டங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு மற்றும் உணவுத் தேவைகள், உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ங்களிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங் களினதும் உணவுத் தேவை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட் களின் தொகை அத்துடன் உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இக்கூட்டம் நேற்றும் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சனத் தொகைக்கு ஏற்றவாறு உண வைக் கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும், மேலதிக உணவை பற்றாக்குறை நிலவும் மாவட்ட த்திற்கு பகிர்ந்தளிப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலக அறிக்கை

ranilmahinda.jpgஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதால் தம்மால் உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாதுள்ளதால் விசாரணைகள் முடிவுற்றதும் இராணுவத்தளபதி அவரை விடுதலை செய்வது குறித்து தீர்மானிப்பார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜெனரல் சரத்பொன்சேகா கைது தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்ததும் அதன் பிரகாரம் செயற்பட முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தற்போது ஜெனரல் பொன்சேகா தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை இராணுவம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த விசாரணைகள் முடிவுற்றதும் இராணுவத் தளபதியால் சரத்பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தார்.

அத்துடன் இந்தக் கைது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அது குறித்த தீர்ப்பு வெளியானதும் அதனடிப்படையில் செயற்பட முடியுமெனவும் ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதேவேளை, சரத்பொன்சேகாவை சந்தித்து பேசுவதற்கு விசேட அனுமதியைப் பெற்றுத்தருமாறு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.இக்கோரிக்கை தொடர்பில் தாம் கூடிய கவனமெடுத்து பரிசீலித்து பதிலளிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் 25 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு; விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை 25 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் பலர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் இதனையிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக டெங்குக் காய்ச்சலை பரப்பப் கூடிய நுளம்புகள் பெருக்கமடையும் இடங்களை பொதுமக்கள் சிரமதானம் மூலமாக துப்புரவு செய்யுமாறும் வீடுகளில் காணப்படும் டயர், சிரட்டை, தகரடப்பா, குரும்பை மட்டை போன்ற நீர் தேங்கியிருக்கக் கூடிய பொருட்களை வீட்டின் சுற்றுப் புறச் சூழலிலிருந்து அகற்றி புதைத்து விடுமாறு அல்லது எரித்து விடுமாறு கேட்டுள்ளனர்.

இதேவேளை சம்மாந்துறைப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் காணப்படும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இது வரையும் புகை விசுறும் நடவடிக்கையினை மேற்கொள்ள வில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு

police_logo.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் தேர்தல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 488 பொலிஸ் நிலையங்களிலும் இந்தப் பிரிவு அமைக்கப்படுகிறது. அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,  பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை உள்ளடக்கிய 75 தேர்தல் நடவடிக்கை அலுவலகங்களும் இயங்கும் என குறிப்பிட்டார்

அத்துடன் பொலிஸ் நிலைய மட்டத்தில தேர்தல் முறைப்பாட்டுக்கென; 413 விசேட பிரிவுகளும் நிறுவப்படவுள்ளது.  மூன்று மட்டத்தில் நிறுவப்படும் விசேட கண்காணிப்பு நிலையத்தின் பணிகள் யாவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம், மாவட்ட பொலிஸ் அலுவலகம், பிரதேச பொலிஸ் நிலையம் என்ற மட்டத்தில் பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

சத்துணவு நஞ்சாகியதில் 10 வயது மாணவி மரணம் – மேலும் 62 மாணவர் ஆஸ்பத்திரியில்

சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலண்டன் இலங்கை வங்கியை உலகக் கிளைகளின் மேற்பார்வை வங்கியாக மாற்ற நடவடிக்கை

london.jpgஇலண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்’ என்ற பெயரில் இலண்டனில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியே உலக நாடுகளில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளை நிர்வாக மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரி வித்த கலாநிதி விக்கிரமசிங்க, தற்போது இலண்டனிலிருந்து இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்துவித பணப்பரிமாற்றங்களுக்கும் கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாதென்றும் குறிப்பிட்டார்.

திருமலை மாவட்டத்தில் 4 மீன்பிடி இறங்குதுறைகள்

கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நான்கு மீன்பிடி இற ங்குதுறைகளை இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் “யுனொ ப்ஸ்” அனுசரணையில் அமைக்கவுள் ளதாக கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் அண்ணல்நகர் மூதூரில் தக்வா நகர், குச்சவெளியில் சலப்பையாறு, பட்டிக்குடா ஆகிய இடங்களில் புதிய மீன்பிடி இறங் குதுறைகள் அமையப்பெறவுள்ளன. இதன் மூலம் பிரதேச மீனவர்கள் பெரிதும் நன்மையடைவர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

sarath.jpgஇராணுவப் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் சார்பில் அவரின் மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை பெப்ரவரி 23 இல் இடம்பெறுமெனத் தெரிவித்திருக்கிறது.

சித்திரவதை, பலவந்தமாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்தல் என்பனவற்றிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகள் மனுவானது நாடி நிற்கிறது.மனு மீதான விசாரணையின் ஆரம்பகட்டமான “விசாரணை செய்வதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாம் வழங்கியுள்ளதாக பொன்சேகாவின் சட்டத்தரணிகளில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டவேளை, நீதிமன்ற வளாகத்தைச் சூழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வோர் சோதனையிடப்பட்டனர். பாதிக்கப்பட்டவரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவரின் மனைவியலேயே மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாதென்று அரசாங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமர்ப்பித்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்ததுடன் பொன்சேகா சார்பல் அவரின் சட்டத்தரணிகள் முன்மொழிவுகளைச் சமர்ப்பில் அனுமதியளித்தது. நீதியரசர்கள் குழுவில் சிராணி பண்டாரநாயக்க மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவைச் சமர்ப்பித்த அவரது மனைவியான அனோமா பொன்சேகாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அகீஸ் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சிகளின் சார்பில் வழக்கினைப் பார்வையிட ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, சுனில் ஹந்துன் நெத்தி, விஜேய ஹேரத் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்; எமது அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை எமக்குக் கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும். நீதி எங்கும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.தேர்தல் முடிவுக்கு எதிரான மனுவில் ஜெனரல் சரத் பொன்சேகா கையொப்பம் இடுவதற்கு சட்டத்தரணிகள் எந்நேரத்திலும் பார்வையிட அனுமதி கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு அப்பால் சட்ட உதவி ஆணைக்குழுவுக்கு முன்னால் உள்ள சந்தியிலிருந்து வாழைத்தோட்டப் பொலிஸ் சந்திவரை சட்டத்தரணிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி அமைதிப் பேரணியை நடத்தினர். இதில் இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய சட்டத்தரணிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க, உயர் நீதிமன்றத்தின் விசாரணையைப் பார்வையிட உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கூச்சல்களை எழுப்பினர். இதையடுத்து பொலிஸாரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களும் அமைதி பேணுமாறு கோரியதையடுத்து அமைதி திரும்பியது.