செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன் – கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை

pm.jpgநாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் உலகின் சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தமது பொறுப்புகளை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையேற்றார். இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்றுக் காலை 7.30 மணி சுபவேளையில் பிரதமர் தமது பொறுப்புக்களைக் கையேற்றதுடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரிதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டி. எம். ஜயரத்ன இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலில் 60 வருட கால மக்கள் சேவையின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற உன்னதமான பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இது எனது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமென நான் கருதுகிறேன். இப்பதவியினூடாக நான் எனது மக்களுக்கு சேவை செய்வதில் பின்நிற்க மாட்டேன். ஒருபோதும் எனது சொந்தத் தேவைகளுக்கு இப்பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான சேவையின் போது நான் பல தடைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் எனது மக்கள் என்னுடனிருந்தனர். அதனால் எனது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர்கள் அவர்கள். பயம் சந்தேகமின்றி சகல இன, மத மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து செயற்படுவேன்.

ஒரேவிதமான நாணய புழக்கத்திற்கு தெற்காசியா இன்னமும் தயார் இல்லை

saarc-logo.jpgதெற்காசிய நாடுகள் யாவும் ஒரேவிதமான நாணயத்தை பாவனையில் விடுவது தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இன்னரும் உறுப்பு நாடுகள் இதற்கு ஆயத்தமான நிலையில் இல்லை என்று பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பிராந்தியத்தில் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவது தொடர்பாக ஆராய்வது முன்முதிர்ச்சியற்றது என்று சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் ஷீல் காந்த் சர்மா கூறியதாக பேர்னாமா செய்திச் சேவை நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

புதுடில்லியில் 2007 இல் சார்க்கின் 14 ஆவது உச்சிமாநாடு இடம்பெற்ற வேளை சார்க்நாடுகளின் மத்தியில் பொதுவான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் யோசனையை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலாவதாக வெளியிட்டிருந்தார். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார, அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்தத் தெற்காசிய நாடுகள் மத்தியில் தாழ்ந்த மட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதும் நிதிப்பாய்ச்சல் குறைவாக இருப்பதும் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்குரிய சாதகமான தன்மையை கொண்டிருக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றகரமான கட்டத்தை எட்டும் போதே பொதுவான நாணயம் புழக்கத்தில் விடப்படுவது வழமையான நடைமுறையாகும். எமது வழக்கங்களை உகந்தவகையில் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எமது பொருளாதாரத்தைத் தாராளவாதப் போக்கிற்கு மாற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. இத்தகைய நிலைமையிலேயே உரிய வகையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஷீல் காந்த் சர்மா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட பிரிட்டனின் “ஸ்ரேலிங்”  இன்னரும் யூரோ வலயத்திற்கு வெளியிலேயே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 கோடி மக்களைக் கொண்ட தெற்காசியாவில் நாடுகளுக்கிடையிலான வர்த்தகமானது 11 பில்லியன் டொலராகவே இருக்கின்றது

வடமராட்சி கிழக்கில் விரைவில் 4000 குடும்பங்கள் மீள் குடியேற்றம் – யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாளாயிரம் குடும்பங்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார்.

கண்ணி வெடிகள் அகற்றும் பணி இங்கு நிறைவடைந்துவிட்டதாகவும், மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் கட்டளைத் தளபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கான திகதி விரைவில் நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுமென்றும் யாழ். அரச அதிபர் கணேஷ் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை 80 ஆயிரம் பேர் மீளக் குடியம ர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர் பெரும்பாலும் மீள்குடியேற்றம் நிறைவுறும் தறுவாயை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மீளக்குடியேறுவோருக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் வீடுகளைத் திருத்திக்கொள்ளவும் ஒத்துழைப்பு நல்கப்படுகிறது.

யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்த அரசு நடவடிக்கை

computer.jpgயாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நேற்று தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஏனைய பொது நூலகங் களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தவும் மேலும் நவீன மயப்படுத்தவும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்ப டவுள்ளது என்றார்.

மனோகணேசன் – ரணில் முரண்பாடு தொடர்கின்றது

ஐ.தே.க தலைவருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித மான முடிவும் எட்டப்படவில்லையென பிரபாகணேசன் எம்.பி தெரிவித்தார்.

இதனால் இன்று (29) மாலை 5 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து முடிவெடுக்கவுள்ளதாக பிரபா கணேசன் எம்.பீ. தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்னமும் கட்சியின் தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க. தலைவரைச் சந்திக்கவில்லையெனக் கூறிய அவர், இன்றைய தினமே நேரடிச் சந்திப்பு இடம் பெறுவதாகக் கூறினார்.

நேற்று முடிவு எட்டப்படாததால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர எம்.பி. ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கிறார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – கரு ஜயசூரிய எம்.பி

unp_logo_.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம். பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.

இலங்கையில் செனட்சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது

rajitha.jpgமிக விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவி காலத்திற்கான சத்தியபிரமாணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளும் தருணத்திலேயே செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது.

அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் மாகாண சபைகளின் ஊடாக இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி அத்தியாவசியமாக்கப்படவுள்ளது.

அத்துடன் செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..

ஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘எனது நீண்ட காலக் கனவு இது’ – அமைச்சர் மேர்வின்

m-silva.jpgஊடகவி யலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-

பேனாவை கையில் எடுத்த அனைவரையும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவியலாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.

சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.

குடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் தி.மு. இன்று கடமை பொறுப்பேற்பு

dm-jayaratna.jpgஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமர் டி. எம். ஜயரத்ன இன்று தமக்கான பொறுப்புக்களைக் கையேற்கிறார். இவ் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 7.30 மணி சுபவேளையில் புதிய பிரதமர் தமது பதவிப் பொறுப்புக்களைக் கையேற்கவுள்ளார். இந்நிகழ்வில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்தது.

ஐ.தே.க..உயர்பதவிகளில் அடுத்த வாரம் பாரிய மாற்றம் செயற்குழு கூடித் தீர்மானிக்கும்

unp_logo_.jpgஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்காக கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடவிருப்பதாக தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க அப்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளில் பாரிய மாற்றம் ஏற்படலாமெனவும் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னர் கட்சித் தலைமைத்துவம் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இவ்வாரத்தில் கூடி ஆராயவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த வாரத்திலேயே கூடவிருக்கின்றது. தேர்தல் தோல்வியையடுத்து கட்சிக்குள் உருவாகி இருக்கும் நெருக்கடி நிலை வலுவடைந்திருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேற வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரத்தில் கூடவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.