செய்திகள்

செய்திகள்

செய்திகள்

திருமலை நகரசபை தலைவர் முகுந்தன் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

திருகோண மலை நகரசபைத் தலைவர் ச. கெளரிமுகுந்தன் மூன்று மாத காலத்துக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் அதற்கான கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நகரசபைத் தலைவரின் பொறுப்புக்கள் அனைத்தும் உபதலைர் க. செல்வராசாவிடம் கையளிக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சன் ஸீ: இலங்கை தமிழ் அகதிகள் கனடாவில் தரையிறக்கம்; விசாரணை ஆரம்பம் தகுந்த காரணமிருந்தால் அகதி அந்தஸ்து – கனடிய அமைச்சர்

son-k.jpgசன் ஸீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடைந்துள்ள இலங்கையர்களை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த தகவலை கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவிக் தெரிவித்துள்ளார்.

சன் ஸீ கப்பல் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்த நிலையில், அதில் பயணித்த 490 பேரின் சுகாதார நலன் குறித்த விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உரிய காரணங்களை கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையவர்கள் நாடு கடத்தப்படுவரென பொதுமக்கள் நலன்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கிடையில், கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், அவர்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் விக்டோரியா நகரத்தை வந்தடைந்த அகதிகள் நகரத்தின் அண்மையிலிருக்கும் கனடிய இராணுவ முகாம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

உடல் நலப் பரிசோதனையைத் தொடர்ந்து 9 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தவர்களில் 45 சிறுவர்களும், இரு கற்பிணிகள் உட்பட 90 பெண்களும் உள்ளனரென உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடி சோதனைகள் முடிந்தபின் இன்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வெவ்வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுவார்களெனத் தெரிய வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்களின் தடுப்பு முகாம்களில் அல்லாது தனிப்பட்ட வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்பிற்கு ஐ.தே.க கண்டனம்

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு வராற்று ஏடுகளில் கறுப்பு களங்கமாக திகழும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நீர்நிரப்பு விழா இன்று

hambantota1.jpgகடலை அண்மித்த நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் உலகின் முதலாவது துறைமுகம் என்ற பெருமையைப் பெறும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வரலாற்று நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 இற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெறுகிறது.

நாட்டின் அபிவிருத்தி வரலாற்றின் முதன்மையான செயற்றிட்டமாகக் கருதப்படும் இந்தத் துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வைக் கண்டுகளிக்க வரும் பொதுமக்கள் இன்று அதிகாலை மூன்று மணி முதல் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிகழ்வையொட்டி கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரும் வாகனங்களுக் கென விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாத்தறைக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான ஏ-2 வீதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஹெக்டயர் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்படும் இந் தத் துறைமுகத்தில் கப்பல்கள் வந்து நங்கூரமிடுவதற்கு வசதியாக 17 மீற்றர் ஆழப் படுத்தப்பட்டுள்ளது.

இதில் இன்று முதல் நாளாந்தம் ஒரு மீற்றர் உயரம் என்ற அடிப்படையில் நீர் நிரப்பப்படவுள்ளது. துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக ஆறாயிரம் வேலை வாய்ப்புகளும் மறை முகமாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.

முதற்கட்டப் பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி நிறைவுசெய்ய உத் தேசிக்கப்பட்டிருந்த போதிலும் ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாவது கப்பல் வருகை தருவதுடன் உலகின் மிகப்பெரிய கப்பல் கள் கூட இங்கு வரமுடியும். நான்கு கப்பல்களுக்குத் தேவையான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை வவுனியாவில் ஆரம்பம் – எட்டுப் பேர் நேற்று சாட்சியம்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு நேற்று சனிக் கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் குழுவின் தலை வர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் கூடியது. அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னமாகி யிருந்தனர்.

வவுனியா நகர சபை எதிர்க் கட்சித் தலைவர் ஜி.ரி. லிங்கநாதன், சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் உட்பட எட்டுப்பேர் ஆணைக்குழுவின் முன் பகிரங்கமாக சாட்சியமளித்தனர். சிலர் இரகசியமாகவும் சாட்சியமளித்தள்ளனர்.

மாவட்ட அரச அதிபரும் இங்கு பிரசன்ன மாகியிருந்தார். இனங்களுக்கிடையில் மீண்டும் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அதி கார பகிர்வே தீர்வாகும். அதனை ஏற்படுத்து வது அவசியம் எனவும் சாட்சியமளித்தவர்கள் கூறினார்கள். அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் மீதான விசாரணை துரிதப்படுத்த வேண்டுமென சாட்சியமளித்த சிலர் குறிப்பிட்டனர். இத்தகைய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததிற்காக சாட்சியமளித்த சிலர் பாராட்டுத் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனைப் பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைப்பு! மீண்டும் தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

 Police_Checkகொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதி நேற்று முன் தினம் வியாழக்கிழமை (Aug 12 2010) அதிகாலை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுள்ளனர். இதன் போது தமிழ் பொதுமக்கள் சிலருக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதங்களும் எற்பட்டுள்ளன. போர் முடிவுற்ற பின்னர் அவசரகாலச் சட்ட விதிகளிலிருந்து தமிழ்மக்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தமிழ் மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் படி கேட்பது எந்த வகையில் நியாயம் என சில படித்த தமிழர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள்  கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கொழும்பு உள்ளிட்ட தென்பகுதிகளில் இடம்பெற்றபோது பொலிஸ் பதிவு நடைமுறையும், தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பக்கள், விடுதிகள் முதலானவை அடிக்கடி சுற்றிவளைப்பு, தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“கே.பி அரசாங்கத்தால் நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ள முடியாதது” தவிகூ தலைவர் வீ ஆனந்தசங்கரி

a_sangary.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பும். அவரை நடத்தி வருகின்ற முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்த மக்களும், விடுதலைப் புலி போராளிகளும் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பரிவு காட்டி வருகின்றது. 10500 இளைஞர்கள் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எமது பிள்ளைகளான அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறு” எனக் குறிப்பிட்ட அவர் அரசாங்கம் கே.பியிலும், அவரது ஆதரவாளர்களிலும் தங்கியிருப்பது குறித்தும் எச்சரிக்கை செய்தார்.

 கே.பி இலங்கையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாகவும், பாவ காரியங்களூடாகவும் சேர்க்கப்பட்டவையாகும். அப்பணத்தை அபிவிருத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் மேற்படி பாவத்தில் அரசாங்கமும் பங்கு கொள்ளக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும்,  இராணுவத்தினர் மத்தியில் வாழும் அம்மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையிலுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும் – நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆனந்தசங்கரி சாட்சியம்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.

அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் – முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள். யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.

வடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார்.

சுகவீனமுற்றுள்ள ரணிலின் தாயாரை மகிந்த ராஜபக்ச பார்வையிட்டார்.!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்று பார்வையிட்டார்.

 நோயுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்கவை நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு அவர் சுகமடைய தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதபதி வைத்தியசாலைக்குச் சென்ற போது அங்கு ரணில் விக்கரமசிங்க இருக்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

14வயது சிறுமியை பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய இருவர் கைது!

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி கட்டுகஸ்தொட்ட என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயது சிறுமியின் காதலனான இளைஞன் ஒருவனும் 38 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் இச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வல்லறவிற்குட்படுத்தினர் என விசாரணகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

பரீட்சை நிலையத்தில் செல்லிடத்தொலைபேசியைப் பயன்படுத்திய மாணவர்கள் விசாரணையில்!

தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மாத்தறையிலுள்ள பரிட்சை நிலையமொன்றில் இரு மாணவர்கள் செல்லிடத் தொலைபேசியைப் பயனபடுத்தியமைக்காக விசாரணகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் பரீட்சையில் ஏதும் மோசடி செய்வதற்காக தொலைபேசியைப் பயன்படுத்தினரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் பரிட்சைகளை பூhத்தி செய்ததும் இது குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.