செய்திகள்

செய்திகள்

செய்திகள்

காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் – அமெரிக்க ஜனாதிபதி பைடன் !

காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

 

அவர் தவறுசெய்கின்றார் என நான் கருதுகின்றேன் அவரது அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

 

காசாவிற்குள் மருந்துகள் உணவுப்பொருட்கள் முழுமையாக செல்வதற்கான அனுமதி அவசியம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

 

நெடுஞ்சாலையில் மனிதாபிமான அமைப்புகளின் வாகனங்கள் தாக்கப்பட்டமை மூர்க்கத்தனமான விடயம் என பைடன் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலியர்கள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் அடுத்த ஆறுமுதல் எட்டு மாதங்களிற்கு அனைத்து விதமான மனிதாபிமான பொருட்களையும் அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பைடன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார்- அவுஸ்திரேலியா

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார் எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேசசமூகம் தற்போது சிந்திக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கையிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை பாதுகாப்பதே நமது வெளிவிவகார கொள்கையின் முக்கியமான அம்சம் – ஜேர்மனி

இஸ்ரேலின் பாதுகாப்பே தனது வெளிவிவகார கொள்கையின் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜேர்மனி தனது கடந்த கால வரலாறே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

 

எனினும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இனப்படுகொலைக்கு உதவுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை ஜேர்மனி நிராகரித்துள்ளது.

 

ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தவேண்டும் என கோரும் வழக்கினை சர்வதேச நீதிமன்றில் நிக்கரகுவா தாக்கல் செய்துள்ளது.

 

இனப்படுகொலையை தடுப்பது சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்படுவது தொடர்பான கடப்பாடுகளை ஜேர்மனி மீறிவிட்டது எனவும் நிக்கரகுவா குற்றம்சாட்டியுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜேர்மனி சர்வதேசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

 

எங்கள் வெளிவிவகார கொள்கையில் இஸ்ரேலின் பாதுகாப்புமிக முக்கியமானதாக காணப்படுவதற்கு காரணம் எங்களின் வரலாறு என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலிற்கு ஜேர்மனி ஆயுதங்களையும் இராணுவதளபாடங்களையும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஆனால் நிக்கரகுவா அதன் அளவையும் நோக்கத்தையும் திரிபுபடுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மனி தனது கடந்தகாலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது அந்த கடந்தகாலம் மனித குலவரலாற்றில் மிகமோசமான குற்றங்களை உள்ளடக்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மனி ஒவ்வொரு நாளும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவருவதாகவும் அதிகாரியொருவர் சர்வதேச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் – இந்தியாவின் நிலைப்பாடு என்ன..?

காஸா விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார்.

காஸா விவகாரம் குறித்த விவாதம் இன்று (09) ஐ.நா. அவையில் நடைபெற்றது.

 

இதன்போது, காஸா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிய, ருச்சிரா காம்போஜ்,

 

1. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டையால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதங்களை சந்தித்துவிட்டோம். ஏராளமான உயிர்களை அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை இழந்துவிட்டோம். பொதுமக்கள் உயிரிழந்ததை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

 

2. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா தரப்பில் கோரப்படுகிறது.

3. காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது. மேலும் சீரழிவை தவிர்க்க, காஸா மக்களுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்.

 

4. பாலஸ்தீன மக்கள் தங்களுக்கான சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழ வழிசெய்யும் விதத்திலான நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்த அனைத்து உறுப்பு நாடுகளும் செயலாற்ற வேண்டும் என, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் கூறினார்.

 

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு ஒக்டோபா் மாதம் 7 ஆம் திகதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

 

 

மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

 

இதனைதொடர்ந்து, அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸா மீது இஸ்ரேலின் படையெடுப்பால் இதுவரை 32,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனா்.

 

இஸ்ரேல் – காசா போர் ஆரம்பித்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளபோதிலும், உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

 

மேலும், பசி பட்டினியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராகும் இஸ்ரேல் !

காஸாவின் தென்பிராந்திய நகரான ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் தயாராகின்றனர் என அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தென்பிராந்திய நகரான ரஃபாவில் தங்கியியுள்ளனர்.

 

காஸா தென் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

 

எனினும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இது தொட்ரபாக கூறுகையில், ரஃபா உட்பட எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தயாராகுவற்காக கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி காஸாவில் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது ஜேர்மனி – சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு!

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது.

 

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது.

 

நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

 

ஒருபுறம், பலஸ்தீன சிறார்கள், பெண்கள், ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம், அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது என நிக்கரகுவா சட்டத்தரணி டேனியல் முவெல்லர் நீதிமன்றத்தில் கூறினார்.

 

இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதற்கான ஆபத்துள்ளது என்பதை ஜேர்மனி அறிந்துள்ளது என மற்றொரு சட்டத்தரணி அலெய்ன் பெலெட் கூறினார்.

 

ஜேர்மனி சர்வதேச நீதிமன்றத்தில் நாளை தனது வாதத்தை முன்வைக்கவுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் !

காசா மீதான போர் தொடங்கி 6 மாதங்களான நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஜனநாயக சதுக்கம் என தற்போது அறியப்படும் பகுதியில் சுமார் 100,000 மக்கள் திரண்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் என்றே மக்கள் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். மட்டுமின்றி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரானது இன்றுடன் 7வது மாதத்தில் நுழைகிறது. தலைநகர் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

நெதன்யாகுவும் கூட்டத்தையும் வீட்டுக்கு அனுப்பாதவரை, இந்த நாடு வளர்ச்சி காண வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் Yair Lapid தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெல் அவிவ் பேரணியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும், எதிர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த நிலையில் டெல் அவிவ் போராட்டக்காரர்களுடன் காசா பணயக்கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1,170 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றே இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடிக்கு இதுவரை 33,137 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றேதெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 250 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் படைகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

 

காசாவில் இன்னும் 129 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று 7 ஆம் திகதி மீண்டும் களமிறங்க உள்ளனர், ஜெருசலேமில் ஒரு பேரணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட-கிழக்கில் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது – ஐ.நா அறிக்கை!

இவ்வாண்டில் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரி வருமானத்தை அதிகரித்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் – கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்னணியில் இவை அரசியல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறியுள்ளது.

 

அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கிளை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மேற்கூறப்பட்ட விடயம் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைவரம், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள், முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அடையப்பட்ட முன்னேற்றங்கள், இவ்வாண்டில் இலங்கை தொடர்பான இலக்குகள் போன்ற பல்வேறு விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தேசிய ரீதியில் முன்னுரிமைக்குரிய விடயங்களையும், நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளையும், அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்ட 2023 – 2027 வரையான ஐ.நா நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்துக்கு அமைய அடையப்பட்ட முன்னேற்றங்களையும் இவ்வறிக்கை வெளிக்கொண்டுவந்திருப்பதாக இலங்கைக்காக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்ச் தெரிவித்துள்ளார்.

 

‘2023 இல் இலங்கைக்கான எமது மனிதாபிமான உதவிகள் மீட்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை நோக்கி நிலைமாற்றமடைந்தன. அது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும், எமது முகவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் வருடமாக அமைந்திருந்தது. சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், வறுமையைத் தணிப்பதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் வருடத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை நிலைபேறான அபிவிருத்திக்கான தேசிய இலக்கை அடைந்துகொள்வதற்கு நாம் உதவுவோம்’ எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நாவின் வருடாந்த அறிக்கையின்படி 2023 இல் நாடளாவிய ரீதியில் சுமார் 2 இலட்சம் பேருக்கு நிதிசார் உதவிகளும், 2 மில்லியனுக்கு மேற்பட்டோருக்கு உணவுப்பொருள் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

அதேவேளை ‘2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இலங்கையில் 2023 இல் மீட்சிக்கான குறிகாட்டிகள் தென்பட்டன. வெளிநாட்டுப்பணவனுப்பல்கள், சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பவற்றில் ஏற்பட்ட தொடர் அதிகரிப்பு எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியை இலகுபடுத்தியது. எவ்வாறிருப்பினும் பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்தி நிலைவரம் தொடர்ந்தும் சவால் மிக்கதாகவே காணப்பட்டது’ என ஐ.நாவின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

‘2023 மார்ச் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நிதிநெருக்கடியைக் காரணங்காட்டி பிற்போடப்பட்டமை ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது. 2024 இல் தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து 2025 இல் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடாத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்தார். அதேபோன்று பிரதானமாக பொருளாதார கொள்கைத்தீர்மானங்களால் தூண்டப்பட்ட சில ஆர்ப்பாட்டங்கள் சட்ட அமுலாக்கப்பிரிவினரால் மிகக்கடுமையான முறையில் கையாளப்பட்டன. சமூகங்களுக்கு இடையிலான அமைதியின்மை, குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் மக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்ட குழப்பங்கள் என்பன சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன’ என்றும் ஐ.நா அதன் அறிக்கையில் விசனம் வெளியிட்டுள்ளது.

 

மேலும் ‘2023 இல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலம் என்பவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்ததுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ செயற்திட்டம் மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலுவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் 2024 இல் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரிவருமானத்தை விரிவுபடுத்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் இவை அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான மீட்சிக்கு உதவுதல், நிலையான சமாதானத்தை உறுதிசெய்தல், ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வதற்கும், ஆட்சியியல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கல், காலநிலைமாற்ற சவால்களைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கே இவ்வாண்டு தாம் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக இவ்வருடாந்த அறிக்கை ஊடாக இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

“எனக்கு வந்தால் ரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா”  – சுஜி கூல் என்ற பெண் தாக்கப்பட்டமை தொடர்பான தேசம் திரை காணொளி!

சுஜி கூல் என்ற பெண் தாக்கப்பட்டது தமிழ் தேசியவாதிகளின் ஆணாதிக்கத்தையும் – தன்கீழ் உள்ளவர்களை அடக்கும் அவர்களின் மனோநிலையையுமே வெளிப்படுகின்றது.

 

 

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜாவுடன் பரபரப்பான ஓர் கலந்துரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல் !

இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

 

இதற்கான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இப்பேரவையில் 28 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 6 நாடுகள் எதிராக வாக்களித்தன. 13 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.

 

காஸா யுத்தத்தினால் 33,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இனப்படுகொலை அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன்வைத்திருந்தது.