எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஜோன் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை

un_humanitarian.jpgஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக அவர் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக ஐ.நாவின் பேச்சாளர் மரி ஒக்காபி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மேலும் தெரிவித்துள்ளது

சரணடையும் நிலையில் பானு உட்பட முக்கிய தலைவர்கள்?

brig_shavendra.jpgகேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோர் மக்களோடு மக்களாக புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியிலேயே இன்னமும் உள்ளனர் என்பது தயா மாஸ்டரின் வாக்குமூலம் ஊடாக ஊர்ஜிதமாகியிருக்கிறது என்றும் பிரிகேடியர் சவேந்திர டி சில்வா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுமாத்தளனிலுள்ள 58ஆவது கட்ட ளையிடும் தளபதியின் அலுவலகத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே பிரிகேடியர் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

படையினரிடம் சரணடைந்த புலிகளின் ஊடகப் பேச்சளரான தயா மாஸ்டர் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக புலிகளின் தலைமையின் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் அழுத்தம் காரணமாக தமது வாழ் நாளில் பொய்பேச வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப் பட்டதாகவும் இதனால் தாம் மிகவும் மனம் வருந்து வதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் மட்டுமல்ல அவரது புதல்வர் சார்ள்ஸ் அன்டனியும் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறிய தயா மாஸ்டர் இறுதி நேரத்தில் பிரபாகரன் தப்பிச் சென்றுவிடுவார். போராட்டத்தில் இறுதிவரை நின்று உயிரிழக்க மாட்டார்; அவர் இவ் வாறான மனப்பான்மையை கொண்டவர் என்றும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.

இதேவேளை, பிரபாகரன் இறுதிநேரத்தில் தப்பிச் செல்வதற்காக இன்னுமொரு நீர்மூழ்கியை வைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள புதுமாத்தளன் பகுதியின் தென்முனைப் பகுதியிலிருந்து எதிர்முனைக்கு கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்முனையினூடாக மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதாலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறிய பிரிகேடியர் சவேந்திர சில்வா, எனினும் படையினர் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தியே எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேறும் மக்களின் நலன் கருதியே இவ்வாறு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரிகேடியர் கூறினார்.

புலிகள் அனைவரும் இறுதி வரை போராட வேண்டும் என்றும் அனைவரும் சிவில் உடையில் நின்றே போராட வேண்டும் என்றும் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவ உளவுப் பிரிவின் தலைவர் பதவி நீக்கம்

korabelnikovafp.jpgரஷ்யா வின் மிகப்பெரிய உளவு அமைப்பான இராணுவ உளவுப் பிரிவின் தலைவரை ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்கள் பதவி நீக்கம் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கும் அதிகமாக அந்த பதவியில் இருந்துவந்த வலன்ரின் கொரபல்நிக்கோவ் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஆனால், ரஷ்ய இராணுவ ஆட்குறைப்பு திட்டத்துக்கு இவர் முக்கியமான எதிர்ப்பாளர் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ஜோர்ஜியாவில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஏற்பட்ட சில தவறுகளுக்கு இந்த அதிகாரி மீதே அரசாங்கம் குற்றஞ்சாட்டப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

மேனன், நாராயணன் ஜனாதிபதியுடன் சந்திப்பு-தற்போதைய நிலைமை, மனிதாபிமான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வு

mahinda-shivshankar-mknarayan.jpg
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆர். கே. நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று நண்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமுகமானதாக அமைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய ராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இந்திய ராஜதந்திரிகள் ஜனாதிபதிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இலங்கையும் இந்தியாவும் ஏற்கனவே மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய வன்னி நிலைவரங்கள் தொடர்பாக இரு நாட்டு ராஜதந்திரிகளும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு அம்சமாகவே நேற்றைய சந்திப்பும் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கைக்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய ராஜதந்திரிகள் ஜனாதிபதியைப் பாராட்டியதாகவும் மேற்படி ஊடகப்பிரிவு தெரிவித்தது. நேற்றைய இச்சந்திப்பில் ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

Wanni_War_Welfare_Campவிடுதலைப் புலிகள் வசம் இருந்து இலங்கை அரச படையினர் கடைசியாக கைப்பற்றியிருந்த புதுமாத்தளன் பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை முதல் முறையாக இலங்கை இராணுவம் அழைத்துச் சென்றிருந்தது.

கொழும்பிலிருந்து புதுமாத்தளன் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த பிபிசி செய்தியாளர், சற்று தொலைவில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியுள்ள பிரதேசத்திலிருந்து வெடிச் சத்தத்தைக் கேட்கக்கூடியதாகவும் புகை கிளம்புவதை பார்க்கக்கூடியதாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் தொடர்ந்து வெளியேறிவருவதை காணக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரியங்கா

23-priyanka.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வாத்ரா கூறியுள்ளார்.

நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தான் புரிந்துகொண்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்தியா முயல வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் ராஜீவ் கொலை வழக்கு பற்றிய தனது கருத்துக்களை பிரியங்கா சற்று வெளிப்படையாகவே தெரிவித்துவருகிறார்.

வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை சந்தித்திருந்த பிரியங்கா காந்தி இக்கொலை தொடர்பாக யார் மீதும் பழி வாங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவரின் சகோதரரான ராகுல் காந்தி ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தமக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்

வவுனியா அகதி முகாம்கள் நிலை: அத்தியாவசியத் தேவைகளில் தட்டுப்பாடு

mullaitheevu.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள பல்வேறு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், முகாம்களிலே குடிநீர், உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக முகாம்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் தங்கவைக்கப்படுகிற நிலைமை இல்லை என்றும் முகாமில் உள்ளவர்கள் தமது உறவுகளை தொடர்புகொள்வது இயலாத காரியமாக உள்ளது என்றும் முகாம் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னியில் காயமடைந்த 848 பொதுமக்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதி

puthu.jpgவன்னி யில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 848 பொதுமக்கள் வியாழக்கிழமை வரை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதில் மரணமான 36 பேரது சடலங்கள் ஆஸ்பத்திரி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. வன்னியிலிருந்து கடந்த மூன்று நாட்களிலேயே காயமடைந்த இவர்கள் வவுனியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த 848 பேரில் படுகாயமடைந்த பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பிலிருந்து மருத்துவர் குழுவொன்று வவுனியாவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். தேவி ரயில் சேவை நடவடிக்கை தலைமையகம் நிறுவ அமைச்சரவை முடிவு

யாழ்தேவி ரயில்சேவைக்கான நடவடிக்கைச் செயலக மொன்றை ஸ்தாபிக்கவும் அதற்கு ஊழியர்களைச் சேர்த் துக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் டலஸ் அழகப் பெரும சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனு மதியளித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கும் தெற்குக்கும் உறவுப் பாலத்தை ஏற்படுத்தும் வகையில்’வடக்கு நட்பு’ வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யுமுகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஒரு மாத சம்பளத்தை முதலில் வழங்கி நிதியத்தை ஆரம்பித்து வைத்திருப்பதாகவும், அதனை அமைச்சர் அழகப்பெரும தொடர்ந்து வருவதாகவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

வன்னியிலிருந்து வந்த 4,325 பேர் தென்மராட்சியில் தங்கவைப்பு

Wanni_War_Welfare_Campவன்னி புதுமாத்தளன் பகுதியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டும் 4 ஆயிரத்து 325 பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இவர்களில் 2 ஆயிரத்து 70 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்திலும் 2 ஆயிரத்து 259 பேர் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ். மாவட்ட அரச அதிபரின் மேற் பார்வையில் தென்மராட்சி பிரதேச செயலகம் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கி வருகிறது. சாவகச்சேரி நகர சபையின் நீர் வழங்கல் பிரிவு குடிநீர் வசதிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வன்னியில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமான நாளிலிருந்து இதுவரை இடம்பெயர்ந்து வந்தவர்களில் தென்மராட்சியில் மட்டும் 9 ஆயிரத்து 516 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தென்மராட்சியிலுள்ள 5 நலன்புரி நிலையங்களிலும் 2 பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.