எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு யசூசி அகாஸி நேற்று நேரில் விஜயம்

akasi-vau.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள், உதவிகள் குறித்து ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஸி பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை ஜப்பான் அரசு தொடர்ந்தும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

வவுனியா கதிர்காமர், அருணாசலம் நிவாரணக் கிராமங்களுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் நேற்று விஜயம் செய்த போது மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார். வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் நிவாரணக் கிராமங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் விளக்கமளித்தார்.

அரசாங்கம் இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கிவரும் சுகாதாரம் மற்றும் கல்வி, நிவாரணம், தங்குமிட வசதிகள் குறித்து அதி கூடிய கவனத்தை ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

விசேட தூதுவர் யசூசி அகாசி மேலும் கூறியதாவது:- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் பணிகளைப் பார்க்கின்ற போது அவர்களை பாராட்டவேண்டும்.

இம் மக்களின் நலனோம்பும் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் கூடிய கவனம் எடுத்து செயற்பட்டு வருகின்றமை வெகுவாக பாராட்டுக்குரியது. இலங்கையில் சமாதானம் ஏற்பட எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் அரசாங்கத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை ஜப்பான் அரசாங்கமும், இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகமும் பெற்றுக் கொடுக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸில் பெண்புலி உறுப்பினர் சரண்

ltte_.jpgகஞ்சி குடிச்சாறு பிரதேசத்தில் விடுதலை புலி இயக்கத்தில் உயர் பதவியினை வகித்து வந்ததாக கூறப்படும் பெண் ஒருவர் நேற்று (30) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அக்கரைப்பற்று கண்ணகி புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் நீண்டகாலமாக விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றியுள்ளதுடன் உயர் பதவிகளையும் வகித்து வந்துள்ள இவர் செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளின் உதவியுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவரிடமிருந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளை அடுத்து அரச புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் எறிகணைத் தாக்குதலைக் காட்டும் செய்மதிப் படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன

_sri_lanka_sat_any.gifஇலங்கையின் வடகிழக்கே மோதல் நடக்கும் பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக இலங்கை அரசால் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எறிகணை தாக்குதல்களும் குண்டுத் தாக்குதல்களும் நடந்திருப்பதை காட்டக்கூடிய செய்மதித் தொலைக்காட்சிப் படங்கள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்தாக செய்தி வெளியிட்டுள்ளது

இலங்கை ராணுத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிய கடற்கரைபிரதேசத்தில் அடைபட்டு இருப்பதை, ஐநா மன்றத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படங்கள் காட்டுகின்றன.

இந்த எறிகணை மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு ராணுவம் பொறுப்பல்ல என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது. இது குறித்து விடுதலைப்புலிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சுடவேண்டாம் என்று ஐநா மன்றம் இலங்கை அரசை தொடர்ந்து கேட்டுக்கொண்டுவருகிறது.

இராணுவ இணையம் -நேற்றுப் பிற்பகலில் இருந்து மீண்டும் இயக்கம்.

army-crest.jpgபுலிகள் இயக்கத்தின் கணனி நிழல் வெளிப் பயங்கரவாதம் இராணுவ இணையத் தளத்தில் ஊடுருவியிருப்பதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான Army.lk இணையத்தை புலிகள் இயக்கத்தினரோ அல்லது அவர்களுக்குச் சார்பானவர்களோ சட்ட விரோதமாகத் துண்டித்துள்ளதுடன், சில கொடூரமான படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். புலிகளின் இந்தப் புதிய வடிவத்திலான பயங்கரவாதக் குற்றச் செயலுக்கு எதிராக சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப வழக்குத் தொடர முடியுமென்றும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இராணுவ இணையத் தளத்தைக் கூடுதலானோர் பார்வையிட்டு வருவதால், புலிகளுக்கும் அவர்களின் ஊது குழல்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புலிகளின் பயங்கரவாதத்திற்குப் பின்னால் உள்ள பல உண்மைகள் வெளிவந்ததுடன், அவர்களின் கொடூரச் செயல்களும் அம்பலத்துக்கு வந்தன. இதன் காரணமாக அவர்கள் நிழல்வெளிப் பயங்கரவாதத்தை மேற்கொண்டுள்ளார்களென்று தெரிவித்துள்ள பிரிகேடியர் நாணயக்கார, இராணுவ இணையத் தளத்தை வழமைபோன்று இயங்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இணையத்தின் ஆசிரியர் பீடம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய www. Army.lk இணையத்தளம் நேற்றுப் பிற்பகலில் இருந்து வழமைபோன்று இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மோதல் வலயத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்ற “முன்னுரிமை’ அவசியம் – நியூயோர்க்கில் ஹோம்ஸ்

john_holmes.jpgமோதல் வலயத்தில் தற்போதும் 50 ஆயிரம் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் சாத்தியமான அளவுக்கு அவர்களை வெளியே கொண்டுவருவது அவசியம் என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான மோதல் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அவர் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபின் நியூயோர்க் திரும்பியிருக்கும் ஜோன்ஹோம்ஸ் செய்தியாளர்கள் மத்தியில் புதன்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இடம்பெறும் மோதலால் இந்த மக்கள் பாரிய அபாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  ஷெல் வீச்சு, சூடுகளால் மாத்திரமல்லாமல் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளும் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து திரும்பியிருக்கும் ஹோம்ஸ் “ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருக்கிறது. அவர் பாதுகாப்புச்சபைக்கு அறிக்கையிட வேண்டுமென சபையின் பல உறுப்பினர்கள் கருதுவதாகவும் ஆனால், நேற்று வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரலில் சைபிரஸ் விவகாரமே உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் சபையில் அறிக்கையிடுவதற்கு சீனா எதிர்ப்பு காட்டியுள்ளதாக தகவலறிந்த உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. ஆயினும், ஏனைய விடயங்களுடன் இலங்கை விவகாரம் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கை சமர்பிக்கப்படும் இடம் குறித்து சீனா ஆட்சேபனை தெரிவித்திருப்பதாகவும் அதனால், ஐ.நா. தலைமையக அடித்தளத்தில் இலங்கை விடயம் குறித்து ஹோம்ஸ் அறிக்கை சமர்ப்பிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் மிகவிரைவில் அதிஉச்ச நன்மைகளை அடைவர் – முசலியில் அமைச்சர் முரளிதரன்

flee0009.jpgபடையினரால் மீட்டெடுக்கப்பட்ட வடபகுதியும், அங்குள்ள மக்களும் வெகு விரைவில் உச்சக்கட்ட நன்மைகளை அடைவார்கள். இதற்கான சகல நடவடிக்கை களையும் அரசாங்கம் முன் னெடுத்துள்ளது என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வெகுவிரைவில் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், கடந்த 25 வருடங்களாக தலைநகருடன் எந்த தொடர்புகளும் இல்லாமலிருந்த எமது மக்கள் மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் சிறந்த பலன்களை அடைவர் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவேரியர்புரம் கிராமசேவைப் பிரிவில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் நேற்றுமுன்திம் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்க்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தகவல் தருகையில்:-

பிரபாகரன் தனது சொந்த நலனுக்காகவும், தனது பாதுகாப்புக்காகவும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொது மக்களை பணயமாக வைத்திருந்ததை அனைவரும் கண்டோம். எஞ்சியுள்ள மக்களையும் எமது படைவீரர்கள் வெகுவிரைவில் மீட்டெடுப்பார்கள். நீண்டகால கொடிய யுத்தத்திலிருந்து நாங்கள் தற்பொழுது மீண்டு வந்துள்ளோம்.

நிச்சயமாக யுத்தத்தினால் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. எனவே யுத்தத்தை கைவிட்டு சிறந்த அரசியல் தீர்வு ஒன்றின் மூலம்எமது மக்களுக்கு தீர்வுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொடுப்போம் என்று அன்று புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நானும் சிலரும் ஆலோசனைகளை முன்வைத்தோம். இதற்காக கடுமையாக முயற்சித்து பார்த்தோம். அன்று எமது கருத்தை மறுத்தார். ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையாவது பெற்றுக்கொடுக்க முயற்சித்தோம். ஆனால் அதனையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை.  யுத்த வெறியிலேயே அவர் இருந்தார். ஆனால் இதனால் பாரிய அழிவையே சந்திக்க நேரிடும் என்று கூறிவிட்டு நானும் எனது சகாக்களும் வெளியேறினோம்.

பிரபாகரன் அன்று அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று வன்னி மக்களை கொடுமையிலிருந்து பாதுகாத்திருக்க முடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். எனவேதான் கிளிநொச்சி நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். படையினரின் மனோ வலிமையை மேம்படுத்துவதுடன் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

வாகரைக்கு இப்போது சென்று பார்த்தால் அங்கு யுத்தம் நடைபெற்றதற்குரிய எந்த தடையமும் இல்லை. ஜனாதிபதியினதும், பசில் ராஜபக்ஷ எம்.பி.யினதும் வழிகாட்டல்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே நிலைமை வெகுவிரைவில் வடக்கிலும் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மஸ்கெலியா தோட்ட உத்தியோகத்தர் வேலை நிறுத்தம் தொடர்கிறது

sri-lanka-upcountry.jpgமஸ்கெலியா பகுதி தோட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று (01) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

உத்தியோகத்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் நுவரெலிய மாவட்டமெங்கும் தமது போராட்டத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவித்தார். இதுவரை, தோட்ட உத்தியோகத்தர்களின் கடமைகளைத் தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், சில தோட்டங்களில் உத்தியோகத்தர்களுக்கும், தொழிலாளர்க ளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படலாமென்பதால், தொழிலாளர்கள் தமது கடமையை மாத்திரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவி க்கப்பட்டது.

உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால், தொழிலாளர்களின் சம்பளத்தை உரிய வேளையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உத்தியோகத்தர்கள் தமக்குரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குமாறு கோரி கடந்த 29 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தென்மராட்சியில் தற்காலிக பாடசாலைகள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தென்மராட்சி நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக தென்மராட்சியில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுகின்றன. யாழ். அரச அதிபர் மற்றும் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரிகளின் ஏற்பாட்டிலேயே இந்தப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பாடசாலைகளுக்கான ஆசிரிய வளம் ஓரளவு இருக்கின்ற போதிலும் தளபாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் யாழ். மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் தளபாடங்களை வழங்கி உதவ வேண்டுமெனவும் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கைதடி சைவச் சிறுவர் இல்லம், கைதடி பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 600 வரையான மாணவர்களின் கல்விக்காக கைதடி அரச மருந்தகத்தில் ஒரு தற்காலிக பாடசாலை அமைக்கப்படுகிறது. மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 500 வரையான மாணவர்களின் கல்விக்காக இந்த நலன்புரி நிலையத்திற்கு அண்மையிலுள்ள தனியார் வீடொன்றிலும் தற்காலிக பாடசாலையொன்று அமைக்கப்படுகின்றது.

40 சடலங்களும் அடக்கம் செய்யப்படும்

வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் அரச செலவில் அடக்கம் செய்ய மாவட்ட நீதிவானின் அனுமதி பெறப்பட்டுள்ளது. பூந்தோட்டம் பொது மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகமும் பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்துச் செல்லப்படாததும் அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இட நெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதாலும் இவற்றை அரச செலவில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், சடலங்கள் பொலித்தீன் பைகளில் போடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பிரிவு

swine-flue.jpgபன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் வெளிநாட்டு உள்நாட்டு பயணிகள் வருகை தொடர்பாக தீவிர கண்காணிப்புப் பிரிவொன்றின் ஊடாக தரவுகள் சேகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் இத்தீவிர கண்காணிப்புப் பிரிவு இயங்குவதாக குறிப்பிட்ட அவர் மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், நியூசிலாந்து, கனடா, இஸ்ரேல், ஓஸ்ரியா போன்ற நாடுகளிலிருந்து பயணிகள் வரும்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

பன்றிக்காய்ச்சல் பீடிக்கப்பட்ட ஒருவர் வருவாரேயானால் உடனடியாக அவரை பாதுகாப்பாக இதற்கென ஒதுக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விமான நிலைய ஊழியர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டயாராச்சி தெரிவித்தார்.