எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
“இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் பெற்றுள்ளது.
இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 170 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 171 ஓட்டங்கள் பெற வேண்டும்
மூன்று வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிக்கிடந்த தேக்கவத்தை கிராமத்தின் குறுக்கு வீதிகள் பொலிஸாரினால் திறக்கப்பட்டுள்ளன. வவுனியா தச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள வன்னிப்பிராந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமையக இராணுவ முகாமுக்கு எதிரில் கண்டி வீதியில் இருந்து குறுக்கு வீதிகளாக அமைந்திருந்த பல ஒழுங்கைகளின் நடுவில் பாரிய குழிகள் அமைத்தும், மண் அரண் அமைத்தும் இந்த வீதிகள் தடைசெய்யப்பட்டிருந்தன.
இதனால் இவற்றின் ஊடாக வாகனப் போக்குவரத்துக்கள் செய்ய முடியாதவாறு தடையேற்படுத்தப்பட்டிருந்தது. சைக்கிள்களில் செல்வதுகூட கடினமான முறையில் இங்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிசாரின் பிரதான (பரக்ஸ்) தங்குமிட விடுதிக்கு எதிரில் பிரதான வீதியில் நடத்தப்பட்ட ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, இந்த வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, இந்தக் கிராமத்து மக்களும் பிரமுகர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொலிஸார் அந்தப் பகுதி பொதுமக்களின் உதவியோடு இந்த வீதிகளின் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான (எக்ஸிம்) இலங்கையின் வடபகுதியில் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு உதவியளிக்க இணங்கியுள்ளது. சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் லீ ரூகூ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை சந்தித்துள்ளார். வடக்கில் புனர்நிர்மாண பணிகளுக்கு உதவியளிக்க தயாராக இருப்பதாக இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்திருக்கிறார். முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் தொடர்பான பட்டியலை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்தச் சந்திப்பின் போது எக்ஸிம் வங்கியானது தொடர்ந்து இலங்கை தொடர்பாக தாராளத் தன்மையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி வருவதாக அமைச்சர் போகொல்லாகம பாராட்டியுள்ளார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எக்ஸிம் வங்கி உதவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். புத்தளத்தில் அனல்மின் திட்டம், அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தித் திட்டம் என்பவற்றுக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி உதவியளித்து வருகிறது.
துரிதமாக ஆரம்பித்து விரைவாக பூர்த்திசெய்யும் வங்கியின் கொள்கையை அமைச்சர் புகழ்ந்துள்ளார். இதன்மூலம் மக்களுக்கு துரிதமாக வருவாயும் பொருளாதார அரசியல் ரீதியான சக்தியையும் ஏற்படுத்த வசதியளிக்கக்கூடியதாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தென்னிலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை தொடர்பான விபரத்தையும் அமைச்சர் போகொல்லாகம வழங்கியுள்ளதுடன், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வங்கியிடமிருந்து உதவியையும் கோரியுள்ளார்.
ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 630 மில்லியன் யென் பெறுமதியுடைய 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இவற்றில் 7 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
மேற்படி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை உத்தி யோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரி மைகள் அமைச்சில் நேற்று நடைபெற்றது. இதன் போது ஜப்பான் தூதுவர் குனியோ தகஹாசி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மேற்படி 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களில் 31 மத்திய நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதோடு 7 மத்திய நிலையங்கள் எதிர்வரும் தினங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளன. அவை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி மினி சூறாவளி தாக்கி பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் அப்பகுதியில் அமைக்கப்படுவ தோடு மினி சூறாவளி, திடீர் வெள்ளம் என்பன குறித்து மக்கள் முன்கூட்டி எச்சரிக்க முடியும் எனவும் இதனால் சேதங்களை மட்டுப்படுத்தவும் முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஜப்பான் அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை பயன்படுத்தி செய்மதி தொழில்நுட்பத்தினூடாக 10 நிமிடத்துக்கொரு தடவை நாட்டின் சகல பிரதேசங்களினதும் காலநிலை தொடர்பான விபரங்களை பெற முடியும். 2006 ஆம் ஆண்டு நான் ஜப்பான் சென்றிருந்த போது ஜெய்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினேன். அதன் பயனாகவே இந்த நிலையங்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன.
மோதல் காரணமாக வடக்கு, கிழக்கில் தன்னியக்க காலநிலை இயந்திரங்களை பொருத்த முடியவில்லை. தற்பொழுது முழு நாடும் சுதந்திரம் பெற்றுள்ளதால் அப்பகுதியில் விரைவில் இவற்றைப் பொருத்தவுள்ளோம்.
ஜப்பான் அரசாங்கம் உண்மையான நண்பராக எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறது. இலங்கை அரசாங்கம் சார்பாக ஜப்பான் அரசுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போதும் ஜப்பான் எமக்கு உதவியது என்றார்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது முதல் போட்டியில் கன்னிச்சதம் குவித்துள்ளார்.
அவர் ஆட்டமிழக்கமால் 102 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் யூனிஸ்கான் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது.
ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 28 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று ஆட்டம் முடியும் வரை துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் குமார் சங்கக்கார 87 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களையும், சமரவீர 21 ஓட்டங்களையும், டில்சான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்து வீச்சில் உமர்குல் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் சஹிட் அஜ்மல் 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். அப்துர்ரவூப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதேவேளை இலங்கை அணி சார்பாக ஹேரத் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் செட்டிகுளம் முகாமிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அங்குள்ள அகதிகளை சந்தித்த அவர் விரைவில் அவர்கள் அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்திருக்கிறார். இலங்கையின் முன்னணி பௌத்த அமைப்பான மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் அகதி முகாமிற்கு சென்றமை வரலாற்று முக்கியத்துவமானது என்று கருதப்படுகிறது.
மக்கள் மீளக்குடியேறி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு பல பணிகள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக தமது விஜயத்தின் போது மகாநாயக்கர் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூறியுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு செயலாளரும் படையினரும் பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, சுதந்திரத்தை தக்கவைப்பதற்கு பாதுகாப்பு மிகவும் அவசியமானது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தின் அம்பாறையிலுள்ள விசேட அதிரடி பொலிஸ் படையின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு இயல்பு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான புதிய சவால்களை இப்போது நாம் எதிர்நோக்கியுள்ளோம். அபிவிருத்தி மற்றும் உள்சார் கட்டமைப்பு நடவடிக்கைகளை வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொண்டு வருகிறோம். இப்போது நாம் எட்டியிருக்கும் விடுதலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சமூகத்தின் சகல பிரிவினரையும் உள்ளீர்த்துக் கொள்வது அவசியமானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
போரில் பங்களிப்பை நல்கிய விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யுத்தத்தினால் 500 இற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இறந்துள்ளதாகவும் அதிகளவு எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ், உள்ளூர் “ருவென்ரி20′ போட்டியில் விளையாட தெற்கு அவுஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் விளையாடவுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உள்ளூர் “ருவென்ரி20′ போட்டிகளில் ஒவ்வொரு அணி சார்பிலும் இரண்டு சர்வதேச வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். இம்முறை தெற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் விளையாட அஜந்த மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மெண்டிஸின் முகாமையாளர் ரொஷான் அபேசிங்க கூறுகையில்; “சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “ருவென்ரி20′ உலகக் கிண்ணத் தொடரில் மெண்டிஸ் சிறப்பாகப் பந்துவீசி அணியின் வெற்றிக்குக் கை கொடுத்தார். தவிர, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் இவர் துல்லியமாகப் பந்துவீசி அசத்தினார். இவரது வருகையால் அணியின் இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இவர் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை விளையாடாததால் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் சிறந்த பயிற்சியாக அமையும்’ என்றார்.
இதேபோல், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் மேற்கிந்தியாவின் டுவைன் பிராவோ இருவரும் விக்டோரியா அணி சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வீரர் லசித் மாலிங்கா மற்றும் மேற்கிந்தியாவின் கிறிஸ் கெய்ல் இருவரும் மேற்கு அவுஸ்திரேலியா அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத் தொடரில் பங்கேற்க மேலும் சில சர்வதேச வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் இப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வவுனியா வேப்பங்குளம், பட்டகாடு, குருமன்காடு பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்து அவர்களுக்கான பயிற்சிகளை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்ததுடன், பட்டானிச்சூர், சூடுவந்த புளவு, பழைய குடிமனை பகுதிகளில் தையல் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்ட யுவதிகளுக்கான தையல் இயந்திரம், சான்றிதழ்கள் என்பனவற்றையும் அமைச்சர் வழங்கி வைத்தார். 60 தமிழ், முஸ்லிம் யுவதிகள் இவற்றை பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை வவுனியா சூடுவந்த புளவு கிராம மக்களின் நீண்டகால தேவையாக இருந்துவந்த வைத்திய விடுதியுடன் கூடிய வைத்தியசாலையை நிர்மாணிக்கவென 95 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்த அமைச்சர் அதற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.
மைக்கல் ஜாக்சன் இறந்தால், நூறு கோடி பவுண்ட் கிடைக்கும் என்பதால், அவரை கொலை செய்து விட்டனர்’ என, ஜாக்சனின் தங்கை லா டோயா அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மைக்கல் ஜாக்சன் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அளவுக்கு அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டதே அவரின் திடீர் மரணத்திற்கு காரணம் என, சமீபத்தில் வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை மைக்கல் ஜாக்சனுக்கு பரிந்துரை செய்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். ஜாக்சனின் மரணத்தை ஒரு கொலை வழக்காக விசாரிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மைக்கல் ஜாக்சனின் சகோதரியான லா டோயா கூறியுள்ளதாவது. எனது சகோதரர் மைக்கல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிருடன் இருப்பதை விட மரணம் அடைந்தால் நூறு கோடி பவுண்ட் கிடைக்கும் என்பதால், அவரைக் கொன்று விட்டனர்.
ஜாக்சனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் அவர் இறந்தால் கிடைக்கும் ராயல்டி மற்றும் இசை ஆல்பம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் இன்சுரன்ஸ் பணத்தை கைப்பற்ற நினைத்தவர்கள் தான் இந்தக் காரியத்தை செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டதால், ஜாக்சன் இறந்து விட்டார் என்றும் கூறியுள்ளனர்.
ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு நபருக்கு மட்டும் இதில் தொடர்பிருக்க வாய்ப்பு இல்லை சிலர் சேர்ந்து செய்த சதி. எல்லாம் பணத்திற்காக செய்யப்பட்டது. மைக்கேலின் இசை ஆல்பங்கள் மூலம் கணிசமான பணம் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு அவரை கொன்றுள்ளனர். ஜாக்சனின் மரணத்திற்கு வேறு என்ன காரணம் சொன்னாலும், அதை நான் நம்ப மாட்டேன். உண்மையை கண்டறியும் வரை ஓயமாட்டேன்.
ஜாக்சனை சுற்றியிருந்த மோசடி பேர் வழிகள் அவரை குடும்பத்தினருடன் சேர விடாமல் தடுத்து விட்டனர். அவர், எங்களை பார்க்க விடாமல் செய்து விட்டனர். லண்டனில் பெரிய அளவிலான இசை நிகழ்ச்சிகளை நடத்த ஜாக்சன் விரும்பவில்லை என்றாலும், அவரை 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்து கடுமையாக பயிற்சி செய்ய வைத்துள்ளனர். உண்மையில் ஜாக்சன் 10 நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த விரும்பியுள்ளார்.
இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விட்டு விடவும் மைக்கல் விரும்பினார். திரைப்பட இயக்குனராக மாற நினைத்தார். அதற்கான வேலைகளிலும் இறங்கினார். “திரில்லர்’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டார். அதற்கான போஸ்டரை கூட அவர் வடிவமைத்து விட்டார். ஆனால், அவரைச் சுற்றி இருந்தவர்கள் சதி செய்து, அவரை உலகில் துணையற்ற மனிதராக்கி விட்டனர்.
மைக்கல் எப்போதும் தன் வீட்டில் இருபது கோடி ரூபாய் அளவுக்கு பணம் வைத்திருப்பார். மரணச் செய்தி கேட்டு நான் அவரின் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பணமோ அல்லது நகையோ இல்லை. நான் போகும் முன்னர் அங்கு பலர் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பணத்தை சுருட்டியுள்ளார். ஜாக்சனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தான் அவரை போதை மருந்துக்கு அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறு லா டோயா கூறியுள்ளார