எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தனுன திலகரட்னவின் தாயார் பிணையில் விடுவிப்பு

danuna_mother.jpgபல்வேறு வங்கிகளில்  75 மில்லியன் ரூபா பணம் வைப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கல்கிசை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்படட் பின்னரே பிணையில் செல்ல  அனுமதிக்கப்பட்டார். அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாதெனவும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பி;த்துள்ளது.

பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்தை  வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக,  தனுன திலகரட்னவின் தாயார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

2000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதிகொண்ட வெளிநாட்டுப் பணத்தை ஒருவர் வைத்திருப்பது இலங்கை நிதிச் சட்டப்படி பெருங்குற்றமாகும். அதற்கு அவர் மத்திய வங்கியிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன தலைமறைவு; தாயார் பொலிஸில் வாக்குமூலம்

danuna-son-in-law-sarath.jpgஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தனுனவின் தாயாரான திருமதி அசோக திலகரட்ன 16 பெப்ரவரி 2010 குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
 
ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு விவகாரங்களில் இவருக்கு தொடர்புள்ளதையடுத்து, அவரை கைது செய்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்தனர்.

ஆயுத ஊழல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தனுன திலகரட்னவின் தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்

“பிரிட்டிஷ் பிரஜையாவதற்கு வரிசையில் நிற்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்”

london-01.jpgகுடியேற்ற வாசிகளுக்கு பிரஜாவுரிமை வழங்கும் பரீட்சையின் ஒரு பகுதியாக வரிசையில் நிற்பது எப்படி என்பதைக் கற்பிப்பதற்குப் பிரிட்டன் திட்டமிடுகிறது.இ த்திட்டத்தை அந்நாட்டின் சிரேஷ்ட அமைச்சரே வெளியிட்டிருக்கிறார்.

பஸ்களில் ஏறுவது முதல் பாண்துண்டுகளைப் பெற்றுக் கொள்வது வரை ஒவ்வொன்றுக்குமே வரிசையாக நிற்பது எவ்வாறு என்பதைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.”இந்தத் திட்டம் பகிடியான விடயமாக தோன்றினாலும் இதில் தாங்கள் தீவிரமாக இருப்பதாக அமைச்சர்கள் வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். பிரிட்டிஷ் வாழ்க்கை முறையை அதிகளவுக்குக் குடியேற்றவாசிகள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் என்று ரெலிகிராப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வரிசையில் காத்து நிற்க வேண்டும் என்பது தொடர்பாக குடியேற்றவாசிகள் மத்தியில் புரிந்துணர்வுத் தன்மை இல்லாததால் அதிகளவு பதற்ற நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் முன்னுக்கு செல்வதற்கு முண்டியடிப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் சமூகத்திடம் குடியேற்றவாசிகள் உரிய முறையில் ஒருங்கிணைந்து கொள்வதனை உறுதிப்படுத்துவதற்கான நகர்வுகளின் ஓரங்கமாக இந்தத் திட்டத்தை முன்வைப்பதாக குடிவரவுத்துறை அமைச்சர் போல் வூலாஸ் கூறியுள்ளார்.வரிசையில் தன்னுடைய இடத்தின் பிரகாரம் ஒருவர் செயற்படுதல் மிகவும் சாதாரணமான செயற்பாடாகும். அது எமது நாட்டை ஒன்று சேர்க்கும் விடயங்களில் ஒன்றாக உள்ளது.

புதிதாக வருபவர்கள் வரிசையில் தமது இடத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பஸ் என்றால் என்ன, தேநீர் என்றால் என்ன தத்தமது வரிசைக்குரிய இடத்தின் பிரகாரமே சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வூலாஸ் கூறியுள்ளார்.

“நேர்மையாகச் செயற்படுவதென்ற பிரிட்டனின் உணர்வுக்கு இது மத்திய ஸ்தானத்தை வகிப்பதுடன் சகலருக்கும் இது சிறப்பான விடயமாகும். ஆட்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டவாறு முன்னுக்கு செல்வதால் அதிகாலையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. நியாயமாகச் செயற்படுவதையே அநேகமான குடியேற்றவாசிகள் விரும்புகின்றனர் என்பது எனது அனுபவமாகும்” என்று அவர் தெரிவித்தார்.பிரிட்டஷ் கடவுச்சீட்டை வைத்திருக்கும் உரிமையைப் பெற வெளிநாட்டவர்கள் பிரிட்டிஷ் பிரஜாவுரிமையைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன் எழுத்து மூலப்பரீட்சைக்கு அவர்கள் தோற்றவேண்டும்.

நைட் விஷன், ரவைகள் அக்கராயன்குளத்திலிருந்து மீட்பு

prasard.jpgவட பகுதியிலிருந்து இரவு பார்வை தொலைநோக்கி (நைட் விஷன் பைனாகுலர்) மற்றும் 1500 துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ள தாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அக்கராயன்குளம், ஆந்தன்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட பாரிய தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ. கே. – 47 ரக மெகஸின், ரி-56 ரக மெகஸின், 3 மிதிவெடிகள், பல்வேறு வகையான பெருந்தொகை துப்பாக்கி ரவைகளையும் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை, கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலிருந்து கைக்குண்டுகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

காலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு, ஊவாவில் கனத்த மழை மட்டக்களப்பில் 70.3 மி.மீ. மழை

rain.jpgகால நிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாகவே தற்போது மழை பெய்வதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

இம் மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் நீங்கிவிடும் எனவும் அவர் கூறினார். இம்மழைக் காலநிலை காரணமாக கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக மழை பெய்யும். வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று பிற்பகல் வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70.3 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவே நேற்று பெய்த அதிக மழை வீழ்ச்சி எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் அறுவடை செய்யப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர் நெல் கற்றைகள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முற்பகல் வேளை ஆரம்பமான மழை இடைவிடாது பிற்பகல் நேரம் வரை பெய்தது. இதனால் ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற நகர பிரதேச வீதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து போக்குவரத்து ஸ்தம்பித நிலை காணப்பட்டது.

செங்கலடி – பதுளை வீதியை அண் மித்துள்ள பிரதேசங்களில் இம்முறை பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில் அடை மழை பெய்ததனால் எதிர்பார்க்கும் அறுவடை கிடைக்காது விடலாமென விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

இலங்கையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் திருப்திகரமாக உள்ளன – ஐ. சி. சி. பிரதிநிதி தெரிவிப்பு

cricket.jpgஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக் கென விஷேடமாக பள்ளேகல சூரியவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச விளையாட்டு மைதானங் களின் தரம் திறமையான முறையில் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

2011ம் ஆண்டில் உலக கிரிக்கெட் கிண்ணத்துக்கான 12 போட்டிகள் இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இதனை முன்னிட்டு இவைகளின் தரங்களை பார்வையிட அண்மையில் இலங்கை வந்த பிரதிநிதிகள் குழுவினரே இவ்வாறு கருத்துத் தெரிவித் தனர்.

இம்மூன்று மைதானங்களின் நிர்மாணப் பணிகளைப் பற்றி குறை கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் இணைப்பதிகாரி திராஜ் மல் ஹோத்ரா குறிப்பிட்டார்.

தாங்கள் எதிர்பார்ததை விட பல மடங்கு திருப்த்தியளிக்கும் வகையில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி வருகின்றமையிட்டு மகிழ்ச்சியடைவ தாகவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு இறுதியில் சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானத்தில், மேற்கு இந்திய அணியுடனான போட்டியொன்றை நடாத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றது என இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் இடைக்காலச் சபையின் தலைவர் டீ. எஸ். த. சில்வா தெரி வித்தார்.

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் குவித்தார் சச்சின்

thendur.jpgஇந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொல்கத்தாவில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் அடித்தார்.

டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் அடித்த 47வது சதம் இதுவாகும். இந்த ஆண்டு டெண்டுல்கருக்கு மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது எனலாம்.

அவர் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் பங்களாதேசத்துக்கு எதிராக சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் சதம் கண்ட டெண்டுல்கர், மிர்புரில் நடந்த 2வது டெஸ்டிலும் சதம் அடித்தார். நாக்பூரில் நடந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டிலும் டெண்டுல்கர் சதம் கண்டு இருந்தார்.

கொழும்பில் முதலாவது ஹலால் மாநாடு – ஹலால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க திட்டம்

இலங் கைக்கு அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் அதிக அளவில் வரச் செய்வதற்கு இங்கு ஹலால் சுற்றுலாத்துறையை அறிமுகம் செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமைச்சரான பைஸர் முஸ்தபா நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.  இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது.

ஹலால் சுற்றலாத்துறை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு மற்றும் ஹலால் நிதி முதலீடு ஆகிய இரு பிரிவுகளில் அமர்வுகள் நடைபெற்றன. இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தன. ஹலால் உணவென்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமான உணவு என்ற கருத்து தவறு என்றும் ஒரு உணவுப் பண்டம் சரியான, முறையான சேர்மானங்களுடன் சுத்தமாகவும் உயர் தரத்துடனும் தயாரிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப் படுத்தும் ஒரு முறையே ஹலால் சான்றி தழ் என்று ஜம்இய்யத்துல் உலமா பிர முகர்கள் இங்கு ஹலால் சான்றிதழ் பற்றி விளக்கம் அறிக்கையில் தெரிவித்தனர்.

சைவ உணவு பிரியர்கள் உருளைக்கிழங்கு வறுவலை சைவ உணவென நம்பி உண்பதாகவும் ஆனால் இதைத் தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள் சில சமயம் இதைத் தயாரிப்பதற்கு விலங்குக் கொழுப்பைப் பயன்படுத்துவதுண்டு என்றும் சுட்டிக்காட்டிய இவர்கள், இவ்வாறான உணவுப் பண்டங்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

இலங்கையில் இதுவரை 145 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளன என்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இச்சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப் பட்டது. நான்காயிரத் துக்கும் மேற்பட்ட பண்டங்கள் இச்சான்றி தழ்களைப் பெற்று விற்பனைக்கு விடப் பட்டுள்ளன. இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா பண்டங்களை ஆய்வுக்குட்படுத்தி இச்சான்றிதழை வழங்கி வருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு

sarath.jpgஇலங்கை யில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகா சார்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையிலும் தேர்தல் முடிவுகளிலும் கணினியை உபயோகித்து மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் முடிவுகள் குறித்த உத்தியோகபூர்வ பிரகடனத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளரை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாக்கி பலவந்தமான முறையில் தனக்கு சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மோசடியான வழியில் பெற்றிருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த அனுமதியின் பேரில், தடுத்துவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் கையொப்பத்தைப் பெற்று அவரது பெயரிலேயே மனுவும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்பு

srilanka_parliament_02.jpgஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று (16) முதல் ஏற்கப்படுவதாக தேர்தல் திணைக் களம் தெரிவித்தது. 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கே இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள் ளதாகவும் திணைக்களம் கூறியது.

இம்முறை தேர்தலில் கூடுதலான அரசாங்க ஊழியர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்த தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதன்படி 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு சகல அரச நிறுவனங்க ளிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்க 22ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.