நாட்டைப் பாதுகாத்து, ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிவில் நிர்வாகத்தைச் சீர்குழைக்க பயங்கரவாதிகள் முனைந்த போது அதற்கெதிராகப் போராடிய தமிழ் பொலிஸ் அதிகாரியான திருநாவுக்கரசு போன்றவர்கள் பொலிஸ் வரலாற்றில் மறக்க முடியாதவர்கள். அவர்கள் நாட்டின் ஐக்கியத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பயிற்சியை முடித்துக் கொண்டு சேவைக்குத் திரும்பும் 370 புதிய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
பயங்கரவாதத்திற்கும் பாதாள உலகத்திற்கும் அரசாங்கங்கள் அடிபணிந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கை எம்மால் நிலைநாட்ட முடிந்துள்ளது.
வடக்கு, கிழக்கில் பொலிஸார் பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து செயற்பட்டதுடன், தெற்கில் பொலிஸார் பாதாள உலகக் குழுக்களுக்கு அடிபணிந்து செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. எமது அரசாங்கம் அந்நிலையை மாற்றியுள்ளது.
பொலிஸ் சேவை இன்று சிறப்பானதாக உள்ளது. இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பிருந்தது போலன்றி அத்துறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளிலும் மக்கள் சேவையிலும் பொலிஸார் திருப்தியுறாத பிரச்சினைகள் நிறைந்த காலங்கள் இருந்துள்ளன. சகல பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு, பதவி உயர்வு உட்பட சகல சலுகைகளும் பொலிஸாருக்கு உரிமை யாகியுள்ளன.
30 வருடங்களுக்கு முன் பொலிஸ் துறை சிறப்பாக இயங்கியது. வடக்கு, கிழக்கிலும், தெற்கிலும் சகல இன, மத பொலிஸாரும் இணைந்து சேவை செய்தனர். இந்த ஐக்கியத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பயங்கரவாதிகள் முதலில் பொலிஸாரின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டனர்.
புலிகள் முதலில் யாழ்ப்பாணத்தைத் தாக்கினர். அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலுமுள்ள 16 பொலிஸ் நிலையங்களைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்கள் பொலிஸார் அதிகாரம் அடக்கப்பட்டவர்களாகவே இயங்கினர்.
மீண்டும் இப்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பொலிஸார் அதிகாரத்துடனும் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவைக்காக இணைக்கப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்கள் ஐக்கிய இலங்கையைப் பாதுகாக்கும் பொலிஸாராகத் திகழ்வர்.
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான தொடர்புகள் குறித்த சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய யுகம் தற்போது உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் வரி வசுலிக்கும் பணியிலேயே பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் மக்களுக்காக பொலிஸ் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடளாவிய பயங்கரவாத வலையமைப்பை எமது பொலிஸாரால் ஒழிக்க முடிந்தது. அதனால்தான் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களை எம்மால் பாதுகாக்க முடிந்தது.
இதற்கு பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தவறுக்கு தண்டனை அழிப்பதைவிட தவறுக்கான வாய்ப்புகளை இல்லாமற் செய்வதே பொலிஸாரின் பணியாக வேண்டும். தாய் நாட்டை நேசிப்போராக பொலிஸார் திகழ வேண்டும். மக்கள் பாதுகாப்பு மட்டுமன்றி நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரபுக்களின் பாதுகாப்பும் பொலிஸாரின் கைகளிலேயே உள்ளது.
சில பொலிஸ் அதிகாரிகளினால் பொலிஸ் துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் புதிய பொலிஸார் பாடுபட வேண்டும்.
இதுவரை நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் நாட்டின் நல்லொழுக்கத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. அதனால் பயங்கரவாதம், பாதாள உலகம் என மக்கள் பெரும் துன்பங்களையே அனுபவிக்க நேர்ந்தது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் உழைத்தது போல் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொலிஸார் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மக்கள் கௌரவம் எனும் வெற்றியை பொலிஸார் பெற முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ரோஹித அபேகுணவர்தன, நிர்மல கொத்தலாவல, நந்தன குணதிலக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ்துறை உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.