::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

யுத்த நிறுத்தம் தொடர்கின்றது. தாக்குதல்கள் இல்லை என்கிறது இராணுவம்

army-wanni.jpgசித்திரைப் புத்தாண்டையொட்டி அரசாங்கம் அறிவித்த தாக்குதல் நிறுத்த அறிவிப்பையடுத்து, களமுனைகளில் பெரிய அளவில் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு வலயத்தினுள்ளே இருந்து விடுதலைப்புலிகள் இன்று காலை 9 மணியளவில் நடத்திய ஸ்னைப்பர் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நடத்திய எறிகணை தாக்குதலில் மற்றுமொரு இராணுவச்சிப்பாய் காயமடைந்ததாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்தினுள்ளே சிக்கியுள்ள பொதுமக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்குள் வருவதற்கு வசதியாக சித்திரைப் புத்தாண்டு பண்டிகை தினங்களாகிய இன்றும் நாளையும் (13, 14 ஆம் திகதிகள்) விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்திருந்தமை தெரிந்ததே.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த தாக்குதல் நிறுத்தத்தை ஐநா சபை அதிகாரிகள் முன்னோடியான நடவடிக்கை என குறிப்பிட்டு வரவேற்றுள்ளார்கள். இந்தப் போர்நிறுத்தத்தின் மூலம் மோதல்கள் நடைபெறுகின்ற பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் சென்றடையக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எனினும் அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் குறித்து விடுதுலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தாங்கள் தடுத்து வைத்துள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறவிட வேண்டும் என கேட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் புத்தாண்டுப் பண்டிகை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தமது வன்முறைகளைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே வைத்து படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் பண்டிகைக்கால செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு

amuthap.jpgசாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார் என வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் தெரிவித்துள்ளது. கடந்த 31.03.2009 அன்று இவர் மரணமடைந்ததாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளனிலிருந்து 440 பேர் அழைத்துவரப்பட்டனர்

taking-to-green-ocean.jpgபுது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து, மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்களும் நோயாளர்களும் புல்மோட்டைக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கிறீன் ஓசன் கப்பல் மூலமாக காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 440 பேர் இன்று (13.04.2009) புல்மோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை கண்ட இடத்தில் சுடுமாறு புலித் தலைமைத்துவம் பணிப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் பொது மக்களை கண்ட இடத்தில் சுடுமாறு புலிகளின் தலைமைத்துவம் தங்களது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்க புலிகளின் தலைமைத்துவம் இந்த உத்தரவை விடுத்துள்ளமைக்கான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும், புலனாய்வு துறையினருக்கும் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

தப்பிவரும் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் பாதுகாப்பு வலய எல்லையில் ஆயுதம் தாங்கிய புலிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்தி ற்கு மத்தியிலும் நேற்றைய தினம் மேலும் 270 பொது மக்கள் அம்பலவன்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.

இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ள இவர்களுள் 86 ஆண்களும், 77 பெண்கள், 48 சிறுவர்கள் மற்றும் 59 சிறுமிகள் அடங்குவர். இவ்வாறு தப்பி வரும் போது புலிகளின் துப்பா க்கிச் சூட்டில் காயமடை ந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

67,280 பொது மக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் கடைசி அகழி படையினரிடம் வீழ்ந்தது – பெருந்தொகையான ஆயுதங்களும் மீட்பு

army-attack.jpgமுல்லைத்தீவு, அம்பலவான்பொக்கனை பிரதேசத்தில் உள்ள படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற புலிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்தப் பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசி அகழிகளையும் கைப்பற்றியுள்ளனர். புலிகளை இலக்கு வைத்து படையினர் நடத்திய கடுமையான பதில் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முயற்சிகள் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

கடுமையான மழைக்கு மத்தியிலும் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொதுமக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ள அதேசமயம் புதுக்குடியிருப்பின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் கடுமையான தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மிதிவெடிகள் – 150, அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் – 14, கைக்குண்டுகள் – 150, வெடிமருந்துகள், குண்டுகள் – 08, கனரக ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகையான உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையில் அடைமழையால் நோயாளிகள் பாதிப்பு

trico.gifஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலும் வட பகுதியிலும் கடந்த சில தினங்களாகவே அடை மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக  புதுமாத்தளனிலிருந்து புல்மோட்டைக்கு கொண்டு வரப்படும் நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகளை ஏற்றிக் கொண்டு எந்த ஒரு கப்பலும் புல்மோட்டைக்கு வரவில்லை என்று அங்குள்ள மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்தார். மழை தொடர்ந்தால் நோயாளிகளை இறக்குவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார், அங்கு மேலும் பத்து அவசர ஊர்திகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

புல்மோட்டை வைத்தியசாலையிலுள்ளோரை கிறிஸ்தவ மதகுருமார் நேரில் சென்று பார்வை

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட துணை ஆயர் அதிவந்தனைக்குரிய பொன்னையா ஜோசப் தலைமையிலான கிறிஸ்தவ மதகுருமார் குழு ஒன்று புல்மோட்டையில் களவைத்தியசாலையில் முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் சென்று பார்வையிட்டது

அக்குழுவில் திருகோணமலை மாவட்ட எஹெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி பிரான்ஸிஸ் சேவியர் டயஸ், நிலாவெளி புனித ஜோசப் தேவாலயப் பங்குத் தந்தை அருட்பணி குணநாயகம், உதவிப்பங்குத் தந்தை அருட்தந்தை அஜித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

புல்மோட்டைக் களவைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சையளித்து வரும் இந்திய டாக்டர் குழுவின் தலைவர் டாக்டர் வசந்தகுமாரை கிறிஸ்தவ மதகுருமார் குழு சந்தித்து உரையாடியுள்ளனர்.

மழையின் மத்தியிலும் வன்னியில் தாக்குதல்.

army-attack.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைக்கும் மத்தியில் நேற்று படையினர் நடத்திய ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 பேர் பலியாகினர் 75 பேர் படுகாய மடைந்துள்ளனர்  என்று இணையத்தளத் தகவல்கள் தெரிவித்தன.

அவை மேலும் தெரிவித்ததாவது: மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை படையினர் ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மரணமானோரை புதைக்க முடியாமலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளதாகக் கூறப்பட்டது.

இரண்டு நாள் தற்காலிக யுத்த நிறுத்தம்

mahinda.jpgதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் நாளையும், நாளை மறுநாளும் (13, 14)  இரண்டு நாள் தற்காலிக யுத்த நிறுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சே இன்று (12) அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட  அறிக்கையில்; தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியேறும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் (திங்கள், செவ்வாய்) புலிகள் மீதான தாக்குதலை ராணுவம் நிறுத்திவைக்கும்.

இந்த கால கட்டத்தில் மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள்  அனுமதிக்கப்பட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை தமிழ்-சிங்கள புத்தாண்டு வருவதையொட்டி இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் புலிகள் படையினர் மீது தாக்குதல் மேற்கொhண்டால் தவிர பாதுகாப்பு வளையப் பகுதியில் மற்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகத்துறை  அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பா கூறுகையி்ல் நாளையும், செவ்வாய்க்கிழமையும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்படும். பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள மக்கள தப்பிச் செல்லும் வகையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.

புலிகள் அமைதி:

ஆனால், அரசின் இந்த அறிவிப்பு குறித்து புலிகள் தரப்பில் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் பணி ஆரம்பம் – பெருந்தொகையானோரை தங்கவைக்க செட்டிக்குளத்தில் விரிவான ஏற்பாடு

_mullai_1.jpgபாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை படையினர் ஆரம்பித்துள்ளதையடுத்து பெருமளவிலான மக்கள் அங்கிருந்த வரலாம் எதிர்பார்ப்புடன் அம்மக்களை என்ற தங்க வைப்பதற்காக வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்கள் (டெண்டுகள்) அமைக்கப்படுகின்றன. யூ. என். எச். சீ. ஆர் சுமார் 12,000 தற்காலிக கொட்டில்களை வழங்க முன்வந்துள்ளது. இப்போது சுமார் 9000 கொட்டில்களை அமைக்கும் ஆயத்த நிலையில் உள்ளன. என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

மேலும் இப்பிரதேச செயலகப் பிரிவிலேயே 700 ஏக்கர் பகுதியும் துப்புறவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியிலும் மக்களை தங்கவைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. கொட்டில்களில் மக்களை தங்க வைப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட மலசல கூட வசதிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. வவுனியாவில் தங்கியுள்ள ஐ. நா. மனிதாபிமான அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கென பெரிதும் உதவி வருவதாகவும் செயலாளர் ஹால்தீன் தெரிவித்தார்.

தற்போது வவுனியாவுக்குள் சுமார் 64,000 பேரளவில் வந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கு எதுவாக வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களுள் சுமார் 400 பேர் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலும், மேலும் 1200 பேர் ஒமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000 பேர்; படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளனர். இவர்கள் இன்று அல்லது நாளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.