::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பசில் ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் புல்மோட்டை அகதிகளை பார்வை

Wanni_War_IDPsஜனாதி பதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ. இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்தனர்.

புல்மோட்டை இலங்கை கனியவள மணல் கூட்டுத்தாபனத்தில் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதி மக்களையும் இவர்கள் பார்வையிட்டனர். அத்துடன் வன்னி அகதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சஹணகம (நிவாரணக்கிராமம்) இடைத்தங்கல் முகாம் வேலைகளையும் பார்வையிட்டனர்.

இந்த முகாமில் இருபதாயிரம் குடும்பங்களை குடியமர்த்துவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பத்தாயிரம் பேரை குடியமர்த்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நலன்புரி நிலையத்தின் வேலைகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் முதலில் 10 ஆயிரம் பேரை இங்கு குடியமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களை வேறுஇடங்களில் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜனாதிபதியின் ஆலோசகர், ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் புல்மோட்டையில் இயங்கும் இந்திய தளவைத்தியசாலைக்கும் சென்று அங்கு சிகிச்சை பெறும் வன்னிமக்களையும் பார்வையிட்டனர்.  இதேவேளை, இந்திய டாக்டர்கள் ஐவர் இங்கிருந்து செல்வதால் புதிய டாக்டர்கள் பொறுப்பேற்றனர்.

புலிகளிடம் தற்போது விமானங்கள் எதுவும் இல்லை; படையினர் தெரிவிப்பு

ltte_.jpgமுல் லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையில் அவர்கள் வசம் விமானங்கள் எதுவுமில்லையென படைத்தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பில் கடற்கரையோரமாக தற்போது புலிகள் 5 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் படையினர் விமானக் குண்டொன்றை கண்டுபிடித்ததாகவும் இது புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தும் ரகத்தைச் சேர்ந்த குண்டெனவும் படைத்தரப்பு கூறியது.

இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட போதும் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்களிடம் விமானங்கள் எதுவும் இருப்பதற்கான சாத்தியங்களில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது.

இதேநேரம், கடந்த மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு முதலியார்குளம் பகுதியில் நடைபெற்ற தேடுதலின் போது புலிகளின் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எட்டுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் இலகுரக விமானமொன்றை வைத்திருக்கும் சாத்தியங்களிருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறியிருந்தன. எனினும் அதனைப் படையினர் மறுத்துள்ளனர்.

வன்னி அகதிகளுக்கு உணவுப் பொதி நிறுத்தம் இனிமேல் அவர்களே சமைக்க வேண்டும் – வவுனியா கச்சேரிக் கூட்டத்தில் தீர்மானம்

fily-ap.jpg
வன்னியிலிருந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்குவதை நிறுத்தி தினமும் அவர்கள் தமக்குரிய உணவை தாமே சமைத்துக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்படவுள்ளது.

நேற்று வவுனியா கச்சேரியில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. தினமும் சமைத்த உணவை வழங்கும் போது சில அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவுப் பொதிகளை வாங்குவது, நேரம் பிந்தி வழங்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எத்தனை நாட்களுக்கு சமைத்த உணவை வெளியிடங்களிலிருந்து பெறுவது எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதேநேரம், உணவை சமைக்கும் போது தற்போதைய கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இவ்விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அரசாங்க அதிபர் நியமித்துள்ளார். இக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களே தமக்குரிய உணவை சமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவில் 78 சடலங்கள் அரச செலவில் அடக்கம்

வன்னிப்பகுதியைச் சேர்ந்த 78 பேரின் சடலங்கள் சனிக்கிழமை இரவு அரச செலவில் வவுனியா பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

நலன்புரி நிலையத்தில் மரணமானவர்கள், நோய்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணமானவர்கள் மற்றும் அடையாளம் காணப்படாத சடலங்கள், உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சடலங்களே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன.

பொலித்தீன் உறைகளில் சடலங்கள் பொதிசெய்யப்பட்டு ஒரே குழியில் போடப்பட்டு இவை அடக்கம் செய்யப்பட்டன.

ஏற்கனவே இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் பூந்தோட்டம் மயானத்தில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.

இராணுவத்தினரிடம் சரணடைந்த 31 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

ltte_.jpg
இராணுவத்தினரிடம் சரணடைந்த 31 இளைஞர்கள், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்களில் 22 பேரை, வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும், 9 பேரை, பல்வேறு இடங்களிலும் உள்ள அவர்களது உறவினர்களிடம் கையளிக்குமாறும் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரை அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு நியைத்திற்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலும் இவ்வாறு இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட 58 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைய அம்பேபுஸ்ஸவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புல்மோடை பகுதியில் மேலதிக நலன்புரி மத்திய நிலையங்கள்

20090424063601srilanka4.jpgமுல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களுக்காக திருகோணமலை புல்மோடைப் பகுதியில் நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகுகள் மூலம் தப்பி வருகின்றவர்களும் செஞ்சிலுவை சர்வதேசக்குழுவினால் மீட்கப்படுகின்ற மக்களும் புல்மோடை பிரதேசத்துக்கே வருவதால் இங்கு நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டச்செயலகம் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டுள்ளதுடன் இதுவரை இப்பிரதேசத்துக்கு வந்துள்ள மக்கள் புல்மோடை சிங்கள வித்தியாலயம் அரபாத் நகர் வித்தியாலயம், மற்றும் புல்மோடை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இப்பாடசாலைகளில் 1123 குடும்பங்களைச் சேர்ந்த 3945 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்க மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால் மேலதிக நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை

nilakannikal.jpgநிலக் கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மக்களை தங்களது சொந்தக் கிராமங்களில் மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப் படுத்தும் நோக்கில் குறித்த குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். துரித கதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் மற்றுமொரு மண்அணை தகர்ப்பு – 4 1/2 சதுர கி.மீ. புலிகள் முடக்கம்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்துக்குற்பட்ட பகுதியில் புலிகளின் மேலும் ஒரு மண்அணை நேற்றுக் காலை படையினரால் தகர்க்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஏனைய சிவிலியன்களும் படையினரை நோக்கி வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக்கடல் கடனீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணையே நேற்றுக் காலை இராணுவத்தின் 53ஆம் படையணியினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நான்கரை சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு க்குள்ளேயே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. வலைஞர்மடத்தின் தெற்கிலும் தென்கிழக்கிலும் நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்றது. இதில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. மோதல்களின்போது நாளுக்குநாள் சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்து வரும் அதேவேளை பெரும் எண்ணிக்கையான புலிகளும் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இராணுவத்தின் 53ஆம் 57ஆம் 58ஆம் மற்றும் மூன்றாம் படையணியினர் முல்லைத்தீவில் சிவிலியன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை 500 மீற்றர் நீளமான மண்அணையை தகர்த்ததன் மூலம் மேலும் பெருமளவிலான சிவிலியன்கள் வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கு விடுதலைப் புலிகள் ‘பாராட்டு’

pr-con.jpgபிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சென்ற வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது தொடர்பில் விடுதலைப் புலிகள் அவர்களைப் பாராட்டியுள்ளனர். இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அரசாங்கம், விடுதலைப் புலிகள் என்று இருதரபினரிடமும் அமைச்சர்கள் தமது பயணத்தின்போது வலியுறுத்தியிருந்தனர்.

இலங்கையின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் அக்கறை காட்டியமைக்காக வெளியுறவு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, போர்நிறுத்தம் செய்வதையே தாங்களும் விரும்புவதாக விடுதலைப் புலிகளின் அறிக்கை ஒன்றில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

islam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும் ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நடாத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி சிரமப்படுவோருக்கு உதவுமாறு இலங்கை முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தனது குத்பா பேருரையில், இஸ்லாம் பிறருக்கு உதவுவதை பெரிதும் வரவேற்கிறது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்ற எந்த வித்தியாசமும் இதில் இல்லை. மாறாக மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. ஓர் உயிர் சிரமப்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை அல் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மிகத்தெளிவாக எமக்கு கற்றுத் தருகின்றன. எனவே நாம் கஷ்டப்படுவோருக்கு துன்ப துயரத்திலிருப்போருக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அது உடலால், பொருளால், பணத்தால், ஆலோசனையால் எந்த தோற்றத்திலிருந்த போதிலும் பிற சகோதரனின் துன்பம் துடைப்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும்.

எனவே நாம் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் உதவவேண்டும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உங்களால். முடிந்தவைகளை கொடுத்து உதவுங்கள் இஸ்லாம் கொடையை மிகவும் நேசிக்கின்றது. கஞ்சத்தனத்தை வெறுக்கின்றது.

இன்று முஸ்லிம் சகோதரர்களின் உள்ளத்தில் ஒரு கேள்வி உண்டாகலாம். எமது முஸ்லிம் சகோதரர்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஈவிரக்கமின்றி உடுத்திருந்த ஆடையோடு வடக்கிலுள்ளவர்கள் விரட்டியடித்தார்கள் எமது சமூகம் அவர்களால் அகதிகளாக்கப்பட்டது. சொல்லொணாத் துன்ப துயரங்களை முன்னோக்கியது. இப்பொழுது நாம் உதவி செய்வதா?

எமது சகோதரர்களை விரட்டியவர்கள் இந்த அப்பாவிப் பொது மக்கள் அல்ல. இஸ்லாம் பழிக்குப்பழி வாங்குவதை கற்றுத்தரவில்லை. மாறாக அநியாயம் செய்தவர்களோடும் உபகாரம் செய்து வாழுமாறு எம்மை பணித்திருக்கின்றது. நபி(ஸல்) அவர்களை குறைஷிக் காபிர்கள் மக்காவிலிருந்து விரட்டியடித்தார்கள். எனினும் மக்கா வெற்றி கிடைத்தபோது நபியவர்கள் அவர்களனைவரையும் மன்னித்து விட்டார்கள். நாமும் அந்த உத்தம நபியின் வழிமுறையையே பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.