எஸ்.எம். மரிக்கார்

எஸ்.எம். மரிக்கார்

இலங்கையின் பிரதான கட்சியாக எழுச்சியடையவுள்ள ஜே.வி.பி – எதிரிக்கட்சி எம்.பி எஸ்.எம். மரிக்கார் !

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மாற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவின் இந்திய பயணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினரின் இந்திய பயணம் வரவேற்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தை தொடர்ந்து, இலங்கைக்கான முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சிறந்த அறிவை அனுரகுமார பெற்றிருப்பார் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மாற தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாகும் பட்சத்தில் இலங்கையின் அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சக்தி திகழும் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளை அந்த கட்சியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இளைஞர் யுவதிகளுக்கு Wi-Fi இலவசமாக வழங்குவதாக கூறிவிட்டு ஊடக சுதந்திரத்தை முடக்குகிறார் ஜனாதிபதி ரணில்.” – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு !

“சர்வதேச  விசாரணையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.”என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளுக்காக ஆளும் தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புகழ்பாடுகிறார்கள். ஜனாதிபதிக்கும் எமக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித முரண்பாடும் கிடையாது.ஆனால் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மக்களின் போராட்டத்தை தடுப்பதற்காக தற்போது நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கு வை-பை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமூக ஊடகங்களை முடக்குவதற்காக சட்டம் கொண்டு வர முயற்சிப்பது கவலைக்குரியது.

ஜேர்மனிய ஊடகத்துக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நேர்காணலில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்களை கொண்டு ஆளும் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளார்கள். நேர்காணலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தார்.

ஜனநாயகத்தை முடக்கி,சர்வதேசத்தை  பகைத்துக் கொண்டு ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொதுஜன பெரமுனவினர் கடந்த ஆண்டு லி குவான்யூ , மாத்தீர் மொஹமட் ஆகியோர் என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை களமிறக்கி,நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ராஜபக்ஷர்கள் தலைமறைவாகி உயிரை பாதுகாத்துக் கொண்டார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கி மீண்டும் பாடம் படித்துக் கொள்ள போகிறார்கள்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அரசாங்கம் உணர்வுபூர்மாக ஆராய்வதில்லை. எண்ணம் போல் விலையேற்றத்தை இலக்காக கொண்டுள்ளது. மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீண்டும் மின்கட்டணம் அதிகரித்தால் தென்னாசியாவில் அதிக மின்கட்டணம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

தற்போதைய மின்கட்டண அதிகரிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. பெறும் வருமானத்தில் மக்களால் எவ்வாறு வாழ முடியும். மக்களின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால் பாரிய எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

இலங்கையில் வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சி..?

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வழங்கும் செயற்பாட்டின் பின்னணியில், அரசாங்கம் ஏதோ ஒரு விடயத்தை மூடிமறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“வங்கிகளை அரசாங்கம் 5 நாட்களுக்கு மூடுவதன் நோக்கம், ஏதோ ஒரு விடயத்தை மறைப்பதற்காகத் தான்.

நான் மக்களால் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட, கொழும்பு மாவட்டத்திலேயே அதிக படியான வாக்குகளைப் பெற்ற இரண்டாவது உறுப்பினராக உள்ளேன்.

கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ளேன்.ஆனால், வங்கிகளின் விடுமுறை தொடர்பாக எனக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற நிதிக்குழுத் தலைவரிடமும் நான் இதுதொடர்பாக கேட்டிருந்தேன். அவருக்கும் தெரியாது.

ஜனாதிபதி இவ்வாறான விடயங்களை செய்வதில் கைத் தேர்ந்தவர். ஏதோ ஒரு விடயத்தை மூடி மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகிறார். நாம் இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுபவர்கள்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லவதற்கு ஜே.வி.பியினர் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

ஆனால், நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. நாம் தான் முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வோம் என்று அறிவிறுத்தியிருந்தோம். அரசாங்கம் அங்கு சென்ற விதம் பிழையானது என்பதால்தான் அந்த செய்றபாட்டிலிருந்து நாம் ஒதுங்கினோம்.

ஐ.எம்.எப். இற்கு செல்ல அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியுமா? உலக வங்கிக்கு செல்ல டில்வின் சில்வாவுக்கு முடியுமா?

அல்லது, லால் காந்தவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு செல்லதான் முடியுமா? இல்லை.

அங்கு எல்லாம் செல்லக்கூடிய நபர்கள் எமது அணியில்தான் உள்ளார்கள்.ஜே.வி.பியை பொறுத்தவரை ஐ.எம்.எப்., உலக வங்கியிடம் செல்வதெல்லாம் தவறான காரியங்களாகும்.

தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டுக்குள் வரவும் அவர்கள் எதிர்ப்பினைத் தான் வெளியிடுகிறார்கள்.

 

முதலீட்டாளர்கள் இங்கு வரவும் அவர்கள் எதிரானவர்கள். இங்கு முதலீடு செய்தவர்களையும் கப்பம் கோரி விரட்டியடித்தால், எவ்வாறு இந்த நாட்டை முன்னேற்றுவது?” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தியதற்காக கோட்டாபாயவை கைது செய்யுங்கள்.”- எஸ்.எம்.மரிக்கார்

மக்களை உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தூர நோக்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூலமே நாடு பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால்நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று நாட்டிற்கு வருகை தந்தவுடன் அரசின் சலுகைகள் உட்பட விசேட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் காரணமாக மூன்று வேளை உணவு உட்கொண்டவர்கள் இன்று இரண்டு வேளை மாத்திரமே உணவு உட்கொள்கிறார்கள். இரசாயன உரத்தை தடை செய்து நாட்டு மக்கள் உணவுக்காக போராடுகிறார்கள். பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும் எரிபொருள்  மற்றும் எரிவாயு வரிசைகள், இரசாயன உரத்தினை பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் உட்பட ஒருவேளை உணவை க் கூட உண்பதற்கு உணவின்றி மக்கள் உயிரிழப்பதற்கான முழுமையான பொறுப்பினை கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

இதன் காரணமாக உடனடியாக கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட வேண்டும். அவரைக்  கைது செய்வதன் மூலம் 22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளி நாட்டை வங்குரோத்து நிலைக்கு  கொண்டு வந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

“தேசத்தை பாதுகாக்க வந்தவர்களால் சமயலறையை கூட பாதுகாக்க முடியவில்லை.” – எஸ்.எம்.மரிக்கார்

தேசத்தை பாதுகாக்கவென வந்த அரசுக்கு வீட்டின் சமையலறையைப் பாது காக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

முட்டாள் தனமான பேச்சுக்களை நிறுத்தி விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த நிறுவனங்களுக்கு இதனை விட்டு விட்டுச் செல்ல முடியாது. இரண்டு காரணங்கள் உள்ளன.

எரிவாயு சிலிண்டர் வெடிக்காவிட்டாலும் எரிவாயு கசிவின் மூலமாகத் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்புகள் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கணிசமான இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தவிர நுகர்வோர் அதிகார சபை சிஐடி மூலம் முறையான பரி சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

இதன் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய தொழில்நுட்பம் மூலமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையை மாற்றியதற்கான காரணம் என்ன? யார் மாற்றினார்? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்து மாதங்களில் ராஜபக்ஷக்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு..? – அம்பலப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி !

தற்போதைய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

மேலும் பேசிய அவர் ,

குறித்த பெ2.3 டிரில்லியன் பணத்தை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது..? என வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை தீர்பதற்கே குறித்த கடன்தொகை பெறப்பட்டது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் தாமரை கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள், விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெரும் தொகை கடனாகப் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.

“பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெறுகிறது.” – எஸ்.எம். மரிக்கார்

“பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை உருவாக்கும் முயற்சியை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொள்ளையிட்ட பணம், தமது நண்பர்களின் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே நாட்டையும் மக்களையும் சீனாவுக்கு காட்டிக்கொடுத்து வருகின்றனர்.

துறைமுக நகரில் உயர் முகாமைத்துவ பதவி ஒன்று இருக்கின்றது. அந்த பதவியை வகிப்பது யார்?. அஜித் நிவாட் கப்ராலின் மகன். துறைமுக நகரின் கொடுக்கல், வங்கல்களில் இலங்கை அரசுக்கு ஒரு வீதம் கிடைக்கும்.

சிங்கப்பூர், துபாய் போன்ற பொருளாதார நகரங்களை உருவாக்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. பொருளாதார நகரம் என்ற பெயரில் தமது உற்ற நண்பர்களின் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

நாட்டை சீனாவுக்கு காட்டிக்கொடுப்பதையும் நாட்டுக்கு பொறுப்புக் கூறாத சீன ஈழத்தை உருவாக்குவதையுமே நாங்கள் எதிர்க்கின்றோம் என எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.