உலகக் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்தில் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே அனுமதியின்றி மைதானம் நுழைந்து உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தி முத்தமிட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
50 மில்லியன் மக்கள் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கேவின் குறித்த செய்கைக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பிபா எனப்படும் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கால்பந்து இறுதிப்போட்டியின் பின் “சால்ட் பே (Salt Bae)” எனப்படும் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே திடீரென மைதானம் நுழைந்ததால் மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தைத் தனது கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்டதோடு கிண்ணத்தின் மீது உப்பைத் தூவுவதுபோல வழக்கமான தமது சைகையைச் செய்துள்ளார்.
அர்ஜென்டினா அணி வீரர் ஒருவரின் பதக்கத்தை தமது பற்களால் கடித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அவரது குறித்த செய்கைகள் பிபா விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்தை வென்றவர்கள், பிபா நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் போட்டியை ஏற்று நடத்தும் நாட்டின் தலைவர்கள் மட்டுமே கிண்ணத்தைக் கைகளில் ஏந்த முடியும் என்பது பிபாவின் விதிமுறையாக உள்ளது.
இந்த நிலையில், குறித்த விதிமுறைகளை மீறியதாக சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே மீது விசாரணைகளை முன்னெடுக்க பிபா தீர்மானித்துள்ளது.
ஆரம்பகட்டமாக, நுஸ்ரெத்தைத் மைதானத்திற்குள் நுழைய யார் அனுமதி கொடுத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன.