Covid 19 in srilanka

Covid 19 in srilanka

“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்து பெறுவதே அரசின் நோக்கம்” – இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன

“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்தும் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்தும் ஆகக்கூடியளவிற்கு பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம்” என இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

அஸ்டிராஜெனேகா நிறுவனம் ஐந்து இலட்சம் மருந்துகளை வழங்குவதற்கு இணங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதன் பின்னர் இன்னொரு தொகுதி மருந்துகள் நன்கொடையாக கிடைக்கவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து மருந்தினை நன்கொடையாக பெறுவதற்கு சீனாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிடமிருந்தும் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான மருந்தினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வருகின்ற புதன்கிழமை இலங்கை வருகிறது கொரோனா தடுப்பூசி – ஜனாதிபதி தெரிவிப்பு !

இந்தியாவிலிருந்து புதன்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அஸ்டிரா ஜெனேகாவின் மருந்துகளையே இலங்கை பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் கொரோனா வைரஸ் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் தடுப்பூசி போடுவது எப்படி என்பது குறித்து இன்றைய தினம் விசேட ஒத்திகை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம், பிலியந்தல பிரதேச வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலை ஆகிய இடங் களில் இன்றைய தினம் ஒத்திகை இடம்பெறவுள்ளதாகச் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

 

இலங்கைக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா தீர்மானம் !

இலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொவிசீல்ட் மருந்தினை பயன்படுத்துவதற்கு தனக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளதை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என இந்திய தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கூடிய விரைவில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா செயற்பட்டாலும் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லாமை கவலையளிக்கிறது” என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

“அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை” – சஜித் பிரேமதாஸ

“அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை” என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டத்தின் போதே இவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா செயற்பட்டாலும் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லாமை கவலையளிக்கிறது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.

இந்திய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அயல் மற்றும் முக்கிய நட்பு நாடுகளிலிருந்து பிரதமர் மோடியின் அரசுக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறனைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு அமைவாகவும், கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட அனைவருக்கும் உதவும் வகையிலுமே இந்த திட்டம் அமைகிறது.

இதன் முதற் கட்டமாக பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகளிற்கான தடுப்பூசி விநியோகப் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கான விநியோகப் பணிகளை ஆரம்பிக்க முன்னர் அந்நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான அனுமதிகளை குறித்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடாகும். ஆனால் இலங்கை வெறுமனே வாய்மூலமாக வீராப்பு பேசுகிறது.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு எதுவும் முடியாது என்பது நிரூபனமாகியுள்ளது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எதிர்க்கட்சி முயற்சிக்கையில் அதற்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பது மாத்திரமன்றி நீதிமன்ற உத்தருகளில் நாட்டை ஆள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

போலித்தனமான பிரசாரங்களினால் மக்களை முழு அளவில் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு மற்றும் மக்களின் நலன்கள் குறித்து அக்கறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கேகாலை ஆயுர்வேத மருத்துவரின் கொரோனா பாணியை எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா !

கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் மருந்தினை பயன்படுத்திய இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார்.

துரித அன்டிஜென் பரிசோதனையின் போதே அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அமைச்சரின் பத்து உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர் தனது மருந்தினை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசென்றவேளை இராஜாங்க அமைச்சர் அதனை பயன்படுத்தியிருந்தார்.

கொரோனா தடுப்பூசிகளை எதிர்பார்த்து சீன ஜனாதிபதிக்கு ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ கடிதம் !

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான இலங்கையின் தூதுவர் பாலித கோஹன, சீன வெளிவிவகார அமைச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குக் கையளித்துள்ளார்.

இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இலங்கைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, 70 வீதமான பொதுமக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை அல்லது தற்போது காணப்படும் இரண்டாம் அலையின் பரவல் நிலைமைகள் மேலும் விரிவடைய இடமளிக்காது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் தொகை !

இன்றைய தினத்தில் நாட்டில் 687 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,229 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 43,267 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 247 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

6,715 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையிலும் புகுந்த புதிய வகை வைரஸ் – தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பி.சி.ஆர் சோதனையை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் !

பிரித்தானியாவிலும் தென்னாபிரிக்காவிலும் பரவிவருகின்ற வீரியமிக்க ஆபத்தான வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பிரதிஇயக்குநர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பி.சி.ஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பதாயிரத்தை நெருங்கும் இலங்கை கொரோனா தொற்றாளர்களின் தொகை – மேலும் நால்வர் பலி !

நாட்டில் மேலும் 588 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 537ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6 ஆயிரத்து 672 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621ஆக அதிகரித் துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 603 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்னர்.

மேலும் நேற்றையதினம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

“கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது” – சுகாதாரதுறை அமைச்சர் உறுதி !

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுமெனவும் எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது எனவும், சுகாதாரதுறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று(07.01.2021)நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோ புள்ளேயிடம், வைரஸ் தொடர்பான விசேடநிபுணர்கள் குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில், கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டுமென அதில் தெரிவித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட அறிக்கை தற்போது சடலங்கள் தகனம் செய்யப்படுமா அல்லது அடக்கம் செய்யப்படுமா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, மத ரீதியான அல்லது வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அந்நடைமுறையை மாற்றப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இதே நேரத்தில் முஸ்லீம்கள் தங்களுடைய உறவினர்களின் ஜனசாக்களை எரிக்க வேண்டாம் என இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.