13 ஆவது திருத்தம்

13 ஆவது திருத்தம்

“13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.” -உதய கம்மன்பில

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.

 

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

 

ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.

 

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

“மாகாண சபை தேர்தல் தேவையில்லை என ஜனாதிபதியிடம் சி.வி.விக்கினேஸ்வரன் கூறினார்.” – சுமந்திரன் குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்

“நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வல் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.

 

இந்த கூட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று சொன்னது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவது பற்றி அவர் பேசியிருந்தார்.

 

இதன்போது நான் ”தற்போது கொண்டு வந்திருக்கின்ற தனிநபர் சட்டமூலத்திற்கு அமைவாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என சுட்டிக்காட்டினேன். எனினும் தேர்தல் இப்போது தேவையில்லை அதிகார பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மேலும் நீங்கள் இந்த இரண்டிலே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் ஒன்று தேர்தல் அல்லது அதிகாரங்கள் பகிர்வது இரண்டையும் ஒரே நேரத்தில் கேற்க முடியாது என திட்டவட்டமாகக் கூறினார்.

 

இது ஒரு முரண்பட்ட கருத்து அல்ல இரண்டும் ஒரே திசையில் தான் இருக்கிறது அப்படி இருக்கின்ற போது நீங்கள் ஏன் ஒன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என சொல்கிறீர்கள் என்று நான் அவரோடு வாக்குவாதப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார் தேர்தல் தேவையில்லை அதிகார பகிர்வு பற்றி பேசுவது தான் முக்கியம் என்றும் கூறினார்.

 

அந்தக் கருத்தோடு நாங்கள் உடன்படவில்லை ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சித் தலைவர்களும் அங்கே இருக்கின்ற போது அவர்களின் அனுமதியோடு நான் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதை மறுத்துரைத்தேன்.பல வருடங்களாக கால தாமதமாகி இருக்கிறது மாகாண சபைத் தேர்தல், ஆகவே அது உடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடாத்துவதால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கதைக்க கூடாது என்று எங்கேயும் இல்லை, ஆகவே ஜனாதிபதி தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

நாங்கள் இரண்டையும் கேட்கின்றோம் எனக் கூறியபோது ”அப்படியானால் நாங்கள் கூட்டத்தை முடித்துக் கொள்வோம்” எனக் கூறிவிட்டு ஜனாதிபதி சென்றுவிட்டார். ஆகவே கூட்டம் நேற்று அரைகுறையுடன் நிறைவடைந்திருக்கிறது”இவ்வாறு தெரிவித்தார்.

“அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு தயார். பொலிஸ் அதிகாரங்களை வழங்க தயாரில்லை.” – மைத்திரி தரப்பு !

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது தென்னிலங்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தினால், மக்கள் மத்தியில் மீண்டும் மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 

அத்தோடு, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளதாகவும், அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

 

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதாகும். எனினும், இந்தியாவுடன் தற்போது காணப்படும் இராஜதந்திர தொடர்புகள் காரணமாக எம்மால் அதனை உதாசீனப்படுத்த முடியாது.

 

எனவே, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். எனவே இது மக்கள் மத்தியில் மீண்டும் இன மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும்.

 

பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கமும் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. நாமும் அது குறித்து பேசவில்லை. இது தொடர்பில் முதலில் அரசாங்கத்தின் முன்மொழிவே அவசியமாகும்.

 

சர்வகட்சி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனால் மாகாணசபைகளில் ஆயுதங்கள் அற்ற பிரஜா பொலிஸ் சேவையை வழங்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

 

எனவே, இதனைப் போன்ற யோசனைகளை அரசாங்கமே முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தினால் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்று நாம் கட்சி ரீதியாக கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்போம்.

 

எவ்வாறிருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை வரலாற்று சம்பவங்கள் ஊடாக நன்கு அறிந்திருக்கின்றோம்.

 

எனவே, மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எனவே, அரசாங்கம் இது குறித்த முன்மொழிவுகளை முன்வைக்கும் போது, முறையான திட்டமிடல்களை வழங்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.

 

எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் சர்வகட்சி மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். அரசாங்கம் யோசனையொன்றை முன்வைத்தால் , கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன..? – மைத்திரிபால கேள்வி !

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

 

அரசாங்கத்தின் யோசனை என்ன என்பதை முதலில் எமக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அந்த யோசனைகள் வெளிவந்தவுடன், நாம் இதுதொடர்பாக ஆராய முடியும்.

 

இதுதொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எமது யோசனைகளையும் இதில் முன்வைத்து அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

’13 ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமாயின் நாம் ஆதரிப்போம்.” – பேராசிரியர் சரித ஹேரத்

13 ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது என நித்திரையில் இருந்து எழுந்ததை போல் கருத்துரைக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த அரசாங்கங்கள் ஏன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்களின்  அரசியல் பிரச்சினை,அதிகார பகிர்வு ஆகியவற்றை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்றுவித்தார்.அதனை கூட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை நல்லாட்சி அரசாங்கம் பலவீனப்படுத்தி, மாகாண சபை வெள்ளை யானை போன்றது என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்தது.மாகாண சபை முறைமை நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.

13 ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் சர்வ கட்சி கூட்டத்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

சுதந்திர மக்கள் சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதிகார பகிர்வு விவகாரத்தில் ஏனைய அரசியல் கட்சிகயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையி;ல் ஈடுபட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் எத்தனையோ சர்வகட்சி கூட்டங்களை நடத்தி விட்டார்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காக சர்வக்கட்சி என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை அவர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரைவில் கலந்துரையாடல் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணங்கினால் மாத்திரமே 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும்” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதற்க முன்னர் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ஷ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது தனது நோக்கமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை இந்தியா திணிக்க கூடாது.” – சிவாஜிலிங்கம்

இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் அவரிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்தை இந்தியா அங்கீகரித்துள்ள நிலையில் நிரந்தர அரசியல் தீர்வை காண ஐ.நா.வின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இலங்கையில் பொது வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்தகாலங்களில் இடமபெற்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் உத்தரவாதம் வழங்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு அவசியம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சரவை உப குழு !

“அதிகாரங்கள் பகிரப்படாமல் இன நல்லிணக்கம் ஏற்படாது.” – சந்திரிக்கா குமாரதுங்க

“நாட்டில் உள்ள சட்டங்களை பற்றி முழுமையாக தெரியாத மனநோயாளிகளே 13 க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளனர்.

13 ஆம் திருத்த சட்டத்தை எதிர்த்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் உருவான இந்த 13 ஆம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடனேயே நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்த திருத்த சட்டத்தில் உள்ள விடயங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதோடு, அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதிகாரங்கள் பகிரப்படாமல் இன நல்லிணக்கம் ஏற்படாது” இவ்வாறு முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.