13வது திருத்தச்சட்டம்

13வது திருத்தச்சட்டம்

13ஆவதி திருத்தத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – இந்தியா உறுதி

இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21.08) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தமிழ்மக்களின் கரிசனைகள், குறிப்பாக நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பின்னரான தமிழ்மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் கூறியிருப்பதாவது:

இந்திய உயர்ஸ்தானிகரைக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்திருந்ததுடன், இதன்போது அண்மையில்  நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றிக்கு உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில்ஸ இந்தியாவின் நிலைப்பாட்டை இதன்போது உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

13வது திருத்தச்சட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. மக்கள் குழம்பத்தேவையில்லை !- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சிறுபான்மை மக்கள் சார்ந்த அமைப்புக்கள் பலவும் புதிய அரசு 13வது திருத்தச்சட்டதை்தை நீக்கவுள்ளதாக கூறி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ளார்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.  புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று நடைபெற்ற நிலையில், கடந்த ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை களையும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அண்மைய நாட்களாக 19 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இந்தியாவின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினையும் இல்லாமல் செய்வதற்கு புதிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சில தரப்புக்களினால் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில், புதிய அரசாங்கம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் நலன்களை அடைந்து கொள்ள முயற்சிக்கும் குறுகிய நலன் கொண்ட அரசியல் தரப்புக்களே இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரவ விடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்கள் தொடர்பில் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது