விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள்

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” – சரத் வீரசேகர காட்டம் !

“விடுதலைப்புலிகளின் கைப்பொம்மையாக கனடா செயற்படுகிறது.” என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த போதே  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், சுனில் ரத்நாயக்க, சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூறுகிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமல்ல.

முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்தவும், கோட்டாவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் தனிப்பட்டவகையில் அவர்களுக்கு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா? பிரிவினைவாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள் விடுதலைப் புலிக உறுப்பினர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும்போது மாத்திரம் ஏன் எதிர்ப்பதில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு?

மனித உரிமை மீறலை கனடா செய்திருக்கிறது. எனவே மனித உரிமை மீறல் தொடர்பில் பேச கனடாவுக்கு அருகதை இல்லை. சர்வதேச ரீதியில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகக் கனடா இருப்பதாக வரலாற்றில் பதியப்படும் எனவும் தெரிவித்தார்.

“மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல் மூலமே விடுதலைப்புலிகள் பணத்தை சம்பாதித்தனர்.” – உதய கம்மன்பில

“பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை மகிழ்வித்து, அவர்களிடம் இருந்து கடன் மற்றும் முதலீட்டை பெற்றுக்கொடுப்பதே எரிக் சொல்ஹெய்மின் பணி.” என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

விடுதலைப்புலிகள் வருமானம் பெறும் பிரதான வழியாக கப்பம் சேகரிப்பு இருந்தது என்றே பலரும் நினைக்கின்றனர். எனினும் மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தொல்லியல் பொருட்கள் கடத்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், கப்பல் சேவை, உணவகங்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் மூலமே விடுதலைப்புலிகள் பணத்தை சம்பாதித்தனர் என்பதே கசப்பான உண்மை.

விடுதலைப்புலிகள் இவ்வாறு சம்பாதித்த பணத்தை போரில் ஈடுபடவும் ஈழத்தை நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தினர். புலிகளின் காவல்துறை, நீதிமன்றம் என்பன நினைவில் இருக்கின்றதா? தொழில் வருமானம் கடந்த காலத்தில் போன்று தற்போதும் அவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்து வருகிறது.

எனினும் 2009 ஆம் ஆண்டில் இருந்து இரண்டு பிரதான செலவுகள் இல்லை. இதனால், வருடாந்தம் டொலர்கள் மில்லியன் கணக்கில் சேமிக்கப்பட்டு, தற்போது பிரிவினைவாதிகளிடம் பல பில்லியன் டொலர் நிதி இருக்கின்றது.

பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை மகிழ்வித்து, அவர்களிடம் இருந்து கடன் மற்றும் முதலீட்டை பெற்றுக்கொடுப்பதே எரிக் சொல்ஹெய்மின் பணி. பிரிவினைவாதிகளின் டொலர் என்றாலும் எமது நாட்டில் முதலீடு செய்தவதை நாங்கள் எதிர்க்கவில்லை. எனினும் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி எமது நாட்டை அனாதரவாக்கிவிட வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள பட்டினியை போக்க, எமது நாட்டை மீண்டும் போர் நெருப்புக்குள் தள்ளிவிட்டால், அது மிகப் பெரிய குற்றமாகும். அதுமட்டுமன்றி, இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்க முடியாது என இந்தியா அறிவித்துள்ளது. அதேவேளை சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருவதால், உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை சீனாவின் உதவியும் கிடைக்காது.

இவ்வாறான நிலையில், போர் ஒன்றில் சிக்கியுள்ளதால் ரஷ்யாவும் உதவ முடியாது என அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பாவாலும் உதவ முடியாது. கடந்த காலத்தில் இருத்தரப்பு உறவுகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்ட ஜப்பான் கடனை மறுசீரமைக்க மாத்திரமே இணங்கியுள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியையும் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பு தமிழ் பிரிவினைவாதிகள் மாத்திரமே” எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிற்போடப்பட்ட சிறைத்தண்டனையுடன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார். இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உள்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரபட்டது.

2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

வழக்கில் தயா மாஸ்டர் சார்பாக சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கில் தயா மாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

“புலிகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளனர். அவர்களின் ஈழக்கொள்கை மாறவில்லை.” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

“விடுதலைப்புலிகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளதாகவும் அவர்களுடைய ஈழக்கொள்கை மாறவில்லை” எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றின் போதேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த அறிக்கை எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்பு என்ன..?  என வினா எழுப்பப்பட்ட போது பதிலளித்த அவர்,

நாங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றோம் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்ட போதிலும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. எப்பிஐ 2008 இல் அறிவித்தபடி இலங்கை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப்போராடியது.

மீறல்கள் – பிரச்சினைகள் இருந்தால் இலங்கை உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் இலங்கை அதற்கு தீர்வை காண்கின்றது. விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர்.

அவர்களது ஆயுதங்கள் தற்போது தற்கொலை குண்டுகளும் ஆட்டிலறிகளும் இல்லை மாறாக பரப்புரை நீதிமன்ற நடவடிகைகள் -பிரச்சாரமே தற்போது அவர்களின் ஆயுதங்கள் . ஆனால் அவர்களின் கொள்கை மாறவில்லை- தமிழீழம் என்ற தனிநாடு.  குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதால் – வாக்குகளை பெறுவதற்காக அவர்களிற்கு ஆதரவளிக்கும்- தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளவர்களின் ஆதரவை அவர்களால் பெறமுடிகின்றது. மனித உரிமைகளை சில குழுக்களும் நாடுகளும் துஸ்பிரயோகம் செய்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் நாங்கள் கொள்கைகளை ஐநாவின் பிரகடனத்தை ஐநாவை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் இலங்கையர்களை விசாரணை செய்வற்கான வெளிநாட்டு பொறிமுறைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. என தெரிவித்தார்

மேலும் மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் 120,000 ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கின்றார்.
அந்த ஆதாரங்கள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்ட போது ,  பதிலளித்த அவர்,

ஆதாரங்கள் என்னவென தெரிவிக்காமல் குற்றம்சாட்டுவது நீதியா? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 16 உறுப்பினர்களிற்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்கான குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். அதன்பின்னர் பயங்கரவாத தடைச்சட்ட்த்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் , பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை !

பேஸ்புக்கில் இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது.

இதன்படி, இவ்வருடமும் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

பேஸ்புக் தமது வகைப்படுத்தலின் கீழ், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு இவ்வாறு தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டில் உள்ள பொதுபல சேனா அமைப்பு மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலும் எந்தவொரு பதிவையும் இடுவது பேஸ்புக்கினால் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறே, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும் தொடர்ந்தும் தடை விதித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்புகளுக்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு மத்தியில் வெறுப்புப் பேச்சுகளை கொண்டுசெல்லுதல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை கருத்துக்களை பகிர்தல் என்றதன் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.

புலிகளின் தங்கத்தை தேடிய பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணி இடைநீக்கம் !

இறுதி யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் புலிகளின் தங்கம் தேடிய சம்பவம் தொடர்பில் சரத் வீரசேகரவின் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வௌியான செய்திகள் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் கோரியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தக் காலத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத் தொகையொன்றை இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்த அமைச்சரவை அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த செயலாளர்கள் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் சட்டம் மற்றும் ஒழங்கு அமைச்சரின் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மீட்கப்பட்ட புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு  !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உள்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு  மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளை அழித்ததால் உங்களிற்கு கிடைத்தது என்ன..? – நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் கேள்வி !

விடுதலைப்புலிகளை அழித்ததால் உங்களிற்கு கிடைத்தது என்ன என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

தமிழர்களை அழித்தீர்கள். இன்று முஸ்லீம்கள் இலக்காகியுள்ளனர். அடுத்ததாக உங்கள் சொந்த இனமே பலியாகும்.  கடந்த காலத்தை சிந்திக்காது போனால் இனியும் இது ஐக்கிய இலங்கையாக இருக்காது. ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூஜ்ஜியமாக மாறும்.

இலங்கை ஒற்றையாட்சி சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையில் ஏனைய இனத்தவர்களை எதிரியாக கருதும் மனநிலையில் ஆட்சியாளர்கள் இனியும் பயணிப்பாளர்கள் என்றால் ஒருபோதும் இலங்கை நாடாக மீள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

“ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி நடந்துள்ளது.” – நாடாளுமன்றில் மனுஷ நாணயக்கார !

ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவருமான கலாநிதி திஸ்ஸ விதாரணவினால்  கொண்டுவரப்பட்ட அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

ஈஸ்டர் தாக்குதல் நடத்த சில தினங்களுக்கு முன்னர் வனாதவில் பகுதியில் இரண்டு காவல்த்துறை அதிகாரிகள் கொலைசெய்யப்பட்ட வேளையில் அவர்களை கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த வேளையில் அதனை விடுதலை புலிகளின் மேல் சுமத்தினர்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமான 42 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன, தேசிய பாதுகாப்பு நெருக்கடி, பிணைமுறி ஊழல் என்பவற்றை கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்திய வங்கி ஊழல் வாதிகளையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளையோ பிடிக்க முடியவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து  தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை.பொதுமக்கள் அரசதலைவரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள் உறுதியான பதில் கூறவில்லை.

ஷாரா என்ற பெண் எங்கே? என நாமும் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அவரது மரபணுவை பெற்றுக்கொண்டு அவர் இறந்துவிட்டார் என நிருப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவிற்கு தப்பிசெல்ல விட்டீர்களா என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏன் அரசாங்கம் இவற்றை மூடி மறைக்கின்றது. அதுமட்டுமல்ல சஹாரானின் மனைவின் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை ஏன் வெளிப்படுத்தவில்லை. அவரது வீட்டிற்கு வந்த புலனாய்வு அதிகாரி யார்?

உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் சகலரும் அச்சமடைகின்றனர். தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளை தீர்க்க ஆட்சிக்கு வந்தவர்கள் உண்மையில் என்ன நடந்தது என கூறுங்கள் என்றார்.

இது குறித்து கேள்வி எழுப்பும் வேளையில் எம்மை அடக்காது உண்மை என்ன என்பதை கூற வேண்டும் என்று மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.