விஜித ஹேரத்

விஜித ஹேரத்

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் – ஜே.வி.பி

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமது கட்சியில், நாடாளுமன்றத்தில் வேட்பாளர்களாக களமிறங்க பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கட்சியை குறைகூறி விமர்சனம் செய்வதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் – விஜித ஹேரத் குற்றச்சாட்டு!

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உணவு மற்றும் வரி வசூல் மட்டுமே வரவுசெலவு திட்டத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவருவதாக 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட போதிலும் அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

“மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து எதுவுமே கிடைக்கவில்லை.” -ஜே.வி.பி

மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் ஒரு டொலரில் மறுசீரமைக்கவோ முடி வெட்டவோ முடியவில்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிச்சயமற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்ததுடன் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது, இது மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

“இலக்கு அரச வருமானம் அடையப்படவில்லை. அதிக வரிகளை விதிக்கவும், மின் கட்டணங்களை மேலும் அதிகரிக்கவும், IMF தொடர்ந்து அரசாங்கத்தை வற்புறுத்துகிறது. IMF அறிக்கையின்படி, இலங்கை எதிர்பார்த்த இலக்கை விட 15 சதவீதம் குறைவாகவே அரச வருவாயைப் பெறுகிறது.”

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. மின்சாரக் கட்டணங்களும் 22 சதவீதம் அல்லது முதல் அலகிற்கு 8 ரூபா வரை அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” -ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“இலங்கையின் வைத்தியத்துறை கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது.” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆசியாவின் சிறந்த சுகாதார வசதிகள் உள்ள நாடே இலங்கை என அந்த நாட்களில் பெரிதாக பேசிக்கொண்டோம்.ஆனால் இன்று வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. மருந்து வில்லைகளை பாவிப்பதற்கு கெனூலா ஏற்றிக்கொள்வதற்கு பயமாகவுள்ளது. ஏன் ஏன்றால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தான் இன்றைய நாட்டின் நிலைமையாகும். சுகாதார அமைச்சு என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியா என்பது அறிந்த ஒன்றாகும்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளில் மாபியா உள்ளது. இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வரும் மாபியாக்கள் மில்லியன் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றன. அதற்காகவே இன்று இவ்வளவு சண்டை போடுகிறார்கள் என்றார்.

“திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் I.M.F இன் மாயாஜாலத்தால் ஒன்றும் ஆகப்போதில்லை.” – ஜே.வி.பி

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கம்பஹாவில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பதினைந்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது, ரூபாவின் பெறுமதி குறைப்பு, அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட 15 நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னரே பணம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற்றிருந்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வலுவாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தைக் காட்டினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும், அரசியல் கலாசாரத்தை மாற்றி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் மீனவர் பிரச்சினை தொடர்பான முழு அதிகாரத்தையும் எனக்கு வழங்கியுள்ளார் – அமைச்சர் டக்ளஸ்

“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லை.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஜேவிபி எம்பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், அத்துமீறி நாட்டுக்குள் பிரவேசிக்கும் இந்திய மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமென்று மன்னாரில் வைத்து தெரிவித்தார். அது, இப்போது செயற்படுத்தப்படுமா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி முழு அதிகாரத்தையும் தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

”கைது செய்யப்பட்டு நீதிமன்ற தீப்பின்படி அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளை, தேர்ந்தெடுக்கப்படும் எமது கடற்றொழிலார்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படகுகளின் தொழில் முறைமைகளை மாற்றி சட்டரீதியிலான தொழில் முறைமைக்கென வழங்கும் திட்டமும் உள்ளது. இதன் பயனாக இராட்சத இந்திய இழுவை மடி வலைப்படகுகளுக்கு முகங்கொடுத்து எமது கடற்றொழிலாளர்களாலும் பயமின்றி கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய சூழலை உருவாக்குவதே நோக்கம்.

முள்ளை முள்ளால் எடுப்பதைப்போன்ற ஒரு செயற்பாடுதான் இது இந்திய இழுவை மடி வலைப்படகுகளின் எல்லை தாண்டியதும் சட்டவிரோமானதுமான செயற்பாடுகள் காரணமாக எமது கடல் வளம் பாரியளவில் அழிக்கப்படுவகிறது.மேலும், எமது கடற்றொழிலாளர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

ஏற்கனவே, கைது செய்யப்பட்டு பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம்.

அந்நிதியை, மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு தீர்மாளித்துள்ளோம்.

அத்துடன் அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ராஜபக்ஷ அரசை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.” – விஜித ஹேரத்

“இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு தமிழ், சிங்கம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர்.” என மக்கள் விடுதலை முன்ணணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“நாட்டில் தற்போது எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறி வருகின்றன. இதற்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு துரிதம் காட்டவில்லை. மாறாக எரிவாயு அடுப்பு வெடிப்புக்கும் எரிவாயு சிலிண்டருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தனது இயலாமையையும் பலவீனத்தையும் மறைப்பதற்காகவே இப்படியான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட மின் விநியோக துண்டிப்புக்கும் இதே பாணியில்தான் முட்டாள்தனமான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். கேஸ் சிலிண்டர்களின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலேயே வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, சமையலறைக்கு சமைக்கு செல்லும் பெண்களுக்கு இன்று உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எந்நேரத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெறும் என்ற அச்சம் உள்ளது. இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு தமிழ், சிங்கம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர். நாளை வேண்டுமானாலும் அவர்கள் இதனை செய்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

‘அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க இனவாதத்தை கையிலெடுத்துள்ளது.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் ஞானசார தேரரைப் போன்ற ஒருவரை இதன் தலைவராக நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதியின் மன நிலையை தெளிவாக உணர முடிகிறது.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை (3)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் சீனி என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அவற்றை மூடி மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது.  2019 இல் இனவாதத்தை தூண்டியதைப் போலவே தற்போது இந்த செயலணியின் ஊடாக இனவாதத்தையும் , மதவாதத்தையும் தூண்டிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஞானசார தேரரை இதன் தலைவராக நியமித்துள்ளமையின் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகிறது.  செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை அவரது தவறல்ல. ஆனால் அவரை தலைவராக நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதியின் மனநிலை எவ்வாறு என்பது தெளிவாகிறது. எனவே தற்போது அவரது மூளையை சோதிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார்.  தற்போதைய ஜனாதிபதி அவரை செயலணியின் தலைவராக நியமித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்காத அரசாங்கம் , அருட் தந்தை சிறில் காமினியை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளது.

தன்னை கைது செய்யாமலிருப்பதற்கு அருட்தந்தை சிறில் காமினி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.  அவர் கைது செய்யப்படுவாராயின் கத்தோலிக்க மக்கள் நிச்சயம் வீதிக்கு இறங்கி கடும் எதிர்ப்பை வெளியிடுவர்.  இதன் மூலம் பௌத்த மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் , வேறு வழிகளில் முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும்  முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது.  இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது.

அரசாங்கத்தின் இவ்வாறான சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.