வாசுதேவ நாணயக்கார

வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரிப்பு !

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரவு செலவு அலுவலகம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் அதே சந்தர்ப்பத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது என்றும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவை திருப்திப்படுத்தவே 13 ஆவது திருத்தம் மீண்டும் கவனத்தில் – வாசுதேவ நாணயக்கார

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையினால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்தியா-அமெரிக்கா இராணுவ தளம் அமைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறதா.? எனவும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேர்தலை எதிர்கொள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.” – வாசுதேவ நாணயக்கார

“தேர்தலை எதிர்கொள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மேலவை கூட்டணியின் உறுப்பினர்களுக்கிடையில் திங்கட்கிழமை (டிச. 26) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது முன்னெடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் என்பது நாட்டு மக்களின் உரிமை அதனை பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தேர்தலை பிற்போட அரசாங்கம் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காது என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.

இலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். பரந்துபட்ட அரசியல் கூட்டணியை நிச்சயம் ஸ்தாபிப்போம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் எந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். வரி வீதத்ததை அதிகரித்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைப்பது நிச்சயமற்றது என்றார்.

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக தனது கட்சியை வளர்க்க ரணில் முயற்சி.” – வாசுதேவ குற்றச்சாட்டு !

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை வளர்க்க  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ 20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு / செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வரவு / செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்களாதரவு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது கையாள்கிறது. எல்லை நிர்ணய குழு அறிக்கையினூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கு மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுன மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்திரப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

அரச செலவினங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என்றார்.

“தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் தலைவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை.” – வாசுதேவ நாணயக்கார காட்டம் !

“நாட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் , அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.” என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கருத்திற் கொள்ளாமல் , விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் தலைவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசாங்கம் இவ்வாறு ஏதேனுமொரு நடவடிக்கையை எடுக்குமானால் , அது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே கருதப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கருத்திற் கொள்ளாமல் , நியாயத்தின் பக்கம் உறுதியாகவுள்ளனர்.

தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் , அதனைக் காலம் தாழ்த்த இடமளிக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது ஆணைக்குழுவின் கடமையாகும்.

அதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு தற்போது முன்னெடுத்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக தற்போதைய தேர்தல் ஆணையாளரை பதவி நீக்கி , தமக்கேற்றாற் போல் செயற்படும் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

பக்க சார்பற்ற இவ்விரு தலைவர்களும் நியாயத்தை நிலைநாட்டியுள்ளனர். எனவே இவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் ஏதேனுமொரு நடவடிக்கையை எடுக்குமானால் , அது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே கருதப்படும். அரசாங்கம் அதன் தேவைக்கு ஏற்றாற் போல் தீர்மானங்களை எடுப்பதற்கு இனியொரு போதும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை.

என்றுமில்லாதவாறான புதிய கூட்டணியொன்றை நாம் அமைத்திருக்கின்றோம். இந்தக் கூட்டணியின் ஊடாக அரசாங்கததுடன் எந்தவொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை தம்மிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

அவர் மக்களுக்கு சார்பான தீர்மானங்களை எடுக்காவிட்டாலும் , மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம். நாட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் , அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

“புனர்வாழ்வுப் பணியகம்” சட்டமூலம் இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் – வாசுதேவ நாணயக்கார

“புனர்வாழ்வுப் பணியகம்” என்ற தலைப்பிலான சட்டமூலம் வெறுமனே அநீதிக்காகக் காத்திருக்கிறது என்றும், நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் சிறு குற்றவாளிகள் கூட மறுவாழ்வுச் செயற்பாடுகளுக்குப் பதிலாக வேறு வழியின்றி செல்ல வேண்டியிருக்கும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இம்முறையின் மூலம், அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவது இயல்பிலேயே மோசமானது என்ற உண்மையை வீட்டுக்குத் தள்ளுவதாகவும், புனர்வாழ்வு என்ற போர்வையில் இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இளைஞர்கள் தேவையற்ற செல்வாக்கின் கீழ் குற்றவாளிகள் என்பதை ஒப்புக்கொள்வார்கள், இது இலங்கையின் நீதித்துறை மற்றும் அதன் சட்ட அமைப்புக்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு கடுமையான குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. புனர்வாழ்வுத் திட்டத்திலுள்ள பயங்கரமான தவறை நாம் இப்போது புரிந்து கொள்ள வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

” உலகம் முழுவதும் கையேந்துவதே அரசாங்கத்தின் கொள்கைக் திட்டமாக உள்ளது.” – உதய கம்மன்பில

” உலகம் முழுவதும் கையேந்துவதே அரசாங்கத்தின் கொள்கைக் திட்டமாக உள்ளது.” என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” உலகம் முழுவதும் கையேந்துவதே கொள்கைக் திட்டமாக உள்ளது. நாட்டை மீட்பதற்கான திட்டம் ஆளும் கட்சியிடமோ அல்லது எதிர்க்கட்சியிடமோ இல்லை. அதனால் தான் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

அழுத்தக் குழுவாக நாம் செயற்படுவோம். பிரச்சினைகளை பற்றி பேசுவதில் பயன் இல்லை, தீர்வுகளை பற்றி கதைக்கவே இந்தக் கூட்டணி.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர், சக்கரைப் பழக்கத்தை கைவிடாமல், அதனை தொடர்ச்சியாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதுபோலவே கடன் பொறிக்குள் இருந்து மீள்வதற்காக மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நடவடிக்கையையே ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, எமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” என்றார்.

“ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இன்னும் ஆறு மாத காலம் மாத்திரமே.”- வாசுதேவ நாணயக்கார

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இன்னும் ஆறு மாத காலம் மாத்திரமே ஆட்சியில் இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வும் இல்லை என்பதால் அவரது ஆட்சிக் காலம் மிகக் குறுகியதாக அமையும்.

நாடாளுமன்றில் செயற்படும் சுயாதீன கட்சிகளினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார். சுயாதீன கட்சிகளினால் நாளை ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியில்  இலங்கை அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படுவோர், இளைஞர், பெண்கள் உட்பட பலரை கூட்டணியின் கொள்கைகளுக்கிணங்க இணைக்க எதிர்பார்த்துள்ளது.

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சுயாதீனக் கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர், சின்னம் மற்றும் கொள்கை அறிக்கை என்பன நாளை நடைபெற இருக்கும் கூட்டணியின் ஆரம்ப விழாவில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு கட்சியாக செயற்படும் போது பல அரசியல் குழப்பங்கள் வருமெனவும் அவற்றை சமாதானமான முறையில் தீர்த்துக்கொண்டு அனைவருடனும் ஒண்றிணைந்து பயணிக்க வேண்டுமெனவும் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழருக்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா முயற்சி – கோட்டபாய விரட்டப்பட்டதன் பின்னணி தொடர்பில் வாசுதேவ !

வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார். அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் இவரே ஒத்துழைப்பு வழங்கினார். அத்துடன் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜுலி சங்கே பதவியிலிருந்து விரட்டினார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஜூலி சங் தலையிடுகின்றார். அவ்வாறு தலையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி முக்கியமானது அல்ல. சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை முன்வைக்கும். அந்த நிபந்தனைகளே இன்று நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய கடனை மறுசீரமைக்கும் வியடத்திற்குள்ளும் நிபந்தனை விதிக்கும் பல காரணங்கள் உள்ளன. அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானது என கூறப்படுகின்றது.

வேதனை அளிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அதேபோன்று அந்த நிபந்தனைகள் மக்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகும் எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறெனின் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு வேதனை அளிக்கும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால், பாரிய மக்கள் எதிர்ப்பை மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்.

 

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இருக்கின்றார். இன்று அவர் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஜுலி சங், சிறிலங்கா நிர்வாகம் குறித்து ஏன் அவர் தலையீடு செய்கின்றார்.

வடக்கு கிழக்கு பகுதிக்கு தனியான அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இலங்கையில் கோர்பச்சோப் போன்ற ஒருவர் தேவை என கூறுகின்றார்.

வடக்கு கிழக்கிற்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அவரின் பிரதான நோக்கமாக மாறியுள்ளது. இலங்கையின் உள்ளக ஆட்சி குறித்து அவருக்கு உரிமை உள்ளதா? இல்லை. இது அமெரிக்காவின் பலவந்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என கூறுவோர் முட்டாள்கள் – வாசுதேவ விசனம் !

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற வேண்டும் என எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாகத் தெரிகின்றது.

தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களை நிராகரித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசியல்வாதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.