யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் – கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர் !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வெளிநாட்டில் வசித்து வரும் நபர் ஒருவரின் வீட்டில் இருந்தே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

யாழில். இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இளைஞன் ஒருவர் சுன்னாகம் ஈவினை பகுதியில் மறைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் வசித்து வரும் நபரின் வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து , அந்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார் , மூன்று கஜேந்திரா வாள்கள் , நான்கு வாள்கள் , முகத்தினை மறைக்கும் துணிகள் , ஜக்கெட் , தலைக்கவசம் என்பவற்றை மீட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கும் , கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு குறித்த இளைஞன் யாழில் கூலி படையாக இயங்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரின் தொலைபேசி தொடர்புகள் மற்றும் வங்கி கணக்கு விபரம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் !

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் யாழ்.தொல்புரம் மத்தியில் நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைகளுக்காக  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில்  வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுக்திய பொலிஸ் கைது நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் – வாள்வெட்டுக்கு துணைபோகின்றனரா வடக்கின் அரசியல்வாதிகளும் – பொலிஸாரும்..?

அண்மைய நாட்களில் தினசரி 1000க்கும் குறையாத கைது நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் தினசரி இடம்பறெ்று வருவதுடன் வடக்கின் பல பகுதிகளிலும் யுக்திய எனும் போதைப்பொருள் ஒழிப்பின் ஒரு கட்டமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகின்றது. இதனால் 24 நேரத்திலும் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியான ஒரு இறுக்கமான பொலிஸ் கெடுபிடி கால கட்டத்தில் கூட யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களும் – கட்டப்பஞ்சாயத்துக்களும் – போதைப்பொருள் கடத்தல் நகர்வுகளும் குறைவில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

 

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

 

 

 

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !‘

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாள் வெட்டு சம்பவங்களால் கடந்த ஆண்டு மட்டும் யாழில் 13 பேர் பலி !

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

இது தவிர அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி இங்குள்ளவர்கள் மீது வாள்வெட்டு மேற்கொள்வது, வீட்டை எரிப்பது போன்ற வன்முறைச்சம்பவங்களும் பதிவாவதாக   யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பதுங்கியிருந்த யாழ் வாள்வெட்டு ஆவா குழுவின் தலைவர் கைது !

யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபரை வளன ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

வளன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மவுண்ட் யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் அந்தப் பகுதியில் தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்தறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியிருந்த அவர், கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 1 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடி விசேட சுற்றிவளைப்பு !

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடமளிக்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.கொடிகாமத்தில் இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத்  தாக்குதல் !

இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத்  தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ், கொடிகாமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி வீதியிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த வன்முறை கும்பல், இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

 

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு குறித்த இளைஞர் தப்பியோடியுள்ள நிலையில், இளைஞனின் வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த உடைமைகளை அடித்து உடைத்து சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

 

இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் , கொடிகாம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பிறந்த நாள் கொண்டாடியவர்களில் மேலும் 05 பேர் கைது !

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதுடன்,  அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும், காவல்துறையினர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ்.நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள். அது தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்திருந்தனர்.

அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இருவரை கைது செய்து கடந்த சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.

அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய பிறந்தநாள்காரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு பணித்திருந்தார்.

அதனை அடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் வன்முறைக்கும்பல்களின் அட்டகாசம் – இளைஞரை தாக்கி அடித்து வீட்டு பொருட்களை சேதப்படுத்தி கொடூரம் !

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட  தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சமையலறை உபகரணங்கள், மற்றும் தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டிலிருந்த இரண்டு உந்துருளிகளை தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் காவல்துறையினர் இன்று ஆய்வுசெய்தனர்.

வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.