முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால்

ஈழத்தமிழர்களுக்காக வாதிடுவதை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கூறிய கனடா பிரதமர் – அதிருப்தியில் அமைச்சர் அலி சப்ரி!

யுத்த வெற்றியின் 14ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

நேற்றைய தினம் கனடா பிரதமர் 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனடா பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் தனது அறிக்கையில்,

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகள் உட்பட, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல். மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் உட்பட, கடந்த பல ஆண்டுகளாக நான் நாடு முழுவதும் உள்ள சமூகங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இதன்காரணமாகவே, கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் பிரேரணையை பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்று குறிப்பிட்டிருந்தார்.

“முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் ஊடகவியலாளரை தாக்கவில்லை.” – இராணுவத் தலைமையகம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார் என இராணுவம் கூறியுள்ளது.

இதனை அடுத்து அங்குவந்தவர்களினால் வீதியோரத்திலுள்ள பெயர் பலகையை படமெடுக்கும் போது இராணுவ வீரர்களால் அவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் எனக் கூறும் அளவுக்கு வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் முட்கம்பியால் சுற்றப்பட்ட பனைக் குச்சியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் எனவே சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் விடுக்கப்பட்ட அழைப்பு தவறானது என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களுக்கு இடையில் உள்ள ஆரோக்கியமான நல்லிணக்கம் இருப்பதாக தெரிவித்துள்ள இராணுவம் இவ்வாறான சம்பவங்களை கொண்டு ஏமாறவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க சம்பவம் நடந்த போது இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு பின்பு காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இராணுவ தலைமையகம் இப்படியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் என்ற புனித பூமியை தங்களது சுய அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் – சி.தவராசா

போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் என்ற புனித பூமியை தங்களது சுய அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் சென்று சில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் போலித் தேசியம் பேசும் சில அரசியல் கட்சிகள் தாம் முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியப்பிரமாணம் செய்வதாகக்கூறி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் என்பது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளின் நினைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகள் ஒன்றுகூடி நினைவுகூரும் ஒரு புனிதமான பிரதேசமாகும். அவ்வாறான புனிதமான பிரதேசத்தில் தங்களது சுயநல அரசியலுக்காக அந்த முள்ளிவாய்க்காலை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக மக்களை முட்டாளாக்கி வரும் செயற்பாடாகவே இதை பார்க்கின்றேன்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தற்போது போலித் தேசியம் பேசுபவர்கள் எங்கு இருந்தார்கள்? இவர்கள் மக்களுடன் மக்களாக இருக்கவில்லை. மாறாக தங்களது பணியிலும் வெளிநாடுகளிலும் இருந்துவிட்டு இப்போது முள்ளிவாய்க்காலில் வந்து தங்களது போலித் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்வதாகக் கூறும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள சத்தியப் பிரமாண நிகழ்வில் இலங்கை அரசியலமைப்பை பேணிப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுக்கவுள்ளனர்.

குறிப்பாக அரசியலமைப்பின் இரண்டாம் உறுப்புரையில் இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாப்போம் என்று அவர்கள் உறுதி உரை எடுக்க உள்ளனர். பின்னர் இங்கு மக்கள் மத்தியில் பொய்களைக் கூறி அவர்களை மறுபடியும் ஏமாற்றும் படலத்தை தொடர்ந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.