2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், 2021-2022 ஆண்டுகளில் தடை இல்லாத மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க லக்விஜய மற்றும் கேரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்கள் வலுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக 1000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2021-2023 க்கு இடையில் தேசிய மின்கட்டமைப்பில் 1000 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை 1000 மெகாவோட்டாக அதிகரிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார். இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் எனவும் பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபா வரையில் உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இதனை பாதீட்டின் ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.