மத்திய வங்கி

மத்திய வங்கி

இருநூறு ஆண்டுகளாக உழைக்கும் தோட்டத்தொழிலாளர்களை கவனிக்காமல் மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள் – சுமந்திரன்

இரு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊடாக தேசிய கடன் மறுசீரமைப்புக்குப் பங்களிப்பு செய்யும் அதேவேளை, அதற்குப் பொறுப்பான மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

அண்மையில் புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட விடயம் கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், சம்பள அதிகரிப்பு தொடர்பில் தன்னால் எதனையும் கூறமுடியாது எனவும், இருப்பினும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பதிலளித்திருந்தார்.

 

இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பணிபுரியும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தற்போது அவர்கள் தமது ஊழியர் சேமலாப நிதிய சேமிப்பின் ஊடாக உள்ளகக் கடன் மறுசீரமைப்புக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், அந்த ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் பொறுப்பானவர்கள் மனசாட்சியின்றி பெருமளவால் தமது சம்பளத்தை அதிகரிக்கின்றனர் எனவும் சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

“உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய வங்கியின் ஆளுநர், இது தொடர்பான தகவல்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் ஆராய வேண்டும். எமக்கு கிடைத்துள்ள தகவலுக்கு அமைவாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால், ஊழியர் சேமலாப நிதியமே பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறு இதனை மேற்கொள்வதுதான் சரியான செயற்பாடு என்று ஆளுநர் கூறினாலும், நாம் இதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது. உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை.

இது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியத்திற்கு இதனால் பாதிப்பொன்று ஏற்படாது என்றே அரசாங்கம் இதுவரை கூறிவந்தது.

இந்த நிலையில், தற்போது இதற்கு முரணாக செயற்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய முடியாது. ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதே எமது கொள்கையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரே வாரத்தில் 189 பில்லியன் ரூபாய் அச்சடித்த இலங்கை மத்திய வங்கி !

இலங்கை மத்திய வங்கி கடந்த வாரத்தில் 189 பில்லியன் ரூபாய் (18,900 கோடி ரூபா) புதிய நாணயத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் மத்திய வங்கி மேலும் 180 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு கடனாக வழங்கியுள்ளது.

அதற்கமைய, கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு வழங்கிய மொத்த கடன் தொகை 369 பில்லியன் ரூபாவாகும் (936,900 கோடிரூபா).

சமகால மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 1061 பில்லியன் ரூபா பெறுமதியான புதிய நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.

இது ஒரு ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளது – மத்திய வங்கி

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் வரவிருக்கும் ஒப்புதல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் அதேவேளை நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில், கலாநிதி வீரசிங்க, IMF வாரியம் நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கான கடனை முறைப்படி அங்கீகரிக்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்காண மக்கள் – மத்திய வங்கி அறிக்கை !

2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஆரம்பமாவதற்கு முன் வருடாந்தம் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரிய அதிகரிப்பென்று மத்திய வங்கி கூறுகிறது.

இதேவேளை, 2022 ஒக்டோபர் மாதத்தில் 28,473 பேர் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 11,399 திறனற்ற தொழிலாளர்கள், 7,887 பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 6,165 பேர் உள்நாட்டு சேவைகளுக்காக சென்றுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ள வெளிநாட்டுப் பணம் 355 மில்லியன் டொலர்களென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022 ஜனவரி-ஒக்டோபர் இல் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 2,929 மில்லியன் டொலர்கள். 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், இந்த மதிப்பு 4,895 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்த மத்திய வங்கி !

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (05) 308.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 320 ரூபாவாக அறிவித்துள்ளன.

இந்த கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று (புதன்கிழமை) 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் இந்த நடவடிக்கைகள் பணவீக்கத்தை மேலும் துரிதப்படுத்தும் என பொருளியலாளர்கள் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.