மகிந்த ராஜபக்ஷ

மகிந்த ராஜபக்ஷ

“நெல்சன் மண்டேலாவின் மரணத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டது போல ஒரு கௌரவம் மகிந்தவுக்கும் கிடைக்க வேண்டும்.”- அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார். இனி அவர் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மகிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும். அவர் 80 வயதை நெருங்குகின்றார். அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.

நெல்சன் மண்டேலாவின் மரணத்தின் போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மகிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்”  எனவும் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்கிறார்கள்.”- சஜித் பிரேமதாஸ

“ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இன, மத, சாதி, நிற பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலகெதர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கடந்த (23) ஆம் திகதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கான சரியான வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நல்ல அணியைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ, தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் உண்மையான வெற்றியாளர்கள் தாய் நாடும் அதன் 220 இலட்சம் மக்களும் தான் எனவும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் தீர்வுகள், புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சி வந்த சேர்மார்கள் இறுதியில் நாட்டையே வங்குரோத்தாக்கினர் எனவும், இதனால், சிறு குழந்தை முதல் கர்ப்பிணித் தாய் வரை அனைத்து மட்டங்களிலுமுள்ள குடிமக்கள் தற்போது மிகவும் அவல நிலையில் இருப்பதாகவும், இறுதியாக உணவு வேளையைக் கூட தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையின் பிரச்சினைகள், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள், கைத்தொழில் துறையின் பிரச்சினைகள் உட்பட பல தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.

அரசாங்கம் போராட்டத்திற்கு பயந்து பல்வேறு கட்டளைச் சட்டங்களைப் பிரயோகித்து மக்களை ஒடுக்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த அடக்குமுறையைத் தாங்கும் உச்ச வரம்பை மக்கள் எட்டிவிட்டனர் எனவும், அதன் காரணமாக பல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் பொது மக்கள் ஆட்சியொன்றை உருவாக்குவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

“மக்கள் வறுமையில் வாடும் போதும் ராஜபக்ஷக்கள் இன்றும் திருடுவதை நிறுத்தவில்லை.” – சரத் பொன்சேகா காட்டம்!

நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும், ராஜபக்ஷகளும், அவர்களின் சகாக்களும் இன்று திருடுவதை நிறுத்தவில்லை.” என  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களை மீளக் கொண்டுவருவது தொடர்பில் 22 ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் வரவேற்கதக்கது. எனினும், அதற்கான நியமனங்களில் ஜனாதிபதியின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அமைச்சர்களை பதவி நீக்குதல், ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வகிக்காதிருப்பது தொடர்பான சரத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு வேண்டுமென உயர்நீதிமன்றம் அறித்துள்ளது.

இதற்கு முன்னராக திருத்தங்களில் இது ஏற்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு மாறாக பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது அரசியலமைப்பில் உள்ள ஒரு ஓட்டையாக கருதுகிறேன்.

திருத்தம் என்பது ஒரு நாடகமே தவிர மோசடி அரசியல்வாதிகளை திருத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை. மக்கள் துன்பத்தில் வாடும் சந்தர்ப்பத்தில் இதனூடாக அதிகாரத்துக்கு வர முயலும் சில செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

துரத்தியடிக்கப்பட்ட சிலர், மீண்டெழுவோம் என நாடளாவிய ரீதியில் கோசமிட்டு திறிகின்றனர். நாட்டையும் மக்களையும் சுரண்டிய குடும்பம் இன்னும் அதிகார பேராசையை கைவிடவில்லை. தமது எதிர்காலம் கருதி மக்கள் இதனை நம்பவேண்டாம்.

அண்மையில் நிலக்கரி கேள்விமனு விவகாரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த டொலர் மோசடி அமைச்சரவை தலையீட்டில் நிறுத்தப்பட்டது. இதனூடாக கோடிக்கணக்கான மோசடி இடம்பெறவிருந்தது.

தற்போது, எரிபொருள் வரிசை குறைந்ததாக கூறுகின்றனர். ஒதுக்கங்களை குறைத்து கூப்பன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாலும், விலை அதிகரித்ததால் அவற்றை நாடுவோர் எண்ணிக்கை குறைந்தமையாலுமே உண்மையில் வரிசை குறைந்துள்ளது. மக்கள் பசியில் இருந்தாலும், ராஜபகஷக்களும் அவரது கூட்டாளிகள் திருடுவதை நிறுத்துவதாக இல்லை. ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட போராட்டமே அவசியம். கட்சி பேதமின்றி அனைவரும் முன்வரவேண்டும்.

ரணிலை அதிகாரத்துக்கொண்டுவந்த செல்வந்தர்களும் வறுமையில் வாடும் மக்கள் மத்தியிலேயே வசிக்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது. நாட்டின் தனிபநபர் வருமானம் 3,500 டொலர் எனக்கூறுகின்றனர். ஏனைய நாடுகளில் இது 40,000 –  50000 டொலராக காணப்படுகிறது. அவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் வறுமையில் உள்ளமை புலப்படுகிறது.

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்கள் சாப்பாட்டு பெட்டி வெறுமையாக உள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறினார். அவர் கடந்த காலத்தில் அங்கு சென்று பிச்சையெடுக்கும்போது, சாப்பாட்டு பெட்டிகளை அபகரித்து பார்த்தாரோ எனத் எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு பொறுப்பற்ற கதைகளை கூறுவோரின் வார்த்தைகளுக்கு ஏமாற வேண்டாம் என்றார்.

மகிந்தராஜபக்சவுக்கான மலசலகூடத்துக்காக மட்டுமே 600 கோடி ரூபா – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

“ தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”.என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்றைய(22.09.2022)  நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பாளராக இருந்த போது 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது. இதற்கு பினனர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.

அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவிற்கு சிறிலங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர். மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும். கசிப்பு விற்பனை செய்தாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில், போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு நிராயுதபானியான விடுதலை என பெயரிட வேண்டும். அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும்.

தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல. அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது. எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”, எனக் குறிப்பிட்டார்.

“ராஜபக்சக்களை விரட்டியத்த போராட்டத்துக்கு திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும்.  ” – மகிந்த காட்டம் !

“ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும்.  ” என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலருடனான நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும். நான் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றேன், நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. அதியுயர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும்.  எனினும், நான் அமைதியாகவே இருக்கின்றேன், உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும், காலம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரும்.

ராஜபக்சக்கள் உள்ளடங்கிய பெரமுன கட்சி மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்று எதிர்த்தரப்பினர் உளறுகின்றனர், இது வேடிக்கையாக இருக்கின்றது.

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அமைச்சர்கள் அனைவருக்கும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன்” எனவும் கூறியுள்ளார்.

“இலங்கையை உலகளாவிய கடல்சார் மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் செயற்படுகின்றது.” – பிரதமர் மகிந்த

இலங்கையை பிராந்தியத்தில் நிலையான உலகளாவிய கடல்சார் மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசியா-பசிபிக் உலகப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்திய பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடான இலங்கை, அதன் மக்களையும் இந்தியப் பெருங்கடலையும் மதிக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது எனவும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

“நீல பொருளாதாரத்தில் முதலீடு செய்தல்” என்ற கருப்பொருளின் கீழ் பிராந்திய ரீதியாக மையப்படுத்தப்பட்ட உலகப் பெருங்கடல் உச்சி மாநாடு ஆசிய-பசிபிக் மெய்நிகர் நிகழ்வு டிசம்பர் 6ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.

பிரபாகரன் போதைப்பொருள் கடத்தினார் என கூறிய அமைச்சர் டக்ளசுக்கு சிறீதரன் கொடுத்த பதில் !

நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்ல. பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னைப் பேவிடுங்கள்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலளித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

பாராளுமன்றத்தில் இன்று சிறிதரன்  உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சிறிதரன் பேசிக்கொண்டிருந்த உரையை குறுக்கீடுஅமைச்சர் செய்த டக்ளஸ்தேவானந்தா, ”மஹிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறிதரன் அவ்வாறு குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் ஜேதவனராமய அருங்காட்சியகம் பிரதமரால் திறந்து வைப்பு !

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜேதவனாராம வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தனித்துவமான புராதன பொருட்கள் நேற்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியக திறப்பு விழாவில் கலந்து கொண்ட கௌரவ பிரதமர், ஜேதவனாராமய விகாரை பூமியில் நாக மரக் கன்றொன்றை நாட்டிவைத்தார். தொடர்ந்து ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் பிரதமரின் பார்வையிடப்பட்டுள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் 50 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு இணையாக புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக சாலை அமைப்பிற்கு 82 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருள் மதிப்புமிக்க இடிபாடுகள் மற்றும் புதைபடிவங்களை பாதுகாக்கும் செயற்பாடு ஜேதவன தொல்பொருள் அருங்காட்சியகத்தினூடாக முன்னெடுக்கப்படுகிறது.

பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று மதிப்புமிக்க திட்டம் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இலங்கையின் மகிமையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் அடமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் மற்றும் ஜேதவனாராம விகாராதிபதி இஹலஅல்மில்லாவே ரதனபால தேரரின் அனுசாசனத்தில், சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைக்கு அமைய கலாசார மறுமலர்ச்சிக்காக இந்ந அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் ஜேதவனாராம விகாராதிபதி இஹலஅல்மில்லாவே ரதனபால தேரர் மற்றும் ருவண்வெலி வைத்யாதிகாரி ருவன்வெலி மகாசாய விகாராதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அத்துடன், அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினர் கே.டீ.எஸ்.குமாரசிறி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், அனுராதபுரம் நகரபிதா எச்.பீ.சோமதாச, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“பாடசாலை செல்லும் மாணவர்களின் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றியவர் மகிந்தராஜபக்ஷ ” – அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  பாராட்டு !

“நல்லாட்சி அரசை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்கள் பெருமளவில் பங்களித்தாலும் அவர்களுக்கு என்ன கிடைத்தது? ” என அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொவிட்-19,யுத்தம்,எரிபொருள் பிரச்சினை எதுவுமின்றிய நிலையில் தான் 2015 இல் நாட்டை நல்லாட்சி அரசுக்கு மஹிந்த ராஜபக்ஷ கையளித்தார். ஆனால் ஆகஸ்டில் நடந்த தேர்தலில் 104 எம்.பிகள் தான் அவர்களுக்கு கிடைத்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத் தேர்தலை வென்றார். அப்படியானால் யார் தோற்றது? நாமா அவர்களா? இன்னும் சில ஆண்டுகளில் உலகில் முன்னேற்றகரமான நாடாக எமது நாடு அபிவிருத்தி காணும்.

1,000 ரூபா சம்பள உயர்வு குறித்து வேலுகுமார் பேசினார். 2015 தேர்தலில் தமிழ் மக்கள் 80-, 90 வீதம் சில பகுதிகளில் அதனையும் விட அதிக வாக்குகள் அளிக்கப்பட்டன. நல்லாட்சி அரசினால் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சலுகையை கூறமுடியுமா? 05 வருடத்தில் என்ன கிடைத்தது? நல்லாட்சியை உருவாக்க பங்களித்ததால் என்ன கிடைத்தது? என்று காட்டுங்கள். ஒரு தொழிலாவது வழங்கப்பட்டதா?

தமிழ் மக்களுக்கு நாம் செய்த அபிவிருத்தியை ஒருபக்கம் வைத்தாலும் பாடசாலை செல்லும் மாணவர்களில் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றியது யார்?. யுத்த அச்சமின்றி நிம்மதியாக வாழும் சூழலை யார் ஏற்படுத்தினார்கள்? என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக உயர்த்த திட்டம் !

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், 2021-2022 ஆண்டுகளில் தடை இல்லாத மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க லக்விஜய மற்றும் கேரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்கள் வலுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக 1000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2021-2023 க்கு இடையில் தேசிய மின்கட்டமைப்பில் 1000 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை 1000 மெகாவோட்டாக அதிகரிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார். இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் எனவும் பிரதமரால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபா வரையில் உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இதனை பாதீட்டின் ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.