பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்

பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சி – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“85 வருட காலமாக இலவச கல்வி இந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்துடன், கஷ்டப் பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதற்கு பல்கலைக்கழகத்தில் பெறும் கல்வி பாரிய உதவியாக அமைந்திருந்தது.

இந்த உரிமைக்கு இப்போது சவால் விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் கடுமையான மாற்றங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

உயர்கல்விக்கான பொறுப்பை நேரடியாக ஏற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை. அரசாங்கம் கொண்டு வந்துள்ள பிரேரணைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பின் கல்வித் தரத்தைப் பாதுகாப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல” என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரின் முறையற்ற செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் அரசியலமைப்பையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் மலினப்படுத்தும் வகையில் உள்ளன. நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும் சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு இடமளித்தால் அது எதிர்காலத்துக்குத் தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முதல்கட்டமாக கைச்சாத்திட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

 

93வருடகால பாராளுமன்ற ஜனநாயகத்தின் அம்சங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்படுகிறார்.இவரது முறையற்ற செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்தோம்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் சபாநாயகர் பாராளுமன்றத்தில் செயற்படுகிறார்.இவர் தனது தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டை பாராளுமன்றத்துக்குள் செயற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதால் நாட்டு மக்களின் அரசியல் உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் அரசியலமைப்பும் மலினப்படுத்தப்படுகிறது.

 

அண்மையில் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சட்டத்தின் 57 ஏற்பாடுகளில் 34 ஏற்பாடுகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன அவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

 

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. தன்னிச்சையான முறையில் அரசாங்கத்தின் அவசரத்துக்கு அமைய செயற்பட்டார்.

 

சட்டமூலத்தை சான்றுரைப்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு தேசிய மட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும் வலியுறுத்தி போது அதனை கவனத்திற் கொள்ளாமல் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த யோசனைகளில் ஐந்து பிரதான திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகளுக்கு இடமளித்துக் கொண்டிருந்தால் அது எதிர்காலத்துக்கு தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தோம் என்றார்.

பதவி விலகுகிறாரா வெளிவிவகாரத்துறை அமைச்சர்..? – பேராசிரியர் ஜீ.எல் பீரிஸின் நிலைப்பாடு என்ன..?

வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்  பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்  இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே அமைச்சு பதவியை துறக்க தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்த அவர் பிரித்தானியாவுடனான தொடர்பின் தன்மைகள் பற்றி குறிப்பிட்ட போது ,

அண்மையில் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட அரசமுறை பயணம் இலங்கைக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. பல்துறைசார் அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டன.

பிரித்தானியா இலங்கையுடன் முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்பு கொள்ள அதிக கவனம் செலுத்தியுள்ளது. பிரித்தானியா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்திற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அதற்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள் அவசியமாகியுள்ளன.

பொதுச்சபை தீர்மானங்களுக்கமைய பிரித்தானியா இலங்கையுடன் பல்துறைகளில் தொடர்பு கொள்ள தீர்மானித்துள்ளது. இலங்கையில் கொரோனா தாக்கத்தின் பின்னரான பொருளாதார முன்னேற்றம், தென்னாசிய வலய நாடுகளை காட்டிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தலில் முன்னேற்றம், ஏனைய பொது காரணிகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு பிரித்தானியா இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்வது அவசியமாகும். இலங்கை உலக நாடுகள் அனைத்தினதும் நம்பிக்கையை வென்றுள்ளது. பிரித்தானியாவின் தீர்மானம் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது” – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர்,

“ஒரு பொது விதி உள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச்சின்னத்தை அல்லது சிலையை அமைக்க முடியாதென அது கூறுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்த நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒன்றாகும் என்பதால் அதை அகற்ற வேண்டியிருந்ததாக அமைச்சர் கூறினார்.

இந்த நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது குறித்து வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.

“மத்ரஸா பாடசாலைகள் குறித்து நாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருகின்றோம்” – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீீரிஸ்

மத்ரஸா பாடசாலைகளில் கற்பிப்பதற்காக விசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும். அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸா பாடசாலைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு, மாணவர் அனுமதி போன்ற நடைமுறைகளை சீராக்க பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் நேற்று (20.11.2020) தெரிவித்தார்.

இந்த நடைமுறையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், புலனாய்வு அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவது அத்தியாசியமானதெனவும் அவர் கூறினார்.

மத்ரஸா பாடசாலைகள் குறித்து தாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.