பயங்கரவாத தடுப்பு சட்டம்

பயங்கரவாத தடுப்பு சட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் 08 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு கைதிகள், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்றும் மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தமையினால் மூன்று கைதிகளின் விடுதலை காலதாமதமானது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையொப்பமிட்டார்.

இலங்கையில் முகநூலில் கருத்து வெளியிடுவோரை கூட கைது செய்கிறார்கள் – நாடாளுமன்றில் இரா. சாணக்கியன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘அரசாங்கமானது பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதை விடுத்து, இளம் தலைமுறையினரை கைது செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டைவரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை. மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். 47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை நாடாளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும்.

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன?

பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன?

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

‘சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.”- மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் !

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நிகழ்த்தப்படும் மீறல்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மேலோட்டமான திருத்தங்களை நிறைவேற்றியதன் ஊடாக அனைவரையும் ஏமாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான சரத்துக்கள் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களும் ஐக்கிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்மொழியப்பட்ட அந்தத் திருத்தங்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதற்காக, மனித உரிமைகள் அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கு இடமளிக்கக்கூடியவாறான உபகுழு ஆராய்வை அரசாங்கம் தவறவிட்டுள்ளது, அதன்விளைவாக அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க்ககூடியவாறான முக்கிய சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக நபர்களைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதஙற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை இலக்குவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவந்திருக்கின்றது.

தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும்கூட, எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல் நபர்களைப் பலவருடங்களுக்குத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு அச்சட்டம் இடமளிப்பதுடன் பிணை வழங்கலுக்கான வாய்ப்பையும் இல்லாமல்செய்கின்றது.

அத்தோடு சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கு ஏதுவான அர்த்தமுள்ள திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

தற்போது அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கும் பணவீக்கத்திற்கும் வழிவகுத்திருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்திற்கு எதிராகப் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இப்போது இடம்பெற்றுவரும் மீறல்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய அரசாங்கம், சர்வதேசத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோன்று காண்பிக்க முயற்சிக்கின்றது.

இலங்கைவாழ் மக்கள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி தேவைப்படுகின்றது.

இருப்பினும் அரசாங்கம் தமது வெளிநாட்டு பங்காளிகள் நியாயமான மனித உரிமைசார் மறுசீரமைப்புக்களையும், மீறல்களை முடிவிற்குக்கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசில் இருந்த போது கூட்டமைப்பினர் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை.? – வி விக்னேஸ்வரன் பதில் !

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவரது வாசஸ்தலத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நல்லாட்சி அரசின் போது அரசாங்கத்தோடு சேர்ந்து பயணித்த கூட்டமைப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் செயற்பாட்டை அப்போதே நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் தமது நண்பருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதற்காக அதனை செயற்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். கடந்த 43 வருடமாக மக்களுக்கு எதிரான ஒரு சட்டமாக பயங்கரவாத தடைசட்டம் இருந்து வருகின்றது

எனினும் காலம் கடந்தும் கூட்மைப்பின் இளைஞர் அணி இதையாவது செய்து கொண்டு போகிறார்கள் என்பதை நாங்கள் நல்ல விதத்திலே பார்ப்போம். ஆனால் அரசியல் ரீதியாக பிழையான கருத்துக்களை முன்வைக்கவில்லை.

மேலும் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கு தமிழ் பேசும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியாவை 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி கடிதம் கையளித்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரியிருக்கின்றது. இதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு இந்தியை கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் காலம் கனிந்து நல்லதே நடக்கும் என ஏற்கனவே கூறியிருந்தோம் அதன் ஒரு அங்கமாக கூட இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

“அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும்.” – மாவை சேனாதிராஜா

“அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும்.” என கோருகின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. பல ஆயிரக்கணக்கானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 400 இற்கு மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் சிறைகளில் இருப்பதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய அடித்தளத்தில் இருந்து வேலை செய்கின்ற ஏனைய கட்சிகள், தொண்டர்கள், முன்னாள் ஜனாதிபதி, மதத்தலைவர்கள் என பலர் பல மாவட்டங்களில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என குரல் கொடுத்து அதற்கு எதிரான கடிதத்திலும் கையொப்பமிட்டுள்ளார்கள். அதற்கான வேலைகள் எமது கட்சியினர், கட்சியின் வாலிபர் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை தங்களுடைய பௌத்த சிங்கள ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு பயன்படுத்துவார்கள்.  இந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத, இனப்பிரச்சனை தீர்க்கப்படாத விடயங்களுக்கு எதிராக நாங்கள குரல் கொடுகின்ற போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி இந்த போராட்டங்களை ஜனநாயக விரோத அடைப்படையில் அடக்கி ஒடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எமது போராட்டம் மார்ச் மாதம் முழுமையாக நடைபெறும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒண்றிணைந்து இந்த சட்டத்தை நீக்க வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்க வேண்டும் என கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர்.” – சிறிதரன் சாடல் !

தமிழ் மக்களைச் சாகடிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துக் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்கந்தபுரம் பொதுச் சந்தையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளருமான சுப்பிரமணியம் சுரேன், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் சந்தையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது.” – முன்னாள் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் !

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில்  நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருந்த கஸ்டமான ஒரு நிலையில் பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் பயங்கரவாதத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாயின் அந்த சட்டத்தை நாங்கள் முற்றாக நீக்க வேண்டும். எனினும், 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கியது. உதிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் சட்டங்கள் இருப்பது பிரச்சனையல்ல.

ஆனால் அந்த சட்டங்கள் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆகையினால் அந்த சட்டத்தை சீர்திருத்தி நாட்டின் இறைமையை சரியான விதத்தில் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையில் மத ரீதியான, இன ரீதியான பயங்கரவாதம் இருக்குமாயின் அதற்கு எதிராக அதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு சமாந்தரமாக இருக்கின்ற சர்வதேச சட்டங்களை பரிசீலித்து இலங்கையின் பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகப்புக்கும் ஏற்ற வகையில் பயங்கரவாத சட்டத்தை அமைக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தாகவுள்ளது” எனத் தெரிவித்தார்.

“சிறைக்கைதிகள் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபை செல்வாக்கு செலுத்த முடியாது.” – நாமல்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேச சக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என  நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு பிரச்சினைகள் எழாது என குறிப்பிட்டுள்ள அவர், சிறைக்கைதிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்துவேன் என ஜனாதிபதி தனது கொள்கை உரையில் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் இடநெருக்கடியை குறைக்க தீர்மானித்துள்ளோம். நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யப்போகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கைதிகளை தனித்தனியாக அவதானித்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக பல நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் உண்மையிலேயே அரசு கவனம் செலுத்தவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) வெளிவிவகார  அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின் உறுப்பினர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த சட்ட மூலமானது நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றபோதிலும் வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன், இதன்மூலம் இந்த சட்டம் குறித்து அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என்பது புலனாகிறது எனவும் குற்றம் சுமத்தினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை – அலி சப்ரி !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளதாகவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது குறித்து ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் அமைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த குழுவிற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.