நிகழ்நிலை சட்டமூலம்

நிகழ்நிலை சட்டமூலம்

உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் – ஐம்பதிற்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் !

இலங்கை அரசாங்கம் உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டும் அவர் பல்வேறுதரப்பினருடன் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவும் 58 சர்வதேச அமைப்புக கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

சிவில் சமூகத்தினர் மனித உரிமை அமைப்புகளுடனும் அவர்  கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தவறான அறிக்கைகள் தவறான விருப்பங்கள் என்பவற்றிற்கு சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டள்ள வரைவிலக்கணங்கள் காரணமாக பேச்சுரிமையை கண்மூடித்தனமாக கட்டுப்படுத்தப்படலாம் தணிக்கைக்கு அதிகாரம்வழங்கப்படலாம்  என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவிற்கு அதிகளவிலான அதிகாரங்களை சட்டமூலம் வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள் அரசியல்நோக்கங்களுடன் இந்த ஆணைக்குழு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்தும் அச்சம் வெளியிட்டுள்ளன.

பயனாளர்களின் அடையாளங்களை கோருதல் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகளால் அந்தரங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படலாம் இணையவெளி மூலம் கருத்தினை முன்வைப்பதை தடுப்பது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் வேலைவாய்ப்புகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை – ஐ.நா விசேட பிரதிநிதிகள்

ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் மூவரால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

 

இந்த இரு சட்டமூலங்களும் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து வௌியிடுவதற்கான சுதந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான விசேட பிரதிநிதி Irene Khan, அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் செயற்படுதலுக்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule மற்றும் தனியார் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி Ana Brian Nougrères ஆகியோரால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

 

மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தினால் பாதுகாக்கப்பட்ட தனிநபருக்கான உரிமைகள், கருத்து வௌியிடுவதற்கு காணப்படும் உரிமை மற்றும் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கான உரிமை என்பன இந்த இரண்டு சட்டமூலங்களாலும் மீறப்படுவதாக

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மேற்கூறப்பட்ட இரு உலகளாவிய பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக ஐ.நா விசேட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரடனங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

உத்தேச சட்டமூலங்களின் ஊடாக நிகழ்நிலையில் கருத்து வௌியிடுவதற்கான உரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், கடுமையாக அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தடைகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படக்கூடும் என ஐ.நா விசேட பிரதிநிதிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்த சடடமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வெவ்வேறு துறைகளை சேர்ந்தோர் கருத்து வௌியிடுவதற்கு காணப்படும் உரிமை மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கமைய ஆணைக்குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் பக்கசார்பற்ற முறையில் செயற்படும் ஊடக நிறுவனங்களை தண்டிக்கவோ அல்லது உரிமத்தை இரத்து செய்யவோ நாட்டின் நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமென ஐ.நா விசேட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இந்த ண்காணிப்பு செயற்பாடு சுதந்திரமான மற்றும் அழுத்தங்களுக்கு உட்படாத அமைப்பாக இருக்க வேண்டும் எனவும் அதில் அரசியல் தொடர்புகள் இருக்கக்கூடாது எனவும் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த இரு சட்டமூலங்க​ளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐ.நா விசேட பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு !

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் குறித்த சட்டமூலங்கள் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதேநேரம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது குறித்த சட்டமூலத்திலுள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என பல்வேறு தரப்பினர்களினாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதன் பின்னணியிலேயே அனைத்து தரப்பினரதும் ஆலாசேனைகளை பெற்று குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷச தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும் வகையிலேயே குறித்த சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

 

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் (Online Safety Bill) தொடர்பில் வர்த்தமானியில் அறிவிப்பு!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் (Online Safety Bill) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Online Safety Commission எனப்படுகின்ற நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது, சில தொடர்பாடல்களை தடை செய்வது, தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இந்த சட்டமூலத்தின் பிரகாரம், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர் அடங்கிய ஆணைக்குழுவொன்று பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களது பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.

 

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

 

தடை செய்யப்பட்ட அறிக்கையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபர்களுக்கு அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு உத்தரவுகளை வழங்கவும் ஏதேனும் தடை செய்யப்பட்ட அறிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமலாக்குவது அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை உகந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

 

இந்த ஆணைக்குழுவிற்கு எதிராக எவ்வித சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுக்க முடியாதென்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல், சிறுவர் துஷ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய்நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இந்த சட்டத்தின் கீழ் தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்க, அபராதம் விதிக்க அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.