நாமல் ராஜபக்ஷ

நாமல் ராஜபக்ஷ

பண மோசடிகளுக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.”- நாமல் ராஜபக்ஷ

ஒஸ்பென் மெடிக்கல் மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய பணமோசடி குறித்து தமது குடும்பத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப்பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிப் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகமான ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமானது அம்பலப்படுத்தியுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் 18.8 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

இலங்கையில் ஒஸ்பென் மெடிக்கலின் முதல் 2.1 மில்லியன் டொலர் பரிவர்த்தனையானது பிரித்தானிய விர்ஜின் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் இடையில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்த நிமல் பெரேரா என்ற இடைத்தரகருக்கு இந்த நிறுவனம் இரகசியமாக சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில், பண தூய்தாக்கல் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அது வழிவகுத்ததாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் தான் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் பணம் இல்லாததே பெரும் பிரச்சினை.” – அமைச்சர் நாமல்

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பரில் உலக செல்வந்தர்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது அதன்படி விளையாட்டுத் துறையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உள்ள சில விளையாட்டுகளில் முறைகேடான இலாபத்தை முதலீடு செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

சமிந்த விஜேசிறி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார்.

கறுப்பு பணம் வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுகிறது என்றும் அனைத்து விளையாட்டு சங்கங்களும் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினை நிதிப் பற்றாக்குறையாகும் என நாமல் பதில் வழங்கியுள்ளார்.

அனைத்து விளையாட்டு சங்கங்களையும் அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடுமாறு நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

“உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” – அமைச்சர் நாமல்

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ loதெரிவித்தார்.

நேற்று (20.12.2020) பாராளுமன்றில் புதிய கொரோனா வைரஸை குணப்படுத்துவதில் 95% வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலர் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசாங்கம் ஒருபோதும் உலக சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசிக்கு மக்களை கினிப் பன்றிகளாக பயன்படுத்தாது.

உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ அதிகரிகள், அரசு ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எடுத்த முடிவுகளின்படி, தொற்றுநோயின் இரண்டாவது அலைகளையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.