நாமல் ராஜபக்ஷ

நாமல் ராஜபக்ஷ

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கும் – ஜே.வி.பிக்கும் தொடர்பு உள்ளது.” – நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ!

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறோமே தவிர சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

 

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார். அவ்வாறாயின் இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்துக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

“அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரியது.” – நாமல் ராஜபக்ஷ

இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தனது கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார் மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

அதேவேளை இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“நாமல் ராஜபக்ஷ அரசியல் அறிவு இல்லாத பிராய்லர் கோழி” – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிராய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விபரித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.

“அவர் ரணிலைப் போன்றவர், அவர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மக்கள் கோபப்படுவது நியாயமானது, அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார், அவர் வளர்ச்சியடையாத பிராய்லர் கோழி”

நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த வாரிசு அரசியலே காரணம். கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டலஸ் அழகப்பெருமதான் அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ராஜபக்சக்களுக்கு பதவி !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“உகாண்டாவில் சொத்து இருப்பதை உறுதிப்படுத்தினால் அதனை நாட்டுக்கு வழங்க தயார்.”- நாமல் ராஜபக்ஷ

தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மற்றும் பல சர்வதேச வங்கி கணக்குகள் இருப்பதாகவும், உகாண்டாவுக்கு பணம் அனுப்பியதாகவும் தம்மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூறப்படுகின்ற பொய் என்றும், உண்மையில் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடமும் நாட்டிடமும் ஒப்படைக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.

“நாமல் ராஜபக்ஷவுக்கு போஷாக்கு குறைபாடுள்ளது“ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தன்னைப் போலவே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஓரளவிற்கு இருந்ததாகவும் ஆனால் ஊடகங்களில் அவ்வளவாக செய்திகள் வெளியாகவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இப்போது முட்டை, பால் மா, மீன், இறைச்சி போன்றவற்றின் விலை அதிகமாக இருப்பதாகவும் மக்களால் அவற்றை வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் மீன்கூட சாப்பிடுவதில்லை என்றும் அதனால் தான் இப்போது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாகவும் மீனைக் கூட உண்ணாத நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையைச் சேர்ந்த பளு தூக்கும் வீரரும் காய்கறிகளை மட்டுமே உண்கிறார் என்றும் அவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு நாமல் ராஜபக்ஷ தான் காரணம் என்பது வேடிக்கையானது – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை கிரிக்கெட் அணி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. மிக நீண்ட காலமாக பெரிய வெற்றிகள் எவையும் கிடைத்திராத நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் முன்னைய நிலைக்கு திரும்பியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்ற நிலையில் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவேளை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே தற்போது இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வெல்ல காரணம் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு நாமல் ராஜபக்ச தான் காரணம் என கூறுவது நகைச்சுவையானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

இலங்கை அணியின் வெற்றியின் பெருமை நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமில்லை, அது கிரிக்கெட் வீரர்களுக்கே உரித்தானது எனத் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப நான் கடுமையாக பாடுபட்டேன் – நார்மல் ராஜபக்ஷ

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும் இன்னும் பல வெற்றிகள் வரவுள்ளன என்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் யார் என்பது முக்கியமில்லை என்றும் அமைப்பில் தலையிடாவிட்டால் வெற்றிகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.

புதிய அணித்தலைவரை கொண்டு வந்த பின்னர், இலங்கை அணி போட்டிகளில் தோல்வியை சந்திக்கும்போது நான்  விமர்சித்தேன்.

விளையாட்டு என் இரத்தத்தில் உள்ளது, நான் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்தேன். என்னை உருவாக்க அல்ல.

அமைப்பில் யாராவது தலையிடும்போது வீரர்கள் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்ல மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி – நாமல்ராஜபக்ச

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார்.

தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான தலைமைத்துவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். அதற்கான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

70 மில்லியன் ரூபா முறைகேடு – நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர் !

இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.