இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு ஹோமாகமையில் அண்மையில் இடம்பெற்றது.
இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,
இற்றைவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு காரணமாக நாங்கள் அனைவரும் கண்டுகொண்டிருந்த கனவு கலைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இதுவரை சிறைப்பட்டிருந்த அரசியல் கட்சிகளை மறந்து எமது பிள்ளைகளுக்காக சுதந்திரமாக மூச்செடுக்கக்கூடிய ஒரு நாட்டை சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்காகவும் உருவாக்கிட திடசங்கற்பத்துடன் அணிதிரண்டுள்ளோம்.
உலகின் ஏனைய நாடுகள் பெற்றுள்ள கலாசார மற்றும் சமூக சுதந்திரத்தை நிலவுகின்ற ஊழல்மிக்க அரசியல் முறைமையே இழக்கச்செய்துள்ளது.
இந்த கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழல்மிக்க அரசியலையும் முடிவுக்கு கொண்டுவந்து முன்நோக்கி நகர நாமனைவரும் யதார்த்தத்தில் அணிதிரண்டிருக்கிறோம்.
எனினும் இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள்.
சம்பிரதாயபூர்வமாக மூதாதையர்களின் மரபுரிமையால் அரசியலில் ஈடுபடுவதற்குப் பதிலாக பெண்களுக்கு உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் தேசிய மக்கள் சக்தியைச்சுற்றி அணிதிரண்டு வருகிறோம்.
ஒட்டுமொத்த பெண்கள் தலைமுறையினருக்கும் முன்னணிக்குவர ஊக்கமளித்த, பலம்சேர்த்த, வழிகாட்டிய மற்றும் தலைமைத்துவம் வழங்கிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை நாங்கள் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறோம்.
இதற்கு அப்பால் நாங்கள் எத்தகைய நாட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்? அமைதிநிறைந்த, சகவாழ்வுகொண்ட, சுதந்திரமான கலாசாரத்தை உருவாக்குகின்ற ஆட்சியொன்று எமக்கு அவசியமாகி உள்ளது.
அதற்குள்ளே பெண்களாகிய எங்களை அநீதிக்கு, அநியாயத்திற்கு, சமத்துவமின்மைக்கும் இழுத்துப்போடுகின்ற அனைத்து நிபந்தனைகளையும் அகற்றி பொருளாதார நியாயத்தைக்கொண்ட கலாசார சுதந்திரத்தை உருவாக்கிகொள்ள வேண்டும்.
அத்தகைய ஆட்சியை உருவாக்கிக் கொள்வதற்காக நாங்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அந்த ஆட்சியை உருவாக்க முடியும். இதுவரை நாங்கள் பயணித்த பாதையில் விரிக்கப்பட்டிருந்த சவால்களை சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் ஒன்றிணைந்தால் மாத்திரமே வெற்றிகொள்ளமுடியும்.
எமது பிள்ளைகளுக்காக தடைகளின்றி முன்னேறிச்செல்லக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குகின்ற பொறுப்பு எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றுசேராத அனைவரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்று மேலும் தெரிவித்தார்.