தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

“தமிழர்களின் சமாதானமான வாழ்க்கைக்காக அமெரிக்கா பயணிக்கும்” – வெளியாகியுள்ள அமெரிக்காவின் அறிவிப்பு !

இலங்கையில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, வலியுறுத்தினார். அத்தோடு, நிரந்தர சமாதானத்திற்காக இலங்கை தமிழர்களுடன் அமெரிக்கா இணைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மற்றும் உலகத் தமிழர் பேரவை  ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ட்விட்டர் பதிவில்,

இலங்கைத் தமிழ் மக்களுடன் நிரந்தர சமாதானத்தையும், அவர்களின் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முழுக் குரலையும் தேடுவதில் தானும் இணைந்து கொள்வதாக லூ கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும் அவர்கள் வெள்ளை மாளிகை உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” – கூட்டமைப்பிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி !

“இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

TNA

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒருமித்த நாட்டுக்குள்தான் தமிழர்கள் தீர்வு கேட்கின்றார்கள். எனவே, அவர்களின் அபிலாஷைகளான நீதி, சமாதானம், சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இலங்கை அரசின் பிரதான கடமை என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் நான் எடுத்துரைத்துள்ளேன்.

மாகாண சபை முறைமையில் மாற்றம் வேண்டாம் எனவும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இந்தியாவினதும் இலங்கையினதும் இணக்கத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதை இலங்கை அரசின் கவனத்துக்கொண்டு வந்துள்ளேன்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளைச் செய்யும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனில் இந்தியா அதிக சிரத்தை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது ஒரு விளையாட்டுத் தனமான விடயமல்ல” – எச்சரிக்கின்றார் சித்தார்த்தன்.

“அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் துணிச்சல் அரசாங்கத்திற்கு இல்லை. இது ஒரு விளையாட்டுத்தமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

“13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் முயற்சிகள் ஏதும் திறைமறைவில் முன்னெடுக்கப்டுக்கப்பட்டால் அதனை முறியடிக்க உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் பலவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் தமிழ் செய்தி ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “13வது திருத்தச் சட்டம் தமிழ்த் மக்களுக்கான முழுமையான தீர்வு இல்லை என்பதை தமிழ் மக்கள் அதனை அறிமுகப்படுத்திய போதே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இது இருந்தபோதிலும் இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப அதிகாரங்களை பகிரக் கூடிய ஒரு தீர்வுத்திட்டமாக இது உள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென பலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் 13வது திருத்தச் சட்டம் குறித்து எவ்வித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

13வது திருத்தச் சட்டத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. இது ஒரு விளையாட்டுத்தனமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா இந்த விடயத்தை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்காது. 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்காதென்றே கருதுகிறோம். அதற்கான துணிவு அரசாங்கத்திடம் இல்லை.

இந்தியாவில் தற்போது மோடி அரசாங்கம் உள்ளதால் அவர்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்களென சிலர் கூறுகின்றனர். அவ்வாறில்லை. மோடி அரசாங்கமோ அல்லது ராஜீவ் அரசாங்கமோ அல்ல இதில் முக்கியம். இந்திய அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அரசாங்கங்கள் மாறினால் கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது போன்று இதனை அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாது. இந்தியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் அதன் வெளிவுறவுக் கொள்கை மாறாது. இதுதான் ஆரம்பகாலம் முதல் இந்தியா கடைப்பிடிக்கும் வரலாறு.

நாம் இந்தியாவுடன் இராஜந்திர பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சந்திப்புகளை தற்போது மேற்கொள்வது கடினம். என்றாலும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதும் நகர்வுகளில் ஈடுபட்டால் நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.” என்றுள்ளார்.