ஜே.வி.பி

ஜே.வி.பி

“பாதுகாப்பு இல்லாவிட்டால் அனைத்து இலங்கையர்களையும் மீள அழையுங்கள்.” – ஜே.வி.பி கோரிக்கை !

பாகிஸ்தானில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்தாவிட்டால், அங்கு பணிபுரியும் அனைத்து இலங்கையர்களையும் திரும்ப அழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இலங்கைப் பிரஜை கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும், குற்றவாளிகளைத் தண்டிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் எங்கும் மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

‘அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க இனவாதத்தை கையிலெடுத்துள்ளது.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் ஞானசார தேரரைப் போன்ற ஒருவரை இதன் தலைவராக நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதியின் மன நிலையை தெளிவாக உணர முடிகிறது.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை (3)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் சீனி என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அவற்றை மூடி மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது.  2019 இல் இனவாதத்தை தூண்டியதைப் போலவே தற்போது இந்த செயலணியின் ஊடாக இனவாதத்தையும் , மதவாதத்தையும் தூண்டிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஞானசார தேரரை இதன் தலைவராக நியமித்துள்ளமையின் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகிறது.  செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை அவரது தவறல்ல. ஆனால் அவரை தலைவராக நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதியின் மனநிலை எவ்வாறு என்பது தெளிவாகிறது. எனவே தற்போது அவரது மூளையை சோதிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார்.  தற்போதைய ஜனாதிபதி அவரை செயலணியின் தலைவராக நியமித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்காத அரசாங்கம் , அருட் தந்தை சிறில் காமினியை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளது.

தன்னை கைது செய்யாமலிருப்பதற்கு அருட்தந்தை சிறில் காமினி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.  அவர் கைது செய்யப்படுவாராயின் கத்தோலிக்க மக்கள் நிச்சயம் வீதிக்கு இறங்கி கடும் எதிர்ப்பை வெளியிடுவர்.  இதன் மூலம் பௌத்த மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் , வேறு வழிகளில் முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும்  முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது.  இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது.

அரசாங்கத்தின் இவ்வாறான சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு ஜே.வி.பி பாராட்டு !

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு மக்கள் விடுதலை முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது.

இருப்பினும் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த முடிவு புத்தாண்டு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்றும் இது அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

1,000 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளல் உட்பட பல்வேறு தோல்வியுற்ற முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 5,000 கொடுப்பனவு வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்ட நேரத்தில், அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றும் நாடு, பொருளாதாரம் அல்லது மக்கள் மீதான அக்கறை குறித்து அதிகாரிகளுக்கு புரிதல் இல்லை என்பதை இந்த முடிவு காட்டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” – அனுரகுமார திஸாநாயக்க

“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விவகாரத்தை சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தும் செயற்பாடாகக் கருதாது எமது பிரஜைகள் மீதான அக்கறையில் உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் 2009ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து பல்வேறு விடயங்களைச்  சுட்டிக்காட்டியிருந்தது.

அத்தோடு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா?, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போன்ற உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்.

நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொது ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் எனவும், சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு சகல மக்களுக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீண்டகாலமாக நாம் கோரி வருகின்றோம்.

தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவாத் தீர்மானத்தால் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என நம்ப முடியாது. அதேபோல் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் எனவும் கூறிவிட முடியாது.

ஒரு சிலர் அல்லது அரசு செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் உள்ளது.” என்றார்.

“கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு” – ஜே.வி.பி

“கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு” என ஜே.வி.பி குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு.

அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தபடி மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் முதலாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை குறைவடைந்ததால் மக்கள் அவர்கள் தெரிவிப்பதை செவிமடுக்க தவறிவிட்டனர்.

சுகாதார அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் மற்றும் சபாநாயகரும் தேவையற்ற ஊக்குவிப்புகளை முன்னெடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.