ஜே.வி.பி

ஜே.வி.பி

“அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார் ஜனாதிபதி ரணில் “- அநுரகுமார திஸாநாயக்க

அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஒழிந்து கொண்டிருக்கிறார் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற காலத்திலிருந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மக்கள் மத்தியில் பொதுக்கூட்டமொன்றைக்கூட நடத்தி நாம் காணவில்லை.

 

மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வராத அவர், அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார்.

 

இன்று வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதியோ நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதாக குறிப்பிடுகிறார்.

 

மத்திய வங்கியின் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது. இதில், 68 வீதமான மக்கள் இரண்டு வேளை உணவினை மட்டுமே உற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு, கடனை திருப்பிச் செலுத்தியும் எரிபொருள், எரிவாயு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இவ்வாண்டு 600 கோடி டொலர் கடனை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

 

அரச சொத்துக்களை விற்பனை செய்து, அதன் ஊடாக கிடைக்கும் டொலரைக் காண்பித்து, இந்த நாடு முன்னேறி விட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“தோல்வியடைந்த ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதமே.ஆதலால் பிரியாதிருப்போம்.”- யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் !

“பிரிப்பதற்கு இடங்கொடோம்  ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், தோல்வியடைந்த ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை  தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சி..?

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வழங்கும் செயற்பாட்டின் பின்னணியில், அரசாங்கம் ஏதோ ஒரு விடயத்தை மூடிமறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“வங்கிகளை அரசாங்கம் 5 நாட்களுக்கு மூடுவதன் நோக்கம், ஏதோ ஒரு விடயத்தை மறைப்பதற்காகத் தான்.

நான் மக்களால் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட, கொழும்பு மாவட்டத்திலேயே அதிக படியான வாக்குகளைப் பெற்ற இரண்டாவது உறுப்பினராக உள்ளேன்.

கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ளேன்.ஆனால், வங்கிகளின் விடுமுறை தொடர்பாக எனக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற நிதிக்குழுத் தலைவரிடமும் நான் இதுதொடர்பாக கேட்டிருந்தேன். அவருக்கும் தெரியாது.

ஜனாதிபதி இவ்வாறான விடயங்களை செய்வதில் கைத் தேர்ந்தவர். ஏதோ ஒரு விடயத்தை மூடி மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகிறார். நாம் இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுபவர்கள்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லவதற்கு ஜே.வி.பியினர் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

ஆனால், நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. நாம் தான் முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வோம் என்று அறிவிறுத்தியிருந்தோம். அரசாங்கம் அங்கு சென்ற விதம் பிழையானது என்பதால்தான் அந்த செய்றபாட்டிலிருந்து நாம் ஒதுங்கினோம்.

ஐ.எம்.எப். இற்கு செல்ல அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியுமா? உலக வங்கிக்கு செல்ல டில்வின் சில்வாவுக்கு முடியுமா?

அல்லது, லால் காந்தவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு செல்லதான் முடியுமா? இல்லை.

அங்கு எல்லாம் செல்லக்கூடிய நபர்கள் எமது அணியில்தான் உள்ளார்கள்.ஜே.வி.பியை பொறுத்தவரை ஐ.எம்.எப்., உலக வங்கியிடம் செல்வதெல்லாம் தவறான காரியங்களாகும்.

தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டுக்குள் வரவும் அவர்கள் எதிர்ப்பினைத் தான் வெளியிடுகிறார்கள்.

 

முதலீட்டாளர்கள் இங்கு வரவும் அவர்கள் எதிரானவர்கள். இங்கு முதலீடு செய்தவர்களையும் கப்பம் கோரி விரட்டியடித்தால், எவ்வாறு இந்த நாட்டை முன்னேற்றுவது?” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 88 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன – அனுரகுமார திஸாநாயக்க

நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் 88 அரச நிறுவனங்களை விற்பனை செய்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

விற்பனை மற்றும் கடனை பெறுவதன் மூலம் நாடு முன்னேறி இருந்தால், அதற்கான வெற்றிக்கிண்ணத்தை ரணில் விக்ரமசிங்கவே பெற்றிருப்பார். எமது நாட்டுக்கு கடனை பெற முடிந்த தலைவர் அல்லது தலைவர்களை தேட வேண்டுமா?. அடுத்தது விற்பனை, விற்பனை என்பது புதிய விடயமல்ல. எமது நாட்டில் தொழிற்சாலைகள் இருக்கின்றதா?. எதுவுமில்லை. 1980,83 மற்றும் 83 ஆம் ஆண்டுகளிலேயே முதலில் விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

துல்ஹிரி, மத்தேகொட, பூகொட துணி உற்பத்தி தொழிற்சாலைகளை விற்பனை செய்தனர். 30 ஆண்டுகளாக அனைத்தையும் விற்பனை செய்தனர். இதுவரை 88 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

நாட்டின் பொருளாதர பிரச்சினைக்கு கடன் பெறுவதே தீர்வு என்றால், ரணில் அந்த காலத்திலேயே நாட்டை முன்னேற்றி இருக்கலாம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று ஒரு பில்லியன் டொலர்களை பெற்றனர். எங்கே அந்த பணம். நாடு முன்னேறி இருந்தால், ஏற்கனவே முன்னேறி இருக்க வேண்டும்.

விற்பனை செய்வதும், கடனை பெறுவதும் எமது நாட்டை முன்னேற்றும் வழிகள் அல்ல. அதற்குள் கொள்ளைகள் நடக்கின்றன. ஹிங்குரான சீனி தொழிற்சாலையில் கொள்கை நடக்கின்றது.

ஹிங்குரான சீன தொழிற்சாலையை விற்பனை செய்யும் போது 6 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டிருந்ததுடன் 600 ஏக்கரில் கன்றுகள் பயிரிடப்பட்டிருந்தன. எனினும் களஞ்சியத்தில் இருந்த சீனியின் பெறுமதியை விட குறைவான விலைக்கே தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டது.

செவனகல தொழிற்சாலையை ரணில் யாருக்கு விற்றார்? தயா கமகேவுக்கு விற்பனை செய்தார். புத்தளம் சீமெந்து தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டது. எங்கே அந்த பணம்? புத்தளம் சீமெந்து தொழிற்சாலையை விற்பனை செய்யும் விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தது.

அன்று டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின்னர் எயார் லங்கா விற்பனை செய்யப்பட்டது. இது பகிரங்க கொடுக்கல், வாங்கல் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

‘ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பதற்கே IMF நிதி வழங்குகிறது.”- ஜே.வி.பி சாடல் !

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஜே.வி.பி ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பது மாத்திரமே சர்வதேச நாணயநிதியத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது அனுமதியளித்துள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தசாப்த காலப்பகுதியில் அனுபவித்த மிக மோசமான நாணய நெருக்கடி காரணமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்த அமைச்சர்களிற்கு தற்போது  சர்வதேச நாணயநிதியத்தின கடனை தொடர்ந்து புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கிழக்கில் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.” – அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி.” என வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்க அரசியல் என்பது தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற அல்லது அழிக்க நினைக்கின்ற நாசமாக்க நினைக்கின்ற இந்த அரசியலுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆயிரம் வீதம் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள். வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு இந்தியா வடகிழக்கு பிரச்சனை ஒரு தீர்வாக கொண்டு வந்தது. வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் வந்த பொழுது இணைந்த வடகிழக்கு இருந்த போது அதன் பின் இந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டது.

இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி கட்சியாகும். மக்கள் விடுதலை முன்னணி இன்று காலையில் ஒரு செய்தியை பார்த்தேன் .13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி  ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் .

எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களுக்கு விருப்பம் இல்லாத அரசியல் தீர்வு எமக்கு வேண்டாம் என்று  சம்பந்தன் தெரிவித்ததற்கு அமைவாக நாங்களும் அதை எதிர்க்கின்றோம் என்று சுனில் ஹந்துன் நெத்தி  தெரிவித்துள்ளார்.

கிழக்கில் எங்களது அரசியல் நிலைப்பாடு தமிழர்களின் நில வள பொருளாதார இருப்பை தமிழர்களோடு இருந்து கொண்டு முதுகில் குத்துகின்ற இந்த நல்லிணக்க அரசியலுக்கு எமது கழகம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது. ஆகவே வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடகிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும் இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் .

இணையாத வடகிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடமாகணம் ஓரளவு தப்பி பிழைக்கலாம் கிழக்கு தப்பி பிழைக்காது. காணி, பொலிஸ் அதிகாரம் இல்லாமலே கிழக்கு மாகாண ஆளுநருடைய சில ஏக்கத்தகாத நடவடிக்கைகள் சில திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு துணை போகின்ற தன்மை சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இணைந்த வட-கிழக்கு இல்லாமல் தனியாக கிழக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் உங்களது நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நாங்கள் உறுதியாக சொல்லுகின்றோம் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் இணைந்த வடகிழக்குக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சீர்திருத்தத்துடன் கூடிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இணைந்த வடகிழக்கில்தான் கிழக்கை பாதுகாக்க முடியும். கிழக்கை பாதுகாத்தால் தான் வட-கிழக்கை இணைக்க முடியும் என்று கூற விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிமார்களை பராமரிக்க மக்கள் பணத்தை செலவிடாதீர்கள்.” – அனுரகுமார திஸ்ஸ நாயக்க

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைவியார்களை பராமரிப்பதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை செலவிடும் நடைமுறையை நிறுத்துமாறு ஜாதிக ஜன பலவேகய (JJB) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்:
நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும்போது அரசியல் குடும்பங்களை பராமரிக்க முடியாது. 1993 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதிலிருந்து அவரது துணைவியார் ஹேமா பிரேமதாசவுக்கு அரச நிதி வழங்கப்படுகிறது. அதேபோல முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆடம்பர செலவுகளுக்காக பெருந்தொகை அரச நிதி ஒதுக்கப்படுகிறது.
பெரும்பான்மையான மக்கள் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையிலும் முன்னாள் சந்திப்பதிகளுக்கு அரசு பெருந்தொகையான நிதியை ஒதுக்கியிருக்கிறது. ஜே.ஜே.பி அரசாங்கத்தை அமைத்தால், இவ்வாறான வீண்விரயங்கள் உடனடியாக நிறுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையில் உள்ள அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு நியாயமான காரணமொன்றை வழங்க முடியுமா என கேள்வியெழுப்பிய அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாக்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்களான சாகல ரத்நாயக்க மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு கணிசமான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

“தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவோம்.” – ஜே.வி.பி

“தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவோம்.” என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான விவாதத்தைப் பயன்படுத்தி பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை தூண்டிவிடுவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறான கருத்துக்கள் ஒரு பொறி என்றும் இதற்கு மக்கள் பலியாக கூடாது என்றும் கோரியுள்ளார்.

13வது திருத்தம் குறித்து ஜனாதிபதி குறிப்பிட்ட அந்தத் தருணம் வரை இந்த நாட்டில் எவரும் இந்தத் திருத்தம் பற்றிக் கவலைப்பட்டதில்லை என்றும் டில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு மற்றும் விலைவாசி உயர்வை மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமது அரசாங்கம் அமைக்கப்பட்டால், தீர்வு பொறிமுறையுடன் கூடிய புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலனுக்காக 13 ஆவது திருத்தத்துக்கு ஜே.வி.பி முழுமையாக ஆதரவு வழங்கும் – அனுர குமார திஸாநாயக்க

மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி ஆதரவளிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறித்த விடயத்தினை கூறியுள்ளார்.

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நேரம், சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கப்பாடான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நோக்கத்திற்காக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது நிலைமை மாறி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் காணப்படுகின்றது.” – அநுரகுமார திஸாநாயக்க

“இலங்கையில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் காணப்படுகின்றது.” என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இன்னொரு தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட கதிரையின் பாரத்தை சுமக்கும் அளவுக்கு எமது தலைவர்களின் மனதளவில் வலிமையானவர்கள் கிடையாது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாத, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தாவ முடியாத, அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திய, மனித உரிமையை வலுப்படுத்தக்கூடிய, சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு முழு உரிமையுடன் வாழக்கூடிய புதிய அரசியலமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டே ஆக வேண்டும்.

ஒரு நாடு வளமடைய வேண்டுமெனில் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

ஆனால், இன்று எமது நாட்டிலோ பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இப்படியாக ஒரு நாட்டினால் ஒருபோதும் முன்னேற முடியாது. நீதிமன்றக் கட்டமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும்.

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லாது போனால், மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவிடும்.  இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

இன்று உலக நாடுகளாகட்டும், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களாகட்டும், அனைத்துமே இலங்கை தொடர்பாக அதிருப்தியையே வெளிப்படுத்தியுள்ளன.

சிங்கள- தமிழ்- முஸ்லிம். பரங்கியர் என அனைவரும் சமாதானமாக வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மொழி, மத உரிமை முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாக மாற வேண்டும். மக்களிடத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்தாமல், எம்மால் ஒருபோதும் பொருளாதாரத்தையோ நாட்டையோ முன்னேற்ற முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.