ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய

பதவி விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய – எப்போது..?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“தோல்வியடைந்த ஒருவனாக என்னால் பதவியிலிருந்து விலக முடியாது.”- ஜனாதிபதி கோட்டாபய

பதவிக்காலம் நிறைவடையும் வரை பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது. எனக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நான் பதவி விலகப்போவதில்லை. அத்துடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை”, எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை.”- ஜனாதிபதி கோட்டாபய

சமாதானம் மலர்ந்த தாய்நாட்டில் கடும்போக்குவாதம் அல்லது இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் பல்வேறு சவால்கள் எழுந்தபோதும் தேசப்பற்றாளர்களாக இராணுவ வீரர்கள் முன்னோடிகளாக செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள சவால்கள் தொடர்பாக கவனமாகவும் விழிப்புடனும் ஆராய்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு வரலாற்றின் ஊடாக இராணுவ வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார, அரசியல் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்க உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு குழுக்கள் முயற்சிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அந்த முயற்சியை ஒன்றிணைந்து தோற்கடிப்பதன் ஊடாகவே வீரமிக்க இராணுவ வீர்கள் நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்பை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.

“சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.“- ஜனாதிபதி கோட்டாபய

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்குவதற்கு உரிய பிரேரணைகள் அரசியலமைப்பின் பிரகாரம் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று (08) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“நான் பதவி விலகப்போவதில்லை.”- ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

“கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாடெங்கும் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எனக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளால் களமிறக்கப்பட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரைத் தோற்கடித்து 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆணையுடன் நான் ஆட்சிப்பீடம் ஏறினேன்.

தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதி பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். நாடாளுமன்றத்திலும் எனக்கு எதிராக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை கொண்டுவருவதற்குரிய பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் பொங்குகின்றனர்.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் எதிரணியினர் நடத்திய போராட்டங்களும் பகிரங்கப்படுத்தியுள்ளன. எனவே, நாட்டில் எனக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் மக்கள் போராட்டங்கள் அல்ல” – என்றார்.

“குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.” – ஜனாதிபதி கோட்டாபய

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த போது ,

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும், இவ்வாறான நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது.  என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எனது ஒரே நோக்கமாக இருக்கின்றது. ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.

நான் ஆட்சிக்கு வரும் போது எதிர்பாராத விதமாக கொவிட் பரவல் ஆரம்பமானதுடன், அதனால் நான் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போயுள்ளது. செல்வந்த நாடுகளில் இருந்த பொருளாதார பலம் காரணமாகவே அவை கொவிட் பரவலை முறையாக எதிர்கொண்டன. அத்துடன், எனக்கு யாருடனும் போட்டி இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது ஒரே குறிக்கோள். சிலரிடமிருந்து அதற்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.

கூட்டாகச் செயற்படும் கலையை நான் நன்கு அறிந்தவன். ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் ஜனநாயகக் கட்டமைப்பிற்குத் தேவையான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

“மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்கள் நீதிமன்றம் சென்றது தவறு.” – ஜனாதிபதி கோட்டாபய

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, முக்கிய விடயங்களில் அரசாங்கத்திற்குள் காணப்படும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வினவியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு எதிராக குறித்த அமைச்சர்கள் இருந்தால் அவர்கள் பதவி விலகி நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும் அவர்கள் அவ்வாறு செய்யாதமை அரசாங்கத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் அவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்த போது, நீதியரசர் மார்க் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பாக தீர்ப்பு வழங்கியிருந்தார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி சமுர்த்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ! – ஜனாதிபதி கோட்டாபய

குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும் எனவும் சமுர்த்தி நிவாரணத்தை குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்ற வேண்டுமெனவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி, மனைப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், தொழில் அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குடும்பங்களினதும் வருமானத்தை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தின் வளர்ச்சி மக்கள் மைய பொருளாதாரத்தை மேம்படுத்தல் என்ற விடயங்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமுர்த்தி வழங்குவதற்காக வருடாந்தம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவிடப்படகின்றது என்றும் இந்த தொகை நாட்டுக்கு முதலீடாக வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமுர்த்தி பயனாளிகளை நிவாரணம் பெறும் மனநிலையில் இருந்து மீட்டெடுத்து நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வலுவூட்டப்பட்ட சமுர்த்தி பயனாளிகளை சமுர்த்தி செயற்திட்டத்தில் உள்வாங்கி நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வழிமுறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நுண்நிதி கடன்கள் மூலம் பிரதிபலனை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் நிதி இயலுமை குறித்து விளங்கிக்கொள்வது நுண்நிதி நிறுவனங்களின் மிக முக்கிய பணியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக மாற்றத்துக்கு மக்கள் மத்தியில் உத்வேகம் தோன்றியிருக்கும் இந்த நேரத்தை வீட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் போன்ற சவால்மிக்க நிலைக்கு முகங்கொடுத்த மக்களுக்கு தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வங்கிகள் சலுகை வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலமே மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.