சுகாதார அமைச்சர் கெஹலிய

சுகாதார அமைச்சர் கெஹலிய

தனியார் மயமாகும் இலங்கையின் மருத்துவக்கல்வி – 3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி !

3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

மருத்துவம் படிக்க தகுதியான பல மாணவர்கள் உள்ளனர். எனினும் நாட்டில் தற்போது 11 பல்கலைக்கழகங்களே உள்ளன. இது போதாது. எமது பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டமும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதே தரத்தில் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவருவோரை உலகிற்கு நாம் வழங்க முடியும்.

எனவே அதற்கு இணையான திட்டத்தை தயாரிக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் 3 தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க நான் அனுமதி அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பாராளுமன்றில் மனிதக்கொலையின் பக்கம் 113 பேர் நின்றனர்.” – எதிர்க்கட்சித்தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மை குறித்து நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும், பாரபட்சமின்றி நடுநிலையான விசாரணையின் மூலம் மேதகு கர்தினால் தலைமையிலான கத்தோலிக்க சமூகத்திற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்று (9) கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் பிரதான சூத்திரதாரியாக இருப்பவர்கள் யார்? இதை திட்டமிட்டது யார்? இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்?இது தீவிரவாத திட்டமா? இதில் அரசியல் நோக்கங்கள் இருந்ததா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், உண்மையை வெளிப்படுத்துவதில் தயங்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடும் போது;

நியாயமான விசாரணை கோரப்படும் போது அலற வேண்டிய அவசியமில்லை என்றும், அரசாங்க தரப்பு நபர்கள் இவ்வாறு கூச்சல் போடுவதால் இதில் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும், கைகள் சுத்தமாக இருந்தால்,அந்த கைகளில் இரத்தக்கறை படியவில்லை என்றால், அரசியல் பேரங்களுக்காக பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால்,உண்மையைத் தேட அச்சப்பட வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

திருட்டு,மோசடி,பொய்,மனித கொலை ஆகியவற்றுடன் 113 பேர் நின்றதாகவும், 74 பேர் மக்களை வாழ வைக்கும் பக்கம் நின்றார்கள் என்றும்,தரம் தாழ்ந்த மருந்துகளை கொண்டு வந்து மக்களை கொல்ல நினைப்பவர் பக்கம் 113 பேர் நின்றதாகவும்,மக்களை வாழ வைக்க நினைக்கும் 74 பேரின் புகைப்படங்களை தனித்தனியாக ஊடகங்கள் மூலம் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தாய்மார்களுக்கான திரிபோஷாவில் நச்சுத்தன்மை என்பதில் உண்மை இல்லை – சுகாதார அமைச்சர் கெஹலிய

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும், அதற்கமைய குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.