சிவநேசதுரை சந்திரகாந்தன்

சிவநேசதுரை சந்திரகாந்தன்

பிள்ளையானை பிணையில் விடுதலை செய்தது மட்டக்களப்பு மேல்நீதிமன்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாகவே சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பி்ள்யைான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தரான எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரையும் தலா 2 சரீரப்பிணையில்  மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

பிள்ளையான் உள்ளிட்ட  ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த  மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும்  டிசம்பர் 8ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்” – சிவநேசதுரை சந்திரகாந்தன்

“கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்து கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பதே எங்கள் நோக்கம்”  என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கான காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (12.11.2020) திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் ,   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்   சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. தென் பின்  கடமைகளை பெறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த இடத்திற்கு வருவதற்கு பெரும் பங்காற்றிய எனது மக்களுக்கு நன்றி. தேர்தல் காலங்களில் மக்களிடம் அபிவருத்த்தி செய்து தருவாக வாக்குறுதியளித்து தான் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றோம்

தற்போது உலகலாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்திருக்கின்றது. இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்க கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்திற்கு உழைக்கவேணடும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அந்த அடிப்படையில் கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்துக்கொண்டு அதனோடு எங்களுடைய கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பது எங்கள் நோக்கம் அந்த திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் . நீண்ட காலமாக நான் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இன்று கடமைகளை பெறுப்பேற்ற உடன் நிலமைகளை அவதானித்துக் கொண்டு 13 ம் திகதி பெரும் விமர்சனத்தில் மத்தியில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தை நடாத்தவுள்ளோம்.

அந்த கூட்டத்தில் முடிந்த வரை 2021 ம் ஆண்டிற்கான செயற்பாடுகளையும் இப்போது இருக்கின்ற மக்களுக்கு உடனடி தேவையான விடயங்களை அவதானித்து அதனை முடித்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம் என தெரிவித்துள்ளார் .

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை கருணாகரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் , சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் கட்சி முக்கிய உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்

விரைவில் விலங்கினை உடைத்து வெளியே வருவேன் ! – பிள்ளையான்

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்,  நாளை மறுதினம் (20.08.2020)  பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (18)  அனுமதி வழங்கியுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் 3ஆவது சந்தேக நபராக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில்,  அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி பிள்ளையானின் சட்டத்தரணிகளால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த நகர்வு மனுவை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற மேலதிக நீதிபதி டி. சூசைதாசன்,  சிவநேசதுரை சந்திரகாந்தனை நாளை மறுதினம்  வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கினார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் விரைவில் விலங்கினை உடைத்து வெளியில் வந்து அனைவருடனும் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பிள்ளையானை, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் பாராளுமன்ற அமர்வுக்காக அழைத்துச் செல்லவுள்ளனர்.