சிறிலங்கா பொதுஜன பெரமுன

சிறிலங்கா பொதுஜன பெரமுன

“அதிகாரப்பகிர்வு என்ற பெயரில் தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்காதீர்கள்.” – நாடாளுமன்றத்தில் சுரேன் ராகவன் !

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

 

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தமிழ் பிரதிநிதிகள், இது அவசியமானது அல்ல என்றும் சமஷ்டி முறையிலான தீர்வே தங்களுக்கு வேண்டும் என்றும் வெளியே சென்று கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

 

நான் இவர்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். கனவுக் கணாதீர்கள்.

 

சமஷ்டி கோரிக்கையுடன் வட்டுக்கோட்டைவரை சென்று, மீண்டும் 2009 ஆம் ஆண்டு இந்நாடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இரத்த ஆறுக்கு மத்தியில் திரும்பி வந்துள்ளது.

 

இவ்வாறு இருக்க மீண்டும் யுத்தமொன்றையா நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? அப்படியென்றால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அன்று சரத்பொன்சேகாவுடன் இணைந்து, சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்வோம் என்றே யாழில் கூறியிருந்தார்.

 

அப்படியென்றால், இப்போது ஏன் இதற்கு மாறான ஒரு கருத்தை இவர்கள் வெளியிட வேண்டும்?

 

அதுவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும்போதே ஏன் இவ்வாறு கூற வேண்டும்?

இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க இடமளிக்க முடியாது. இனியும் இந்நாடு இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்காது.

 

எனவே, மீண்டும் இதற்குள் நாட்டை தள்ள முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் தூண்டிவிட வேண்டாம் என நான் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

இது எச்சரிக்கை கிடையாது. உண்மையைத்தான் கூறுகிறேன். இந்நாட்டிலுள்ள அப்பாவி விவசாயிகள் முதற்கொண்டு அனைவரும் இதனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

அமெரிக்கா தூதுவரையும், இந்திய உயர்ஸ்தானிகரையும் மகிழ்ச்சிப் படுத்த நாம் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது.

 

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பயணம் முடிவடையும் முன்னரே சமஷ்டியைக் கோருவதை, வடக்கு மக்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 

இதனை நான் வடமாகாண முன்னாள் ஆளுநர் என்ற வகையில் உறுதியாகக்கூறுகிறேன்.

 

தமிழ் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாயவுக்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக்கப்பட்டது ஏன்..? – பொதுஜன பெரமுன விளக்கம்!

நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முறையாக செயற்படுத்த எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை.இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆகவே ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண ஆளுநர்கள் செயற்படுகிறார்கள். ஆளுநர் நியமனம், பதவி நீக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

ஆளுநர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த போவதாக குறிப்பிடப்படுகிறது. யாரை ஆளுநராக நியமிக்க வேண்டும்,யாரை பதவி நீக்கம் வேண்டும் என நாங்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கவில்லை.

நாட்டில் ஜனநாயகம்,சட்டம்,ஒழுங்கு ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.ஜனநாயகம்,சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மாத்திரம் ஜனாதிபதியிடம் முன்வைத்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் புதிய நிலையான அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

நிலையான அமைச்சரவை நியமனம்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தவில்லை.ஜனாதிபதியின் அதிகாரத்தை சவாலுக்குட்படுத்த போவதில்லை என்றார்.

அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்!

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளை புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்களையும் தலைவர்களையும் பாதுகாக்க இந்தியாவில் வலுவான சட்டங்கள் இருப்பதாகவும், இலங்கையிலும் அத்தகைய சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்கள் மற்றும் தலைவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்டு, இந்த நாட்டை அழித்தவர்கள் மற்றும் நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான எதையும் செய்யாதவர்கள் முன்னிலைப்படுத்தப்படும் நிலை இலங்கையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசியத் தலைவர்களை திருடர்கள் என முத்திரை குத்துபவர்கள் தோல்வியடைந்தவர்கள், இது வருந்தத்தக்க நிலை, நாட்டின் மோசமான நிலை, இதே நிலை நீடித்தால் முற்போக்குவாதிகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்றார்.

ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“88 – 89 ஆம் ஆண்டு காலகட்டங்களை போல இன்னமும் தடிகள், வாள்கள், கத்திகளுடன் தான் ஜே.வி.பி.” – நாமல் ராஜபக்ச விசனம் !

மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கடந்தகால மனோநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தற்போதும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

மக்கள் விடுதலை முன்னணியில் ஒரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் எண்ணியிருந்த போதிலும் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அவர்கள் செயற்பட்ட விதமானது 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலகட்டங்களின் அவர்களின் நடத்தையை மீண்டும் பிரதிபலிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி, தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாக நான் எண்ணியிருந்தேன்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் ஜே.வி.பி.யும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என எண்ணிய போதிலும் அவ்வாறு தெரியவில்லை.

இதே நேரம்  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட சில நடைமுறையை நடைமுறைப்படுத்தி வருகிறார். மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் தனது சொந்தக் கொள்கைகளுக்கும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிய ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறந்த ஆதரவை வழங்குவோம். அரசியல் கொள்கை என்று வரும்போது நாம் தனித்தனியே நின்று செயற்படுவோம்.

எனினும் ஜனாதிபதியும் நானும் நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் கொள்கைகளை கொண்டு வர முயற்சிக்கிறோம் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.