கொரோனா

கொரோனா

பிரித்தானியாவில் கோவிட்-19 தமிழர்களுக்கான உதவிச் சேவை

தமிழர்களுக்கான உதவிச்சேவை ஒன்று அண்மையயில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கோவிட்-19 நெருக்கடியான இக்காலகட்டத்தில் வீட்டில் இருந்தவாறே தொலைபேசி மூலமாக உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தங்களால் வழங்க முடியும் என இவ்வமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் குறிப்பிட்டு உள்ளனர். குறிப்பாக மருத்துவ ஆலோசணைகள் மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசணைகள் இன்று குறிப்பாகத் தேவைப்படுகின்ற அரச உதவித் திட்டங்கள் பற்றிய ஆலோசணைகள், சட்ட ஆலோசணைகள், கல்வி தொடர்பான ஆலோசணைகள் சுகாதார சேவைகள் பற்றிய ஆலோசணைகளையும் இவர்கள் தமிழிலேயே உரையாடி வழங்கக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எமது நினைவுவெளிகளுக்கு அப்பால் நடந்துதுகொண்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஆலோசணைகளும் உதவிகளும் வழிகாட்டல்களும் நிச்சயம் பலருக்கும் உதவியாக அமையலாம்.

இவ்வமைப்பை மருத்துவர் புவிநாதன் முன்னெடுத்துள்ளார். ஆலோசணைகளை வழங்குபவர்கள்: கணக்கியல் பால முரளி, ஆனந்தன் ஆர்நோல்ட், மருத்துவம் – மருத்துவர்கள் புவிநாதன், கவன், செல்வராணி பத்மபாஸ்கரன், தாரணி சிறிசற்குணம், ஹிமா புவிநாதன், சமூக சுசாதாரசேவை – ராஜேஸ்வரி சுப்பிரமணியம், அரச உதவித் திட்டங்கள்: கௌரி பரா

அவர்களுடைய தொடர்பு விபரங்கள்:

http://tamilshelpline.org/

United Kingdom
02035001573
07525050010

Medical@tamilshelpline.org
immigration@tamilshelpline.org
lawyer@tamilshelpline.org
business@tamilshelpline.org
finance@tamilshelpline.org
benefits@tamilshelpline.org
youth@tamilshelpline.org
community@tamilshelpline.org
housing@tamilshelpline.org

Opening Hours
Monday – Friday
09:00 – 18:00

Saturday
09:00 – 18:00

Sunday
10:00 – 16:00

பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை இன்று வேலைநீக்கம் செய்தது!

பெரும் நிறுவனங்கள் வேலையில் இருந்து வேலைசெய்வோரை நிறுத்த ஆரம்பித்து விட்டன. இன்று பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளது. கொரோனா வந்த அதிஸ்ரம் பெரும் நிறுவனங்கள் எல்லாம் கொள்ளை இலாபமீட்டும் வகையில் தங்கள் நிறுவன வேலைக்கட்டமைப்புகளை மாற்ற உள்ளன. சோசல் டிஸ்ரன்ஸ் வேர்க்கிங் புறம் ஹோம் எல்லாமே இந்த நிறுவனங்களுக்கு சாதகமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. மேலும் சுப்பர்மாக்கற்றுக்கள் ஓட்டோமேட்டட் சிஸ்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டனர்.

இன்னும் பத்து ஆண்டுகளில் இப்போது நடைமுறையில் உள்ள 50 வீதமான வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கொரோனாவின் வரவால் பத்து ஆண்டுகள் அல்ல இன்னும் சில ஆண்டுகளிலேயே தற்போதுள்ள பல வேலைகள் காணாமல் போய்விடும்.

அப்ப இந்த நுகர்வுப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்? வேலை இல்லாதவனிடம் காசு இல்லை. காசு இல்லாதவன் என்த்தை வாங்குவான். உலக நாடுகள் பொருளாதாரக் கொள்கையை மீள்வரைபு செய்ய நெருக்க வேண்டிய காலகட்டம் இது.

சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த் தாக்கம் கவனத்தில் கொள்வதற்காக: தேவையேற்படின் மருத்துவ உதவியை நாடவும்!

அண்மைய நாட்களாக சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த்தாக்கம் ஒன்று ஏற்ப்ட்டு வருவதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஐசியு இல் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் என்எச்எஸ் அறிவித்து உள்ளது. சிறார்களின் உடலில் வித்தியாசமான தாக்கம் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு என்எச்எஸ் அறிவித்துள்ளது.

இது கோவிட்-19இன் தாக்கமா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பாதிக்கபட்ட சிறார்களில் கோவிட்-19 வைரஸ் இருந்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உடலில் புள்ளி புள்ளி வீக்கங்கள் அவதானிக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு லண்டன் பகுதியில் இரு தமிழ் குழந்தைகள் பலி!!!

தனது இரு குழந்தைகளை படுகொலை செய்து தன்னையும் படுகொலை செய்ய முற்பட்ட நீதி குமார் (40) அருகில் உள்ள தமிழ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். நீதி அன்பான தந்தை என அவரை அறிந்த அவர் பணியாற்றிய கடையின் முதலாளி தெரிவித்து இருந்தார்.கணவரின் செயலைக் கண்டு தெருவுக்கு வந்து கதறி அழுதுள்ளார் மனைவி நீஸா. என்ன காரணத்தால் இக்கொடூரம் நிகழ்ந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.

கிழக்கு லண்டன் பகுதியில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மாலை 5:40 மணியளவில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்து உள்ளனர். காயமடைந்த நிலையில் 40 வயதான ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண் குழந்தை ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் பிள்ளைகளே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பொலிஸார் இப்படுகொலை தொடர்பாக வேறுயாரையும் தேடவில்லை என அறிவித்துள்ளனர். இதன்படி குடும்பத்தகராறு காரணமாவே இப்படுகொலைகள் இடம்பெற்றதாக அஞ்சப்படுகிறது. இக்குடும்பத்தினர் இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோரிற்கு மேல் வசித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக இக்குடும்பத்தினரை அறிந்த ஒருவர் தேசம் நெற் க்கு தெரிவிக்கையில் கணவன் மனைவிக்கு இடையே இடம்பெற்ற தகராற்றில் தந்தை பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்வதற்கு தன்னைத்தானே குத்தியதாகத் தெரிவித்தார்.

கொரோனா லொக்டவுன் இக்கு பின்பாக குடும்ப வன்முறைகள் வீடுகளில் அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தெரிந்ததே.

நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே லொக்டவுன் தளர்வு! பொருளாதாரத்தை வைத்தல்ல!

காச்சலும் கொரோனாவும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் அதன் வலி. இது இப்போது பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு நல்லாகவே உறைத்திருக்கிறது. காலம் கடந்த ஞானம் என்றாலும் இப்பவாவது ஞானம் பிறந்தது நல்லதே. நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே ‘லொக்டவுன்’யைத் தளர்த்துவது பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டும் என்றும் பொருளாதாரத்தையும் மக்கள் நலனையும் ஒப்பிட்டு முடிவு எடுக்கப்பது தவறானது என்றும் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். இதனை முன்னரே உணர்ந்து இருந்தால் எத்தினையாயிரம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்

நாட்டின் அரசியலில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாலென்ன எதுவும் மாறாது என்று பீற்றிக்கொண்டிருக்கும் ஜென்மங்களுக்கு இப்போதாவது ஏதாவது உறைத்திருக்குமா?

கொரோனா வைரஸ் ஆய்வுக்கான அழைப்பு உங்களுக்கும் வரலாம்

பிரித்தானியாவில் உள்ள சிலருக்கு இந்த கொரோணா வைரஸ் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக ஓஎன்எஸ் – ONS Office for National Statistics தெரிவித்துள்ளது. இதுவொரு கருத்துக் கணிப்பு அல்ல. இந்தக் கடிதம் வந்தால் அக்கடிதத்தை உதாசீனம் செய்ய வேண்டாம். முதற்கட்டமாக பிரித்தானியாவில் உள்ள 20,000 பேருக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதன்படி கொரோனா வைரஸ் சுவப் ரெஸ்ற்றும் அன்ரிபொடி ரெஸ்ற்றும் மேற்கொள்ளப்படும். இந்த ரெஸ்ற்றும் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதான பணியாளர்களுக்கான ரெஸ்ற்றும் ஒன்றல்ல. இந்த ரெஸ்ற்றும் கேள்விக்கொத்தும் கொரோணா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு பரவி இருக்கிறது, நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலே இருக்கப் பணித்த கட்டுப்பாடுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது போன்ற தகவலை அச்சொட்டாக அறிவதற்கு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் ஓஎன்எஸ் இல் இருந்து கடிதம் பெற்றுக்கொண்டவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை வாரா வாரமும் மாதத்திற்கு ஒரு தடவையும் அடுத்த வருடம்வரையும் தொடர்ச்சியாக ரெஸ்ற் செய்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின் அது மீண்டும் தொற்றுமா, தொற்றுக்குப் பின் ஏற்படும் நோய் எதிர்ப்பு எவ்வளவு காலத்திற்கு வலுவானதாக இருக்கும் என்பனவற்றையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கின்றது. அதனால் படிப்படியாக கூடுதலானவர்கள் ரெஸ்ற்றுக்கும் வினாக்கொத்தை நிரப்பவும் மாதம் மாதம் அழைக்கப்படலாம். ஆகவே இக்கடிதங்கள் தொடர்பில் சிரத்தை கொள்ளவும்.

கொறோனா வைரசும் இன்றைய உலகும்: புதிய திசைகள்

கொள்ளை நோயால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிந்தார்கள் என்று பண்டைய வரலாற்றில் படித்திருக்கிறோம். இதுவரை வந்த பெரும்பாலான ஆட்கொல்லி நோய்கள் (epidemic) உலகின் ஏதோ ஒரு அல்லது சில பகுதிகளை தாக்கிவிட்டு தணிந்துவிடும் அல்லது அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுவிடும்.

2019 ல் சீனாவின் வுகான் பகுதியில் விலங்குகளிடம் இருந்து மனிதரை தொற்றிக்கொண்டு விட்டதாக கூறப்படும் இந்த கொவிட்-19 என அழைக்கப்படும் கொறோனா வகை வைரஸ் என்பது கண்ணுக்குத்தெரியாத மிகப்பெரிய மனித எதிரியாக பெருந்தொற்றாக (pandemic) மாறியுள்ளது.

உலகமயமாதல் என்பது மக்களை முன்னெப்போதும் இல்லாத அளவு இடநெருக்கமாக வாழவைத்துள்ள இன்றைய உலக சூழலில், உலகின் ஒரு மூலையில் உருவாகும் பிரச்சனை என்பது அதன் வீரியத்தின் அளவை பொறுத்து உலகின் சகல பாகங்களையும் சென்றடைவதற்கும், சமூகங்களுக்குள் சுற்றி சுற்றி விசச்சுழலாக நிலைத்து நின்று அழிவை ஏற்படுத்துவதற்கான சூழல் காணப்படுகிறது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இந்த கொவிட் 19 வைரஸ் பரவியபோது இது வெறும் சீனர்களின் பிரச்சனையாக உலகு பார்த்தது எதோ உண்மைதான். அது மற்றைய இடங்களுக்கு தீவிரமாக பரவியபொழுது சீன மக்கள் பொதுப்புத்தி மட்டத்தில் இழிவுபடுத்தப்பட்டனர். சீன அரசு இந்த நோயின் தீவிரத்தன்மை தொடர்பான சரியான எச்சரிக்கையை உலகிற்கு அளித்ததா? பாதிக்கப்பட்ட, இறந்த சீன மக்களின் எண்ணிக்கைகள் முறையாக வெளிப்படுத்தப்பட்டனவா? என்னும் கேள்விகள் இன்று பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நோயை எதிர்கொள்வதில் வேறுபட்ட அணுகுமுறைகளை கையாளும் முகாம்களாக சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என பிரித்து பார்ப்பது இன்றுள்ள நிலைமையை புரிந்து கொள்வதற்கு இலகுவானதாக அமையலாம். ஒரு தொற்றுநோயை எதிர்கொள்வதில் கூட அரசுகளும், வேறுபட்ட சமூக கட்டமைப்புகளும் எப்படி பிரிந்து நிற்கிறன, வேறுபட்ட அணுகுமுறைகளை மேற்கொள்கின்றன என்பது கண்கண்ட சாட்சியாக வெளிப்பட்டு நிற்கிறது.

சீன நாடானது தனது ஒரு மாகாணத்திற்குள்ளேயே நோயை கட்டுப்படுத்தி விட்டதாக கூறிக்கொள்கிறது. மிக இறுக்கமான நிர்வாக முறைகளையும் அதிகாரங்களை மக்கள் மீது பிரயோகிப்பதில் பெரியளவு சவால்களை எதிர்கொள்ளாத சமூகக்கட்டமைப்பையும் தன்னகத்தே கொண்டதன் மூலமாக, மக்கள் அசையமுடியாத கட்டுப்பாடுகளையும் பலமான சிவில், மருத்துவ மற்றும் அதிகார பிரயோகங்களை மிக திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அவர்கள் பயன்படுத்தியிருக்கும் நவீன தொழில்நுட்பம் என்பது நோய் தொற்றுக்கு உள்ளானவரின் இரண்டு மூன்றுவார முழு நடவடிக்கைகளையும் கால அடிப்படையில் அவதானிக்க கூடிய வகையில் இருப்பதால் நோய்பரவலை தடுப்பது இலகுவானதாக இருக்கிறது. இது தனிமனித உரிமை மீறல் என்னும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லை நாட்டில் பரவிவரும் நோயின் தீவிரத்தை குறைத்து எடைபோட்டிருந்த இந்திய அரசு இந்த நோயின் தீவிரம் தொடர்பான எச்சரிக்கையின் பின் தடாலடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டை முழு ஊரடங்கு வாழ்விற்குள் வாரக்கணக்காக வைத்திருக்கிறது. மிக நெருக்கமான குடியிருப்பு வாழ்முறையை கொண்ட இந்திய மக்களில் குறிப்பிடத்தக்களாவான மக்கள் நெருக்கமான நகர குடியிருப்புகள், சேரிகள் ஏன் வீடற்ற வீதியோர குடிகள் என நோய்தொற்றலுக்கு ஏதுவான சிக்கலான வாழ்முறையை கொண்டிருக்கிறார்கள். நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதன் பரவல் எல்லைமீறி சென்று பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது

இந்திய சனத்தொகையுடன் ஒப்பிடும்போது அரச மருத்துவமனைகள் மிக குறைந்த மருத்துவ வசதிகளையே கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள இந்திய மருத்தவத்துறை என்பது மக்கள் பேரவலத்தில் இருக்கும் போது வேடிக்கை பார்க்கும் ஒரு பிரிவாக இருக்கும் சாத்தியப்பாடுதான் இருக்கிறது. இந்த பலவீனத்தின் வெளிப்பாடாகவேதான் இந்திய அரசின் இந்த வாரக்கணக்கான நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவை புரிந்து கொள்ளலாம்.
நோய்தொற்றலை தடுக்கும் நோக்கு என்பதைவிட தற்போதைய அரசின் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதும் அது அவர்களது அரசியல் எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது என்பதிலும் இந்திய, இலங்கை அரசுகள் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. சர்வாதிகார அரசுகளுக்கு நெருக்கடி நிலமைகள் எப்பொழுதும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைகிறது. மோடி அரசுக்கும் சரி, ராஜபக்ஷ அரசுக்கும் சரி எந்த பிரயத்தனங்களும் இன்றி மக்களின் காவலன்களாக தம்மைக் காட்டிக்கொள்வதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே பயன்படுத்தப் படுகிறது.

ஊரடங்கு உத்தரவை அதிகார தோரணையில் போட்டுமுடித்த இலங்கை, இந்திய அரசுகள் என்பன, தமது நாட்டு மக்களில் அன்றாடம் உழைத்து வாழும் கிராம, நகர கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கும், இருப்பதற்கு வீடற்று இருக்கும் மக்களுக்குமான உணவிற்கான தீர்வாக எதை முவைத்திருக்கிறார்கள்? குறைந்த விலையில் சில குறிப்பிட்ட அரச விநியோக நிலையங்களில் அதுவும் வாரத்தில் ஒரிரு தினங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் வழங்கப் படும் நிலை. ஒரு பிரிவு மக்களிடம் பொருள் வாங்க பணம் இல்லை. சிறிதளவு பணம் இருக்கும் மக்களும் பொருள் வாங்குவதற்கான ஒழுங்கான விநியோகம் இல்லை. இனம் புரியாத நோய் தொற்றலின் பயபீதியில் இருக்கும் மக்களுக்கும் சில நேரங்களில் அரசின் இந்த நடவடிக்கைகள் நியாயமாக படுவதில் ஆச்சரியமில்லை. அவகாசமற்ற திடீர் அறிவிப்புகளால் தயாரிப்பற்ற மக்களின் பதட்டங்களுக்கு பொலீசின் ஈவிரக்கமற்ற அடி உதைகள் கூட சமூகத்தால் நியாப்படுத்தப்படும் அநியாயம் கூட நடந்தேறுகிறது.

பிரச்சனை என்றால் மக்களை வீட்டிற்குள் அடைக்கும் வேலையை அதிகாரமுள்ள எந்த முட்டாள் அரசாலும் செய்ய முடியும்; இதற்கு எந்த மதிநுட்பமும் தேவையில்லை. கோவிட்-19 என்னும் வைரசின் பரவல் முறை என்ன? அதற்கு எத்தனை கட்டங்கள் இருக்கிறது? மக்களை முழுமையாக அடைத்து வைப்பதன் மூலம் நீண்டகாலம் நீடிக்கும் ஒரு வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியுமா? மக்கள் சில வாரங்களில் சாதாரண நிலைக்கு திரும்பும்போது மீண்டும் பரவல் ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகள் எவை? நீண்டகால மக்கள் நடமாட்ட தடை என்பது நோயில் இருந்து காத்து பட்டினி சாவிற்கு மக்களை இழுத்துச்செல்லாதா? கூடவே நாட்டை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டு செல்லாதா? என்பன இன்று மக்களை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கும் அரசுகள் முன் எழும் கேள்விகளாகும்.

இலங்கையில் ஊரடங்கை படிப்படியாக கொண்டுவந்திருக்கும் அரசு, மக்களின் உணவு விநியோகத்தில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. மனித நேயம் உள்ள ஊர்மக்கள், புலம்பெயர் மக்கள் என ஒரு மக்கள் கூட்டம் தமது சொந்த மக்களுக்கு உணவளித்து காப்பற்றிக்கொள்கிறது. இதன் அரசியல் பலனை கூட தனதாக்கி அறுவடை செய்வதில் இலங்கை அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. எவர் உயிர் போனால் என்ன நிலைமை பெரியளவு பாதகம் இல்லாத இன்றைய இலங்கை சூழலில் தேர்தலை நடத்தி வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்பதில் ராஜபக்ச சகோதரர்கள் மிகக்குறியாக இருக்கிறார்கள்.

தமது நாட்டை கொரானா வைரஸ் எதுவும் செய்துவிட முடியாது என்று மார்பு தட்டிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பும், அமெரிக்க அரசும் சீனா மீது குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்தனவே தவிர அமெரிக்க மக்களுக்கு வர இருந்த ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இதன் விளைவாக கண்ணுக்கு அகப்படாத எதிரி இன்று அமெரிக்க மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. முட்டாள்தனமான தலைமை காரணமாக இன்று மாநில கவர்னர்களுக்கும், அரச அதிபருக்குமான முரண்பாடுகளாக ஒருவகை அரசியல் குழப்பமாக உருவெடுத்துள்ளது. எந்த சீனாவை குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்த அமெரிக்க அரசு இன்று மருத்துவ தேவைகளுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் பெரிய பொருளாதாரங்கள் சிறு தேக்கங்களுக்கும் பெரும் பொருளாதார பாதிப்புகளை அடையும் என்பது சந்தை பொருளாதாரத்தின் யதார்த்தம். இன்று ஏற்பட்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவு என்பது சராசரியாக நாளுக்கு 2000 மக்களுக்கு மேல் உயிர்களை இழந்துவரும் சூழலிலும், முக்கால் மில்லியன் மக்களுக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையிலும் கூட நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தே தீரவேண்டும் என்னும் அழுத்தத்தை அந்த அரசிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறை என்பது, கொரோனாவை வருமுன் காப்போம் என்பதை விட எப்படியும் வரப்போகும் வைரசை எப்படி சமூகமாக கோவிட்-19 இற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்கி (herd immunity) வெற்றி கொள்வது என்னும் அணுகுமுறையில் நகர்வதாகவே உணரமுடிகிறது. அந்த நாடுகளின் சமூக ஓட்டத்தை ஓரளவு அனுமதித்துக் கொண்டு ஒருவகை சுய கட்டுப்பாட்டுடன் மக்களை நகர கோருவதாகவே பெரும்பாலான நாடுகளின் அணுகுமுறை இருக்கிறது.

மேற்கு ஐரோப்பாவின் பிரதான நாடுகளில் ஜேர்மனி தவிர்ந்த மற்றைய நாடுகள் இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்களா என்பது அவர்கள் முன் உள்ள பிரதான கேள்வியாகும். ஒரு நோய்த்தொற்று என்பது Epidemic என்னும் பகுதியளவிலான பரவலை கடந்து Pandemic எனும் உலகு ரீதியான பரவல் கட்டத்தை அடையும் போது குறிப்பிட்டளவு உயிரிழப்பை தவிர்க்க முடியாது என்னும் கணக்குடன் இயங்கும் அதேவேளை தமது மருத்துவ வசதிகளை அதிகரித்து முடியுமான அளவிற்கு மக்களை காப்பாற்ற முயற்சிப்பது என்பது பல ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையாக இருப்பதாகவே பார்க்க முடிகிறது.

வயோதிபர்களை அதிகமாக கொண்ட இத்தாலி நாடு மிக அதிகமாக பாதிக்கப்பட்டு பல மரணங்களை சந்திக்க, ஸ்பெயின் நாடு வயோதிப மரணங்களுடன் மருத்துவ பிரிவின் பலவீனங்களால் மருத்துவ பிரிவில் பலரின் மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கிறது. பிரான்சினதும், பிரித்தானியாவினதும் வைரஸ் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகரித்துவர, நோய் தொற்றுள்ளவர்களை பரிசோதிப்பதிலும், தொற்றுக்கு உட்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் பெரும் சவால்களை இரு நாடுகளும் சந்தித்து வருகின்றன. இராணுவ பொருளாதார பலங்களுடன் இருக்கும் இவ்விரு நாடுகளும் ஒரு நோய்தொற்றில் இருந்து சொந்த நாட்டு மக்களை காப்பதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது இந்நாடுகளின் உண்மையான வளர்ச்சி நிலை தொடர்பான ஆழமான கேள்வியை முன்வைக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் தமது சொந்த சமூகங்களிடையே கொண்டிருக்கும் ஜனநாயக நடைமுறைகளை அளவிற்கு அதிகமாக மீறுவது பெரும் உள்நாட்டு குழப்பங்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்னும் அச்சம், முழு அடைப்பு என்பது மீளமுடியாத பாரிய பொருளாதார சரிவுகளுக்கு இட்டுசெல்லும் என்னும் பாரிய பிரச்சனை, தம்வசம் வைத்திருக்கும் சில விசேட பொருளாதார சந்தை தளங்கள் இடம்மாறிவிடும் எனும் அச்சம், Pandemic என்னும் அளவிலான ஒரு வைரஸ் பரவல் பல கட்டங்களாக கூட வரமுடியும் என்னும் மேற்கு நாடுகளின் கணிப்பு என்பது அவர்களின் நீண்டநாள் சமூக முடக்கம் என்னும் முடிவு என்பதற்கு மாறாக பகுதி அளவிலான சமூக முடக்கம் என்னும் நடைமுறையை பின்பற்றி, மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் படிநிலையை வளர்த்துவிடுவது என்னும் நடைமுறைக்கு இட்டுச்செல்வது என்கின்ற விடயங்கள் தான் இந்த வைரஸ் தொற்று நோக்கிய ஐரோப்பிய அரசுகளின் அணுகுமுறையின் அடிப்படைகளாக இருக்கும் சாத்தியப்பாட்டை உருவாக்குகின்றன.

சீனாவில் இருந்து மற்றைய இடங்களுக்கு பரவியதால் சீன வைரஸ் என உள்நோக்கோடு சில நாடுகள் அழைத்ததும், சீன மக்களின் உணவுமுறைகள் காட்டுமிராண்டித்தனமானதாக பல சமூகங்களால் சித்தரிக்கப்பட்டவையும் அரசியல், சமூக பழிவாங்கல்களாக பார்க்கப்பட முடியும். ரஷ்யா, வடகொரியா,கியூபா போன்ற முன்னைய கொம்யூனிச அரசு ஆட்சியில் இருந்த நாடுகளில் கொரோனாவின் பரவல் மிக குறைவாக இருப்பதென்பதை வைத்துக்கொண்டு ஒருசாரார் இந்தவகை வைரஸ் தொற்று என்பது மேற்குலகம் மற்றும் அமெரிக்கா நோக்கிய சீனாவின் திட்டமிட்ட சதியாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்னும் பொதுப்புத்தி மட்ட பிரச்சாரங்களையும் பரப்பத் தவறவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் ஜேர்மனி தவிர்ந்த பெரும் பொருளாதார பலம் உள்ள நாடுகள் பலவும் சமீபகாலமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. குறிப்பாக ஸ்பெயினும், இத்தாலியும் கடும் நெருக்கடிக்குள் இருந்து வந்திருக்கின்றன. கோவிட்-19 தாக்குதல் என்பது இந்த நாடுகளை இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் விளைவாக உற்பத்தியும் சந்தையும் வேறு பகுதிகளை நோக்கி நகர்வது நடந்தேறும் வாய்ப்பிருக்கிறது. மலிவான மனித உழைப்புடன் நவீன தொழிநுட்பங்களின் இணைவு என்பது சீனா, இந்தியா, தென்கொரியா, பிரேசில் போன்ற நாடுகளை உலகின் பொருளாதார சந்தையில் மேலே கொண்டுவந்திருக்கிறது. கோவிட்-19 ற்கு பின்னரான உலகத்தில் இது இன்னும் ஐரோப்பாவை விட்டு நகர்ந்து செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

வீழ்ந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தின் பக்க விழைவுதான் மத்திய கிழக்கில் திட்டமிட்டு உருவாகப்பட்ட யுத்தங்களும் பேரழிவுகளும். சீனாவிடம் பொருளாதார ரீதியாக தோல்வியை சந்தித்துவிடக் கூடாது என பெரும் பிரயத்தனத்துடன் வலம் வரும் அமெரிக்க அரசு என்பது இன்று சீனா தன்னை மீறி செல்வதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாது சினம் கொண்டிருக்கிறது. கோவிட்-19 க்கு பிந்தய உலகில் அமெரிக்கா பொருளாதார ரீதியில் சீனாவைவிட பின் தங்கிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் என்பது, ஐரோப்பா நோக்கிய அமெரிக்காவின் மென்மை போக்கும், இறுக்கமான கூட்டுக்களும், இந்தியா, பிரேசில், போன்ற நாடுகளுடன் கூட்டை இறுக்கமாக்கும் போக்குகளும் அதிகரிக்க, சீனா நோக்கிய அமெரிக்காவின் கடும் போக்குகள் நகர்ந்து அடங்குவது தவிர்க்கமுடியாததாக இருக்கலாம்.

மனிதனும், வாகனங்களும் அடங்கி விட்டால் உலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு மனித பேரவலத்தினூடாக நாம் உணர ஆரம்பித்திருக்கிறோம். எமது காலத்தில் முன்னெப்போதும் இல்லாத இயற்கையான சுற்றாடலும், பறவைகள் மிருகங்களின் நடமாட்டமும் உலகை வியக்க வைக்கிறது. நெருக்கடிகள், அவலங்கள் மக்களை பிணைப்புற வைக்கிறது. போட்டி பொறாமை; ஓட்டமும் நடையுமான வாழ்க்கையில் இருந்து உலகமே ஓய்வு எடுக்கும் போது மதம், போதகர்கள் எதுவும் இன்றி மனிதநேயம் புது வடிவம் பெறுகிறது. அரசியலும் மதமும்,சாதியும், பிரிவினைகளும் இங்கு கோலோச்ச முடிவதில்லை. உண்மையில் மனிதனின் எதிரி எது என்பதை இந்த சூழல் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விடுகிறது. அதிகாரங்கள், அரசுகள், மத நிறுவனங்கள் இந்த மனித அவலத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா என்றால் நிச்சயமாக இல்லை. மக்கள் வாழ்முறையில், இயற்கையை நோக்கிய மக்களின் அணுகுமுறையில், சக மனிதன் பற்றிய கருத்தமைவில் சிறு மாற்றத்தை கொண்டுவருமாக இருந்தால் மட்டுமே இந்த மனித பேரவலத்தில் தமது உயிர்களை இழந்த மக்களுக்கு உலக மக்கள் காட்டும் மரியாதையாக இருக்கும்.

புதிய திசைகள்
23/04/2020

‘வழித்தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து’ மாதிரி கொரோனா நிவாரணமும் விளம்பரம் தேடும் அரசியல் பிரமுகர்களும்

கொரோணாவுக்கு நிவாரணம் வழங்கி வோட்டு வாங்கும் வேட்டையில் அரசியல் பிரமுகர்கள் பலர் குதித்துள்ளனர். பாராளுமன்ற அரசியலுக்குச் சென்று மக்களது பல்வேறு குறைகளையும் தீர்ப்பதற்குப் பதிலாக ‘வழித்தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து’ தங்கள் வாக்கு வங்கியை நிரப்பலாம் என்ற கனவில் இவர்கள் திரிகின்றனர். இவர்கள் வழித் தேங்காயைக் கூட, அது தேவைப்படுபவர்களுக்கு வழங்குகிறார்கள் இல்லை. இந்த சாதிய பிரதேசமான்கள் தங்கள் வோட்டு வங்கியை நோக்கியே உதவி என்ற பெயரில் கிள்ளித் தெளிக்கின்றனர்.

இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை கொரோணாவை பரப்பாமல் இருந்தால் போதும் என்றும் பலர் முணுமுணுக்கின்றனர். நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரில் பாஸ் எடுத்து வைத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் உலாவரும் இவர்கள் கொரோணாவைப் பரப்பிவிடும் அபாயம் உள்ளது.

இதுக்குள்ள தாங்கள் வாங்குபவர்களின் முகத்தை காட்டவில்லையாம் என்று அவர்களின் முகத்தில் இமோஜி போடுகிறார்கள். இதென்ன சன் பேப்பரில பேஜ் திரியில போடுற மாதிரி. ஒரு பாசல் குடுக்க போன நீங்கள் முதல்ல உங்கள முக்கையும் வாயையும் மைத்து எதையாவது கட்டுங்கோ. பார்சலோட கொரோனாவையும் குடுத்திடுவியல்.

முகக் கவசமும் பிரித்தானிய அரசியலும்!

பிரித்தானியாவில் முகக்கவசம் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளுக்கான பற்றாக்குறை சுகாதார சேவையில் உள்ளவர்களின் உயிர்களை பறிப்பதுடன் வைரஸ் கிருமிகளைப் பரப்பவும் காரணமாகிறது. இந்நிலையில் பல நாடுகளும் மக்களைப் முகக்கவசங்களை அணிய அறிவுறுத்திய போதும் பிரித்தானியா இவ்விடயத்தில் விஞ்ஞான ரீதியாக அது பெரும் பலனளிக்காது என்று காரணம் சொல்கிறிது. அது எப்படி.

முகக்கவசம் பற்றி விஞ்ஞானம் அப்படி என்னதான் சொல்கிறது: 1. முகக் கவசத்தை நோய்த் தொற்றுள்ளவர்கள் கட்டாயமாக அணிவது அவசியம், ஏனெனில் அது கிருமி பரவுவதை தடுக்கும். ஆனால் 2. நோய்த் தொற்று இல்லாதவர்கள் அதை அணிவதால் பெரும் நன்மை இல்லை.

இதன் படி முதலாவது கூற்று முகக்கவசம் அணிவதை வரவேற்கின்றது. இரண்டாவது கூற்று குழப்பகரமானது அதனை வைத்துத்தான் அரசு அரசியல் செய்கின்றது. ஒரு வருக்கு நோய்த் தொற்று இருக்கா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அப்படியாயின் அனைவரும் முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பானதா? அல்லது யாரும் முகக் கவசத்தை அணியாமல் விடுவது பாதுகாப்பானதா? மேலும் ஏன் கைகளை கழுவச்சொல்கிறார்கள். நாங்கள் கிருமி தொற்றிய கைகளால் கண் மூக்கு ஆகியவற்றை தொட்டால் வைரஸ் பரவிவிடும் என்பதால். அதே போல் முகக்கவசம் அணிந்தால் அது வைரஸ் மூக்கினுள் நுழைவதை சிறிய அளவிலேனும் தடுக்ககாது.

அரசுக்கும் இதெல்லாம் தெரியும். ஆனால் முகக்கவசத்தை அணியும் படி சொன்னால் நாட்டில் சுகாதார சேவையாளர்களுக்கே அணிவதற்கு முகக்கவசங்கள் பற்றாக்குறையாக இருக்கும் போது பொது மக்களையும் அதனை அணியச் சொன்னால் அதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாது. அரசு ஏற்கனவே மெத்தனப் போக்கை கடைப்பிடித்தாலேயே இவ்வளவு இழப்புகள் ஏற்படுகின்றது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை வழங்கும். தங்கள் பொறுப்பற்ற தன்மையை மறைக்க அரசு விஞ்ஞானத்தை புரட்டிப் போடுகின்றது. வீட்டில் உள்ள கைக் குட்டையை யாவது கட்டிக்கொண்டு வெளியே செல்வதும் தான் பாதுகாப்பானது. அதனை நாளாந்தம் சோப்போட்டு தோய்த்து அணியுங்கள்.

ஏப்ரல் 20இல் 10 டவுனிங் ஸ்ரிற்க்கு முன்னால் தனித்துப் போராடிய இளம் மருத்துவப் பெண் மீனாள் விஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் அரசினதும் பொறுப்பற்ற தன்மையை வன்மையாகக் கண்டித்ததுடன் பிரதமர் சுகாதார சேவையாளர்களிடமும் மரணிக்ககும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். சுகாதார சேவையாளர்களுக்கு கை தட்டுவது போன்ற கதைகளைச் சொல்லி உண்மையான பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம் என்றும் எச்சரித்தார். இவருடைய நேர்காணல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

யாழ் பெருங்குடி மக்கள் கொரோனாவை உள்ளுக்கு விட்டு அடிக்கத் தயார்?

யாழ்ப்பாணத்தில் நீண்ட ஊரடங்கு உத்தரவுக்குப் பின் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் பெருங்குடி மக்கள் காத்துக் கிடந்தனர். சனிரைஸர் என்று சொல்லப்படும் கிருமிகொல்லி சோப்பில் 60 முதல் 70 வீதம் வரை அல்ககோல் உள்ளது. அதனால் வைரஸ் கிருமிகளை வெளியே இருந்து அழிப்பதிலும் பார்க்க போர்த் தந்திரமாக உள்ளுக்கு விட்டு அடிக்கலாம் என சில யாழ் பெரும்குடி மக்கள் நம்புகின்றனர் போல் தெரிகின்றது.

ரஸ்சியர்கள் சிலரும் இவ்வாறு தான் நம்பினர் என்பதையும் கவனிக்கவும். ஆனால் அமெரிக்கர்கள் பெரும் ஆயுதங்களை வாங்குவதற்காக துப்பாக்கி விற்கும் கடைகளில் பெரு வரிசையில் காத்து நின்றனர். வைரஸ்களை துப்பாக்கிச் சூட்டில் கொல்ல நினைக்கிறார்களோ என்னவோ.

ஒவ்வொரு மக்கள் குழுவும் வைரஸ்க்கு எதிராக பல முனைகளில் போராடுகின்றனர். இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது.???