கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் பெறுபேற்றுப் பத்திரத்தை பெறசென்ற மாணவனிடம் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினராகினால் மட்டுமே பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவமானது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது க.பொ.த உயர்தர பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்ற போதே இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபர் பூலோகராஜா அவர்களை தொடர்பு கொண்டு வினவிய வேளை குறித்த குற்றச்சாட்டை மூடிமறைக்கும் விதத்தில் பதில் அவர் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் காயத்திரியை தொடர்பு கொண்டு வினவிய வேளை, சமூக ஊடகங்களில் இந்த பிரச்சினை குறித்து பதிவுகள் உள்ளதை தான் பார்த்ததாகவும் மற்றும் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.