காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – இருவர் கைது !

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்தமையினால் இன்று அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்திருந்த நிலையில், வவுனியா நகரசபை மண்டபத்தில் வன்னி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

 

இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.

 

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

 

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவினர்கள் போராட்டம் !

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனோர் அலுவலகத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் நடத்துவதற்காக 19 மற்றும் 20ம் திகதிகளில் 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 244 பேருக்கே இவ்வாறு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு அலுவலம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என்றும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுதிரண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரிகள் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவத்தால், மற்றுமொரு வாகனத்தில் வந்த அதிகாரிகள் மாற்று பாதை ஊடாக உள்ளே சென்ற நிலையில், மக்கள் உள்ளே சென்று அதிகாரிகளை வெளியே சென்று பதிலளிக்குமாறு தெரிவித்து அனைவரையும் வெளியே அழைத்தனர்.

இறுதியாக அதிகாரிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். குறித்த விசாரணையை நிறுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியநிலையில், விசாரணைகள் எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு அதிகளவான காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள் வந்த நிலையில், தங்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் வவுனியாவுக்கு வருகை – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம், பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாக கலகம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

“ஜெனீவாவில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளது.” காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காட்டம் !

“ஜெனீவாவில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றியிருந்தார்.

 

இதன்போது அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர்  முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை தொடர்பான தீர்ணம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில் ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதோடு குறித்த கருத்துக்கு கடும் கன்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்ட தாய்மாரின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று வாய் மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள்.” – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

“பாதிக்கப்பட்ட தாய்மாரின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று வாய் மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள்.” என வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

நீதி அமைச்சரின் வடக்கு வருகையானது தங்களது ஆட்பலத்தின் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்தினுடைய மக்களையும் தரிசித்து வருகின்றார்கள். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினராகிய நாம் அதனை முற்றாக நிராகரிக்கின்றோம். ஏற்கனவே பல ஆணைக்குழுக்களை சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்து இதுவரை காலமும் எதுவிதமான தீர்வுகளும் எமக்க தராத நிலையில் இந்த நீதி அமைச்சின் அமைச்சர் எங்களிற்கு எப்படியான நீதியை தரப்போகின்றார்.

உண்மைக்கும் நீதிக்குமான இந்த தேடலை மழுங்கடிக்க செய்வதற்காகவும், வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரிலே தங்களையும், அரசையும் காப்பாற்றுவதற்காகவும், குறித்த கூட்டத் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையையும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்கான முயற்சியே இந்த நீதி அமைச்சின் செயற்பாடாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த தாய்மாரை ஒருங்கிணைத்து அவர்களிற்கு இழப்பீட்டை அல்லது மரண சான்றிதழை வழங்கி போராட்டத்தை இல்லாது செய்து அமைதியான நிலையை ஏற்படுத்துவதாகவே அவர்களின் வடக்கு வருகை இருக்கின்றது. கொடூர யுத்தத்திலும் இன அழிப்பிலும் பாரிய இழப்புக்களை சந்தித்த மாவட்டங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.பல்வேறு விடயங்களை உள்ளடக்கி கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உண்மையாகவே பெறுமதியான சொத்துக்களை இழந்தவர்கள் தமது இழப்பிற்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு சென்றிருப்பார்கள். ஆனால் அவ்வாறு சொத்துக்களை இழந்தவர்களிற்கு அரசினால் வழங்கப்படுவது ஒரு லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயத்தையும் இதன் ஊடாக மேற்கொண்டு அவர்கள்களிற்கான இழப்பீட்டினையும் மரண சான்றிதழையும் வழங்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கின்றார்கள். இந்த ஏமாற்று திட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

ஐக்கியநாடுகள் சபையை சமாளிப்பதற்காகவும் இலங்கை அரசை காப்பாற்றுவதற்காகவும் எங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குவதற்குமாகவே இவர்களது வருகை அமைந்துள்ளது. எங்களுடைய விலை மதிக்கத்தக்க முடியாத எமது உறவுகளிற்கு எவருமே விலை பேச முடியாது.

எங்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவும் சரணடைந்தவர்கள் ,  கையளிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை பல்வேறு தரப்பினருக்கு நாங்கள் கொடுத்துள்ளோம். அவர்களின் உண்மை நிலையை அறிவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணையையே நாங்கள் நம்பியிருக்கின்றோம்.

நாங்கள் அரசியலிற்கு செல்லவில்லை. எமது போராட்டத்திற்கும் அரசியலிற்கும் தொடர்பு இல்லை. பாதிக்கப்பட்ட தாய்மாரின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று வாய் மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் எமது தாய்மாருக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் இன்று வரை இந்த நிமிடம் வரை தட்டிக்கேட்காத பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.