பசிக்கு உண்பதற்கு உணவு இல்லை. வங்கு ரோத்து நிலையை அடைந்துள்ளது நாடு. இந்த நிலையில் அதிக நிதியை செலவு செய்து சுதந்திர தினத்தை கொண்டாடத்தான் வேண்டுமா..? என வண.ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
என்னிடம் உடையில்லை என்பதற்காக வேறொருவரின் உடையை அணிய முடியுமா? எமது நாட்டு மக்களுக்கு உணவில்லை, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை, கல்விக்கு தேவையான வளங்கள் இல்லை, உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு கூட மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. இந்த நிலையில் அதிகளவான பணத்தை செலவு செய்து சுதந்திரத் தினத்தைக் கொண்டாட வேண்டுமா?
இதற்குப் பதிலாக நாட்டுக்கு தேவையான மருந்துப் பொருள்களைக் கொண்டுவாருங்கள், மக்களுக்கு உணவளியுங்கள், மாணவர்களுக்கு மின்சாரத்தை வழங்குங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100இற்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ள அதே நேரம் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான செலவு 200 மில்லியன் ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.