ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்

“சிங்களவர் ஒருவருக்காக தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.” – சரத் வீரசேகர

சிங்கள தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கு தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குல் தொடர்பாக செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக நாடாளுமன்றில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சிங்களத் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு முஸ்லிம் பயங்கரவாதிகள் 9 பேரும் கர்ப்பிணித்தாய் ஒருவரும் தற்கொலை செய்துக்கொண்டார் என்பதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு முட்டாள்களா நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்று தான் என்னால் கேட்க முடியும்.

 

இந்த தாக்குதலுக்கு நல்லாட்சி பொறுப்பு கூற வேண்டும் என்ற உறுதியில்தான் அன்றும் இன்றும் இருக்கின்றோம்.

 

இந்த தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி சிறையில் சிரித்துக்கொண்டு இருப்பார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கும் – ஜே.வி.பிக்கும் தொடர்பு உள்ளது.” – நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ!

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறோமே தவிர சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

 

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார். அவ்வாறாயின் இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்துக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

“தமிழர்களுடனான உள்நாட்டு யுத்தகாலத்திலும் , நாட்டுக்கு ஆபத்து வரும் போதும் முஸ்லீம் சமூகம் கவசமாக நின்று இந்த நாட்டை பாதுகாத்துள்ளது.” – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

“தமிழர்களுடனான உள்நாட்டு யுத்தகாலத்திலும் , நாட்டுக்கு ஆபத்து வரும் போதும் முஸ்லீம் சமூகம் கவசமாக நின்று இந்த நாட்டை பாதுகாத்துள்ளது.” என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஒளிபரப்பிய நேர்காணல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையில், “இஸ்லாமிய மத சிந்தனையின்படி” தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற அறிக்கையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் மேலும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது அமைதியான இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாக கொண்டு அல்ல மாறாக தீவிரவாத சித்தாந்தக் குழுக்களால் சிதைக்கப்பட்ட மதச் சிந்தனைகள் மூலம்தான் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

 

இஸ்லாத்தில் தற்கொலை தாக்குதல் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இஸ்லாம் இவ்வாறான செயல்களை நேரடியாகவே எதிர்க்கிறது என்பதை நான் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு வலியுறுத்துகிறேன்.

 

போலியான ஒப்பந்தச் சித்தாந்தத்தை கொண்ட தீவிரவாதி ஸஹ்ரான் உட்பட அவரின் குழு என்று சொல்லப்படுபவர்கள் உலகளாவிய புவிசார் அரசியல் சதிக்கு ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்க முடிகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது.

மேலும், ஷங்ரிலாவில் மட்டும் ஏன் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன? தாஜ் மீதான தற்கொலை குண்டுவெடிப்பு ஏன் மாற்றப்பட்டு தெஹிவளைக்கு கொண்டு செல்லப்பட்டது? அபு ஹிந்த் என்பவர் யார்? சாரா தப்பிக்க உதவிய ஒரு காவல்துறை அதிகாரி ஏன் கைது செய்யப்பட்டார்? இப்படிப் பல கேள்விகளுக்கு முஸ்லிம் சமூகம் பதில் தேடுவதுடன் இதுபற்றி சிந்தித்துப் பதில் தேடும் அளவுக்கு முஸ்லிம் சமூகம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சனல் 4 போன்ற இஸ்லாமிய விரோத ஊடகங்களின் பின்னால் நாம் சென்றிருக்க மாட்டோம் போலியான கடும்போக்கு மார்க்க சிந்தனைக்கு உட்பட்ட ஸஹ்ரான் போன்றவர்கள் பூகோள அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அதிலிருந்து முஸ்லிங்கள் கற்க வேண்டிய பாடம் என்னவென்றால் எதிர்கால சந்ததிகளை இவ்வாறான போலியான கடும்போக்கு சிந்தனைகளிலிருந்து பாதுகாப்பது தான்.

 

அத்தோடு பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தின் கொள்கைகள் பற்றி ஏனைய இன சகோதர்களுக்கு விளக்கவேண்டியது அவசியமாகிறது.

சுதந்திர போராட்டத்திலும் சரி, உள்நாட்டு யுத்தகாலத்திலும் சரி நாட்டுக்கு ஆபத்து வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாட்டை பாதுகாக்கும் பணியில் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் கவசமாக நின்று பாதுகாத்திருக்கிறது.

 

இனியும் அப்படி பாதுகாக்க முன்நிற்கும் என்பதில் ஐயமில்லை ஸஹ்ரான் போன்றவர்களின் சதிவலையில் முஸ்லிம் சமூகத்தை வீழ்த்தி சர்வதேச நிகழ்ச்சிநிரல்களில் இலங்கை முஸ்லிங்களை அகப்படுத்த முடியாது. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக வாழ்பவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை நடாத்தியதன் பின்னணில் சிங்கள அரசியல்வாதிகள்.” – சந்திரிகா குமாரதுங்க பகீர் !

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை  இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை  பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்,என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம்,  வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

“இராணுவத்தை காட்டிக்கொடுத்து விட்டு ராஜபக்சக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் அங்கத்தவர்களை பாதுகாத்தனர்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் பெறும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.அரசியல் அழுத்தத்துடனான விசாரணை கட்டமைப்பு காணப்படும் வரை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை நோக்கம் வெளிவராது. காலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், 43 ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43 ஆவது படையணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பிரதான தேர்தல் பிரசாரமாக்கி ராஜபக்ஷர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதம், கருத்தடை உள்ளிட்ட பல விடயங்கள் பொதுஜன பெரமுனவின் மேடை பேச்சுகளாக காணப்பட்டன.தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டு மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள்,கத்தோலிக்கர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய பாதுகாவலனாக தெரிவு செய்தார்கள்.

இறுதியில் ஏமாற்றமடைந்தார்கள்.ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் அரசியல் நோக்கத்துக்காக இடம்பெற்றதா..? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

1.யங்கரவாதி சஹ்ரான் உட்பட அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் உயிரை ஏன் தியாகம் செய்தார்கள்.

பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிராக தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இல்லாவிடின் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக தாக்குதல் இடம்பெற்றது.

21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் கருத்து வெளியிட்ட சஹ்ரானின் தரப்பினர் நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பலிவாங்குவதற்காகவே தேவஸ்தானங்களில் தாக்குதலை நடத்தினோம் என குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2.பயங்கரவாதி சஹ்ரான் யார்? குண்டுத்தாக்குதல் ஒரு குழுவின் நோக்கமா அல்லது சர்வதேச நோக்கமா?

2010 ஆம் ஆண்டு பூனே வெதுப்பக வெடிப்பு சம்பவம்,2016 ஆம் ஆண்டு டாகா கெபே தாக்குதல் ஆகியவற்றுக்கும் 2019 ஏப்ரல் 21 சங்ரில்லா ஹோட்டல் குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் இடையில் நெருங்கி தொடர்பு காணப்படுகிறது.வலய மட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் இலங்கையில் தேசிய பாதுகாப்பு பிரிவினர் அவதானம் செலுத்தவில்லையா? தென்னிந்தியாவில் இருந்து செயற்பட்ட அபுஹிந்த் மௌலவி யார்?அடிப்படைவாத பிரசாரகரா?இல்லாவிடின் அடிப்படைவாத தரப்பினரது ஆதரவாளரா ?

பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத்தாக்குதலை வெளிநாட்டு புலனாய்வு பிரிவு எவ்வாறு முன்கூட்டியே அறிந்துக் கொண்டது ? இறந்து விட்டதாக குறிப்பிடப்படும் சாராவுக்கும்,அபுஹிந்த் மௌலவிக்கும் இடையிலான தொடர்பு என்ன?

3.இலங்கை புலனாய்வு பிரிவு தகவல் அறிந்தும் ஏன் செயற்படவில்லை?

புலனாய்வு பிரிவுக்கும், பொது பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாடற்ற தன்மை (பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் (ஏப்ரல் 22 )இடம்பெற்ற திறந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

அரசாங்கம் குறிப்பாக இராணுவ புலனாய்வு பிரிவு தௌஹீத் ஜமாதே அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் அவர்களால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை காணப்பட்டது.புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பற்ற தன்மையினால் பயங்கரவாதி சஹ்ரான் தனது நோக்கத்தை சரியாக செயற்படுத்திக் கொண்டான்.

4.ராஜபக்ஷர்கள் செயற்படுத்திய முட்டாள்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

பிரபாகரனுக்கு பின்னர் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதன்,கிழக்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் ராம்,நகுலன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமல் 12000 போராளிகளுடன் அவர்களையும் விடுதலை செய்தமை.

மறுபுறம் பிள்ளையானை ராஜபக்ஷர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக இணைத்துக் கொண்டமை,  யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கி கணக்கு,கப்பல்,தங்க ஆபரணங்கள்,உள்ளிட்ட சொத்துக்களுக்கு நேர்ந்ததை பத்மநாதனும் குறிப்பிடவில்லை,அரசாங்கமும் குறிப்பிடவில்லை.அரசாங்கம் டீல் அரசியல் செய்யாமல் முறையான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர போராடிய படையினர் யுத்த குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தரப்பினர்கள் ராஜபக்ஷர்களினால் பாதுகாக்கப்பட்டார்கள். ராஜபக்ஷர்களின் முட்டாள்தனமாக பாதுகாப்பு கொள்கை தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது.

நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும் இந்த நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை. அரசியல் அழுத்தம் பாதுகாப்பு கட்டமைப்பை ஆதிக்கம் செலுத்தும் வரை ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடையாது.காலமே சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.