எரிவாயு சிலிண்டர்

எரிவாயு சிலிண்டர்

“இலங்கையில் எந்த எரிவாயு சிலிண்டரும் வெடிக்கவில்லை.” – திஸ்ஸ குட்டியாராச்சி

அண்மையில் நாடாளுமன்ற அமர்வின் போது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பல இடங்களை பட்டியலிட்டு கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த சம்பவங்கள் அசாதாரணமானது என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நாட்டில் இதுவரை எந்தவொரு எரிவாயு சிலிண்டர்களும் வெடிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எரிவாயு அடுப்பைத் தவிர வேறு எரிவாயு  சிலிண்டர்கள் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், எரிவாயு கலவையில் பிரச்சனை இல்லை. ஆனால் எரிவாயு அடுப்பில்தான் பிரச்சினை இருக்கின்றது.

ஆகவே, எரிவாயு சிலிண்டர்களில் கவனம் செலுத்துவது போன்று எரிவாயு அடுப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடித்துச்சிதறிய எரிவாயு சிலிண்டர் – 19 வயதுடைய பெண் பலி !

பொலன்னறுவை வெலிகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13ஆம் திகதி குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது வீட்டில் வேறு எவரும் இல்லாத நிலையில் அயலவர்கள் அவரை உடனடியாக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய அதிகாரிகள் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.