எம்.எ.சுமந்திரன்

எம்.எ.சுமந்திரன்

“போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.” – எம்.ஏ.சுமந்திரன்

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் பாவனை தற்போது தலைவிரித்தாடுகின்றது. இதன் காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். 140 பேர் வரையிலானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த காலத்தில் வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் நாம் ஒரு வேலை திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

கொரோனாப் பெருந்தொற்று காரணமாக அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனாலும் தற்போது போதைப்பொருள் பாவனை என்பது தலைக்கு மேலே சென்று விட்டது. இதன் காரணமாக மீண்டும் அந்த வேலை திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் மூன்று விதமாக மேற்கொள்ளவுள்ளோம்.

முதலாவது – இளையவர்களுக்கு புத்திமதி வழங்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வினை பாடசாலை மட்டத்தில் நடாத்தல், இரண்டாவது – போதைப்பொருள் பாவனையில் சிக்கி உள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பான விடயங்களை மேற்கொள்ளல், மூன்றாவது – போதைப்பொருள் பாவனையை தடுக்கவேண்டும். இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது. அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

“ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.”- ஹட்டனில் எம்.ஏ.சுமந்திரன் !

“மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் இன்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு,

“இந்த எதிர்ப்பு போராட்டத்திலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து போராட்டத்திலும் பங்கேற்பதற்காகவே நாம் மலையகம் வந்துள்ளோம்.

நாட்டில் ஒருவரும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்கச்சென்றாலும் ´இல்லை´ என்ற பதிலே வழங்கப்படுகின்றது. அப்படியே பொருட்கள் இருந்தாலும் அவற்றின் விலை அதிகம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட எகிறியுள்ளன. நாட்டிலே பிரயாணம் செய்ய முடியவில்லை. வீட்டிலே சமைக்க முடியவில்லை.

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர். நாட்டு மக்களும் விழுந்துள்ளனர். இப்படியான ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இருக்கக்கூடாது. மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார் சுமந்திரன்.

“இலங்கை தமிழர் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை– கருத்தை நாம் வரவேற்கின்றோம்.” எம்.ஏ.சுமந்திரன் 

“இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் எந்த விதத்திலும் போதாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில் பல நாடுகள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோல் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என இம்மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் போதும் என இந்தியா ஏற்கவில்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அந்நாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவம் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” – என்றார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் – சுமந்திரன் அறிவிப்பு !

இழுவை மடி சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறும் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கடற்தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் கடற் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி – சுப்பர்மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடைவித்திருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்றைய தினம் வடமராட்சி – சுப்பரமடம் பகுதியில் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்த கடற் தொழிலாளர்கள், உயிரிழந்த மீனவர்களுக்கும் அஞ்சலியும் செலுத்தினர்.

மேலும், நூற்றுக்கணக்கான கடற் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய சுமந்திரன். கடற் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்

“மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் தான் .” – விவாதத்திற்கு நான் தயார் என்கிறார் எச்.எம்.எம் ஹரீஸ் !

மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (3) மாலை சமகால அரசியல் தொடர்பில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

தற்போது தமிழ் பேசும் கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் அது தொடர்பில் கையாளப்படும் ஆவணங்கள் கூட எமக்கு காண்பிக்கப்படவில்லை.இவ்வாறு தான் 1987 ஆண்டு கூட இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லீம் தரப்பிற்கு சரியாக காட்டப்படாது அவ்வொப்பந்தம் செய்யப்பட்டது.

13வது சீர்திருத்த சட்ட மூலத்தை தலைவர் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லீம்களும் முழுமைகாக எதிர்த்த ஒரு சட்ட மூலமாகும்தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட பார்வைக்காக வழங்கப்படவில்லை. இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே இது தொடர்பாக வீண் சந்தேகங்கள் எழுந்துள்ளன.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும். இது தொடர்பில் நான் மக்களுக்கு உண்மையை சொல்ல தான் தயங்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

“எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம்”  – இந்திய வெளிவிவகார அமைச்சர் வருகை தொடர்பாக பாராளுமன்றில் சுமந்திரன் !

“இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தது போல ஜனாதிபதி செயற்பட்டால் எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம்”  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் முன்வைத்துள்ள கருத்தொன்றை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் தமது ஒத்துழைப்புகள் நீண்டகாலமாக காணப்பட்டுகின்றது.

அதேபோல் இலங்கையின் அரசியல் தளத்தில் இன ரீதியிலான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்க்கின்றோம் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதில் அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

அதேபோல் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரதும் நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதியும் வாக்குறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால் அதற்காக எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.