ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவருமான கலாநிதி திஸ்ஸ விதாரணவினால் கொண்டுவரப்பட்ட அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
ஈஸ்டர் தாக்குதல் நடத்த சில தினங்களுக்கு முன்னர் வனாதவில் பகுதியில் இரண்டு காவல்த்துறை அதிகாரிகள் கொலைசெய்யப்பட்ட வேளையில் அவர்களை கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த வேளையில் அதனை விடுதலை புலிகளின் மேல் சுமத்தினர்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமான 42 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன, தேசிய பாதுகாப்பு நெருக்கடி, பிணைமுறி ஊழல் என்பவற்றை கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்திய வங்கி ஊழல் வாதிகளையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளையோ பிடிக்க முடியவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை.பொதுமக்கள் அரசதலைவரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள் உறுதியான பதில் கூறவில்லை.
ஷாரா என்ற பெண் எங்கே? என நாமும் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அவரது மரபணுவை பெற்றுக்கொண்டு அவர் இறந்துவிட்டார் என நிருப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவிற்கு தப்பிசெல்ல விட்டீர்களா என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும்.
ஏன் அரசாங்கம் இவற்றை மூடி மறைக்கின்றது. அதுமட்டுமல்ல சஹாரானின் மனைவின் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை ஏன் வெளிப்படுத்தவில்லை. அவரது வீட்டிற்கு வந்த புலனாய்வு அதிகாரி யார்?
உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் சகலரும் அச்சமடைகின்றனர். தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளை தீர்க்க ஆட்சிக்கு வந்தவர்கள் உண்மையில் என்ன நடந்தது என கூறுங்கள் என்றார்.
இது குறித்து கேள்வி எழுப்பும் வேளையில் எம்மை அடக்காது உண்மை என்ன என்பதை கூற வேண்டும் என்று மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.