ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதல்

ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இலங்கையில் இருந்தால் பிள்ளையான் அதனை வெளிப்படுதல் வேண்டும் – நாடாளுமன்றத்தில் ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் !

ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரி யாராக இருந்தாலும் அவர் கண்டறியப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எங்களால் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் இறைவனின் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

 

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஐ.எஸ். பயிற்சி பெற்றவர்கள் நாட்டில் இருப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் அன்று தெரிவித்தபோது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியதால் பாரியதொரு அழிவு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தற்போதும் நாட்டில் ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார்.

 

சந்திரகாந்தன் இந்த அரசாங்கத்தில் இருப்பவர். அப்படியானால் இது தொடர்பில் அவர் வெளிப்படுத்தி, அப்படியானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொல்லத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொள்ளத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கமே உள்ளது என வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்கள் என்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.  இது ஒரு ஆச்சரியமான விடயமும் அல்ல. சனல் 4 காணொளியில் உள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலின்போது இடம்பெற்ற உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

எவ்வாறாயினும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை வெற்றி கொள்வதற்கும் இராணுவத்தை பயன்படுத்தி இவர்கள் எந்தவொரு உச்சக்கட்டத்துக்கும் செல்வார்கள்.  தமது மக்களையும் இழப்பதற்கு தயார் என்பதை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள முயற்சித்தால் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த உண்மைகள் அனைத்தையும் சிங்கள மக்கள் விளங்கிக்கொள்வார்கள் என நான் நினைக்கிறேன்.

மேலும் நாட்டின் உள்ளக விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மற்றும் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.  பாராளுமன்றத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே பெரும்பான்மை காணப்படுகிறது.

இந்த பெரும்பான்மை, அரசாங்க தரப்பினரையே இன்று சனல் 4 நிறுவனம் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியுள்ளது.  தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ தரப்பினரே உள்ளனர் என்பதை இந்த காணொளி மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது வேடிக்கையானது.

அதாவது குற்றவாளி ஒருவர் தன்னுடைய குற்றத்தையே தானே விசாரிப்பது போன்றது. இது போன்ற முட்டாள்தனமான விடயத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

“முஸ்லிம் சமூகத்தைக் கருவறுக்வே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.” – நாடாளுமன்றத்தில் ரிஷாட் !

ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில்தான் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, செனல்-4 தொலைக்காட்சி சாட்சியங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

செனல்-4 அதிர்வலைகள் குறித்து பாராளுமன்றத்தில் (05) உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

 

“மதங்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி ஆட்சியைப் பிடிக்கவும் மற்றும் அதிகாரத்தில் நிலைக்கவும் முயன்ற தீயசக்திகளை மக்கள் புறந்தள்ளியுள்ளனர். இவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அடையாளங்காட்டுவது அவசியம். புலனாய்வுப் பிரிவினரால் இக்குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். எனவே, சர்வதேச விசாரணைகளூடாகவே ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

 

முஸ்லிம் சமூகத்தைக் கருவறுத்து, அப்பாவிகளைச் சிறையிலடைத்து மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படவும் இந்தத் தாக்குதலையே இனவாதிகள் பயன்படுத்தினர். ஈஸ்டர் தாக்குதலை இயக்கிய சக்திகள் முஸ்லிம்களின் தலையில் பாரத்தையும் குற்றத்தையும் சுமத்தித் தப்பிக்கப் பார்த்தனர். ஆனால், சனல்-4 சகல விடயங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

 

இந்தத் தாக்குதலால் முஸ்லிம் சமூகமே ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கப்பட்டது. என்னைச் சிறையிலடைத்தனர், எனது சகோதரரை சிறையிலடைத்து வழக்குத் தொடுத்தனர். ரியாஜ் பதியுதீன் மீது எவ்வித குற்றமும் இல்லையென நிரூபிக்கப்பட்டும் அவருக்கு எதிரான வழக்கு இன்னும் வாபஸ் பெறப்படவில்லை.

 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரியாஜ் பதியுதீன் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் உள்ளிட்ட முஸ்லிம்களின் முன்னோடிகளையும், பிரபலங்களையும் சிறையிலடைத்து சீரழித்தனர். ஜாமிய்யா நளீமிய்யா மாணவன் அஹ்னாப் என்பவர் கவிதை எழுதியமைக்காக மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இறுதியில், சர்வதேச பயங்கரவாதியென்ற முத்திரையும் அம்மாணவனுக்குச் சுமத்தப்பட்டது. குருநாகல் முதல் மினுவாங்கொடை வரையிலான முஸ்லிம்களின் சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் சூறைாயடப்பட்டன. பௌசுல் அமீர் என்ற வர்த்தகர் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் முன்னால் அசிற் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் செய்து, இனவாதத்தை கொளுந்துவிட்டெரியச் செய்தது யார்? ஆட்சி, அதிகாரத்தைப் பிடிப்பதற்காக ஈஸ்டர் தாக்குதலைச் செய்வித்த சக்திகளே!

 

எனவே, இன்றும் மறைமுகமாக அதிகாரத்திலுள்ள இவர்களை புலனாய்வுத்துறையினரால் விசாரணை செய்ய முடியாது. சர்வதேச விசாரணைகளூடாகவே இவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்” என்றார்.

“என்னை ஜனாதிபதியாக்குவதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது அருவருப்பானது.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி!

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நேற்று அதிகாலை வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்தக் காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உரிய தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு நானே உத்தரவிட்டேன்.

2005 இலிருந்து ராஜபக்சர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதே சனல் 4 காணொளி.

ராஜபக்சர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இவையும் பொய்கள் ஆகும். என்னை ஜனாதிபதியாக அமர்த்துவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு கொடிய குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது முற்றிலும் அருவருப்பானது.

 

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், நான் பொதுப் பதவியில் இருந்த போதெல்லாம் ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையிலலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ நீதியை எதிர்பார்க்க முடியாது என கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் பலமுறை அளிக்கப்பட்டாலும், அது ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, தெஹிவளையில் தன்னைத் தானே வெடிக்கச் செய்த தற்கொலைக் குண்டுதாரி ஏன் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பதைத் தீர்மானிக்க புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை தேவை. , இந்தோனேசியாவில் ISIS ஐ அழைத்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பேற்குமாறு கோரிய ‘ஜோனிக் ஜோனிக்’ யார் என்பதைத் தீர்மானிக்க, அவர் ஏன் கைது செய்யப்படவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய எங்களுக்கு ஒரு புதிய விசாரணை தேவை, “என்றார்.

“தற்போதைய ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது என தோன்றுகிறது,”

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை மேற்கோள்காட்டி, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸின் பூரண ஆசீர்வாதம் இருப்பதாக அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன் உதய்க்வே தெரிவித்தார். .

கத்தோலிக்க திருச்சபை பௌத்த துறவிகள் மற்றும் பிற மதகுருமார்களை அவமதிப்பதில் நம்பிக்கை இல்லை என்றும், அவர்களை அவமதிக்கும் நபர்களுடன் பழகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதகுருமார்களை, குறிப்பாக பௌத்த பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் பிக்குகளை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்துவதற்கு கத்தோலிக்கர்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் இதுபோன்ற பிரசாரங்களுக்கு தேவாலயம் பின்னால் இல்லை என நான் கூற விரும்புகிறேன், ”என்றார்.

“பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்கமாட்டோம், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுடன்
பழகமாட்டோம். இலங்கையின் கலாசாரம் பௌத்தத்துடன் தொடர்புடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“உண்டியல் குலுக்கி பணம் சேர்க்கிறார் மைத்திரிபால .” நாடாளுமன்றத்தில் பொன்சேகா – மைத்திரிபால இடையே பெரும் விவாதம் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும். உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் இது போன்றவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்தார் .

 

அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெடிகுண்டுத் தாக்குதலில் இருந்து இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத ஒருவருக்கு தம்மைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க உரிமை இல்லை என்று கூறினார்.

 

 

நட்டஈடு வழங்குவதற்கு உதவியாக பணம் சேகரிக்கப்படுமாயின், அவ்வாறான வசூலை ஏற்றுக் கொள்வதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் .

 

பொன்சேகா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டதற்கு தாம் தான் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு சிறிசேன மேலும் நினைவூட்டினார்.

“அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.” – மைத்திரிபால சிறிசேன

“அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.”  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பேசப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஜனாதிபதியின் காலத்திலும் நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அன்று உயிரிழந்தார்கள். ஆனால், நாம் அன்று நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளை குற்றஞ்சாட்டவில்லை. எனினும், இன்று அனைத்துத் தரப்பினரும் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து என்னை சிறைக்குள் தள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.

2015, 2016, 2017 காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறான நிலைமை எமது நாட்டுக்குள் வர, ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என 2015 இலிருந்து, நான் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களின்போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன்.

உரிய ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். பாதுகாப்புச் சபையானது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். யுத்தம் முடிவடைந்து இரண்டு – மூன்று வருடங்களிலேயே இது கலைக்கப்பட்ட நிலையில், நான் ஒரு சம்பிரதாயப்பூர்வமாகத் தான் இதனை தொடர்ச்சியாக கூட்டிவந்திருந்தேன்.

2010 – 2015 வரையான காலப்பகுதியில்கூட தேவைக்கேற்ப தான் பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டது. ஆனால் நான் தான் மாதத்திற்கு ஒருதடவை இதனைக் கூட்டினேன். 2019, ஏப்ரல் 9ஆம் திகதிகூட, பாதுகாப்புச்சபை கூட்டப்பட்டபோது குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதானி, பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வருகைத் தந்திருந்தார்கள்.

இதன்போது எந்தவொரு அதிகாரியும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும் என்று கிடைத்த புலனாய்வுத் தகவல் குறித்து எனக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால், நான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரியொருவரால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால்தான், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் உள்ளது.

இது நஷ்ட ஈடே ஒழிய, அபராதம் கிடையாது. ஆனால், இந்த நஷ்டஈட்டை வழங்கும் அளவிற்கு என்னிடம் சொத்துக்கள் கிடையாது. எனினும், எனக்கு நெருக்கமானவர்களிடம் இந்தத் தொகையை பெற்று அந்த நஷ்டஈட்டை வழங்க தீர்மானித்துள்ளேன்.

இந்த வழக்கின் தீர்ப்பானது நாட்டில் எதிர்க்காலத்தில் வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்திலும் தாக்கம் செலுத்தும். அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைத்தால்கூட, அவர்கள் இன்று எனது நிலைமைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் – ஐவர் பிணையில் விடுதலை ! 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்களை தொடர்ந்து மே 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் 4 வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்குகளை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஏனைய 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட 9 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இதில் 5 பேரை தலா ஒருவருக்கு 50 இலச்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், மாதாந்தம் 2 ஆம் மற்றும் 3 ஆம் கிழமைகளில் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொழுத்து இடுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.

இதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தி – சஜித் பிரேமதாச வழங்கியுள்ள உறுதி !

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக அனைவரையும் தண்டிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

“3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத் தாக்குதலில் நாம் எமது உறவுகளை இழந்தோம். இந்த பயங்கரவாத் தாக்குதலால் நாடு என்ற ரீதியில் நாம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டோம்.

இந்த நேரத்தில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் பாரபட்சம் பாராது சட்டநடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்களுக்கு உச்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் பேராயருக்கு நாம் எழுத்துமூலமாக இவ்வேளையில் அறியத்தருகிறேன்.

இன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்கள், பேராயர் மற்றும் எதிர்க்கட்சியாக எமக்கு என அனைவருக்கும் சந்தேகம் இருந்துக்கொண்டேதான் உள்ளது.

இதுதொடர்பான உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் பொது மக்களுக்கு காண்பிக்கவில்லை. இதனை நாடாளுமன்ற இணையத்தில் வெளியிடவேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சூழ்ச்சியொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார். இதனை கண்டுபிடிக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். உண்மைகள் வெளிவர வேண்டும். உண்மைகளை பேச வேண்டும்.

எனது தந்தையும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றில்தான் கொல்லப்பட்டார். அன்று எனக்கு இருந்த மனநிலை, இன்றும் என்னுள் இருக்கிறது. இதனால், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

எனவே, இவர்களை கருத்திற்கொண்டு தகவல்களை மறைத்துக்கொண்டிருக்காமல், வெளிப்படையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுதொடர்பாக புதிய விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டும். இதில் கொழும்பு பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை உள்வாங்க வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் யாரையும் பாதுகாக்கவே, காப்பாற்றவோ முற்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“சஹ்ரான் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.?” – ரணில் கேள்வி !

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என்பது ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் சஹ்ரானின் மனைவி விசாரிக்கப்பட்டதாகவும், தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்ததாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். தான் ஆதாரங்களின் பதிவுகளை ஆய்வு செய்ததாகவும் அவருடைய கணவர் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்தது பற்றி எந்த ஆவணங்களும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவுகளுடன் அல்லது பாதுகாப்புப் படையினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இதே நேரம் சஹ்ரான் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது , “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும். சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.

இவற்றை சபையில் இருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும். தாக்குதல் இடம்பெற்ற உடனனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளை கைது செய்தார்கள். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.