ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்

மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்கியதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும். – ஈஸ்டர்படுகொலை நூல் வெளியீட்டு விழாவில் பிள்ளையான் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை அவர் வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை என பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

Thinakkural.lk

மட்க்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (23) அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களை தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன்.

ஒரு சாதாரண மனிதனைப்போல  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுகின்றார். இந்த குண்டு வெடிப்பு இடம்பெறுகின்ற போது அவர் நாட்டின் தலைவராக இருந்தார். தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே.

ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார். எனவே ஒருவேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டுவந்துள்ளோம்  என்பதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும்.

ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார். எதற்கு?  யாருக்கு ?  அச்சப்படுகின்றார். அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்பிற்கு அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு  உண்டு ஆகவே அவர் ஒரு துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

“என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.” – செனல் 4 ஆவணப்படத்திற்கு தகவல் வழங்கிய அசாத் மௌலானா மீது பெண் ஒருவர் வழக்குத்தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் தகவலாளரான அசாத் மௌலானாவுக்கு எதிராக பெண் ஒருவரால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் அவர் தம்மை திருமணம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்து குறித்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது ஏன்..? – அனுரகுமார திஸாநாயக்க கேள்வி !

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை அவசியம் என கோருபவர்களும், அதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களும் தற்போதைய அரசாங்கத்திலேயே அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செனல் 4 வெளிப்படுத்தலுக்கமைய, பிள்ளையானும், ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளும் ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே சிறைச்சாலையில் இருந்துள்ளனர்.

பிள்ளையான் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூலம் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டிய பகுதிகள் உண்டு என்பது புலப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு நீண்டகாலமாக 35 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகை எதற்காக வழங்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவே, இந்த தாக்குதல்கள் குறித்து சுயாதீனமாக விசாரணையொன்று அவசியமாகின்றது. அத்துடன், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இத்தகைய சதிகளை மேற்கொண்டு, இனவாதத்தை தூண்டிவிடுபவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாரா ளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படம் – விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அதேவேளை,பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எவ்வாறாயினும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மேற்கோள் காட்டி தொடர்ச்சியாக அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை கத்தோலிக்க திருச்சபை, பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் விமர்சித்துவருகின்றன.

கடந்த 2021 மே மாதம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பேசிய முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு பெரிய சதித்திட்டத்திற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, பல தரப்பினரும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்த அதேநேரம் அவர் இந்த ஆண்டு ஏப்ரலில் வாக்குமூலம் பதிவு செய்ய பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அரசியல் தலைவர்கள் கூறுவதற்கெல்லாம் ஆமென் சொல்ல முடியாது.” – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கை ஒரு கேலிக்கூத்து போன்றது எனவும் அவர் விமர்சித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனேமுல்ல பொல்லாத்த தேவாலய பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

மதத் தலைவர்கள் அனைத்த சந்தர்ப்பங்களிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்றும் மதத் தலைவர்கள் சுயாதீனத் தன்மையை அரசியல் நன்மைக்காக பயன்படுத்தினால் வெட்கப்பட வேண்டும் .  அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது.

இன்று மக்கள் நிர்க்கதியாகியுள்ளமைக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மதத் தலைவர்களும் காரணம். இந்த நாடு மத நாடொன்றாகும்.

இதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் குறித்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை .  அத்தோடு, தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களை இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பில் உயர்கல்வி நிலையம் அமைக்க போலியான தகவல்களை வழங்கிய முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா !

கிழக்கில் உள்ள சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு, 25 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள போலி ஆவணங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமர்ப்பித்துள்ளதாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13.11.2020) தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் இலங்கையின் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு அதிகாரிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்.

Batticalao Private Campus Issue

அதன்படி ஹிஸ்புல்லா, அவர் நிறுவிய ஹிரா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் நிலத்திற்கு விண்ணப்பித்ததாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி தொடர்பான பணிப்பாளர் அசங்க உதயகுமார தெரிவித்தார்.

அத்தோடு ஹிரா அறக்கட்டளை சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு தவறான ஆவணத்தை ஹிஸ்புல்லா பயன்படுத்தியதாக சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி தம்மிக்க வசலபண்டார தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் உயர்கல்வி மையம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குமாறு 2012 மார்ச் 15 அன்று ஹிஸ்புல்லா அப்போதைய அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.