இலங்கை ஆசிரியர்கள்

இலங்கை ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் முறையற்ற போராட்ட செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் – எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

ஆசிரியர் தொழிலில் பிரவேசிக்கும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியை பேண முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துமாறு சகலரையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இந்த முறையற்ற செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான இணைய முறைமை தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாக தெரிவித்த ஜனாதிபதி, பதவி உயர்வு அல்லது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவருக்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் வெற்றிடங்களுக்கு 60 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் 1706 பட்டதாரிகள் மற்றும் 453 ஆங்கில டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளாகவும் தொடரும் ஆசிரியர் போராட்டம் – பாதிக்கப்படும் மாணவர்கள் கல்வி !

தொழிற்சங்க நடவடிக்கையில் இன்றும் ஈடுபடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

குறித்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, சுகவீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(26) பகல் கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

தமது போராட்டம் மீதான நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை, இந்த ஆசிரியர் போராட்டத்தினால் நாட்டில் நேற்றையதினம் மொத்தமாக 10,026 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இன்றையதினமும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்று (27) வழமை போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“பயிர்களை மேயும் ஆசிரியர்கள் என்ற வேலிகள் ” – பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த பாடசாலை ஆசிரியர் !

மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை – மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாணவியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 28 ம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது தந்தை இது குறித்து விசாரித்துள்ளார்.

மாணவி பல்லகஸ்வெவ சந்தியில் மகிழுந்து ஒன்றில் ஏறிச் செல்வதைக் சிலர் கண்டதாக தந்தைக்கு கூறியுள்ளனர்.

இந்தநிலையில், மாணவியைத் தேடி பெற்றோர் பல்லகஸ்வெவ சந்திக்கு சென்றபோது, ​​அவர் வீடு திரும்பியுள்ளார்.

பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர் ஒருவர் தன்னை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது போன்ற பல முறைப்பாடுகள் அடுத்தடுத்து இலங்கையின் பல பகுதிகளிலும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்கி கொடுத்து அந்த மாணவர்களூடாக சக வகுப்பு மாணவிகளூ வன்புணர்வுக்கு உட்படுத்தி காணொளியாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் 05.03.2023 அன்று  கைது செய்யப்பட்டிருந்தார்.

இது போல் இந்த வருடம் ஜனவரி மாதம் ஹொரவபொத்தானை பகுதியில் 10 வயதான சிறுமியை பலவந்தப்படுத்தி தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமும் நினைவில் கொள்ளத்தக்கது.

இதே போல பத்து வயது  மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்து பாடசாலை ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 46 வயதான ஆசிரியரே கைது செசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கான இறுக்கமான தண்டனைகள் எதுவும் இல்லாமை தான் ஆசிரியர்கள் சுதந்திமாக இந்த பாலியல் சேட்டைகளில் ஈடுபட முக்கியமான காரணமாகும். கடந்த 2016ல் யாழ்ப்பாணம் பெரிய புலம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளின் போது அதிபர் கூட கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அதன் பின்பு அந்த வழக்கு என்ன ஆனது..? என்ற பேச்சே இல்லாமல் போய்விட்டது.

இது போல ஆசிரியர்களின் மாணவிகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான பல செய்திகள் உடனடியாக வெளிவந்தாலும் கூட குறித்த ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் எத்தகையதாக உள்ளது என அறியவே முடிவதில்லை.

இப்படியாக அரச அதிகாரிகள் என்ற பெயரில் ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி ஆசிரியர் சங்கம் போராடுவதாக இதுவரை தெரியவில்லை. இந்த ஆசிரியர்கள் தான் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்க போகிறார்கள் என பெற்றோர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிரான இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படும் வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.